பொட்டலம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பெரிதும் வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக, ஆங்கிலச் சொல்லான பார்சல் என்பது தமிழ்நாட்டில் சென்னை முதலிய இடங்களில் வழங்குகிறது. மலேசிய சிங்கப்பூர் முதலிய இடங்களில் "கட்டுதல்", பேக் - பேக்கட், தா-பாவ் ( சீனமொழி), புங்கூஸ் ( மலாய்) முதலியவை வழங்குகின்றன. இது கடையில் சாப்பிடும் பொருட்கள் வாங்கிக் கட்டிக் கொண்டுவரும் போது மக்கள் வழங்குபவை.
பொட்டுதல் என்ற தமிழ்ச்சொல் சேர்ந்திருந்த பொருள் பிரிவு படுவதைக் குறிக்கிறது. பார்சல் என்ற சொல்லும் ஒரு பகுதியாகத் தரப்படுவதையே குறிப்பதாக அறிவுறுத்துவர். பார்சல் என்ற பொட்டல அஞ்சல் செய்தலை நாம் ஒன்றாகக் கட்டி ஒட்டிக் கொண்டுபோய் அஞ்சலகத்தில் கொடுத்தாலும், அவர்கள் அதை ஏற்கத் தக்க அளவிலான துண்டுக் கட்டுகளாக நம்மிடமிருந்து பெற்று அப்பால் அனுப்புவதையே மையக் கருத்தாகக் கொண்டு, " பகுதிக்கட்டு" என்ற பொருளில்தான் பெற்றுக்கொண்டு அப்பால் சேரவேண்டியவருக்கு அனுப்புகிறார்கள். அனுப்புகிறவர் கட்டுதலை நினைக்க, ஏற்று அப்பால் பெறுவோர்பால் கடத்துகிறவர்களான அஞ்சலகத்தார் பொட்டுதலுக்காகவே ( பிரித்துக் கட்டியதற்காகவே) மகிழ்வுடன் பெற்று அனுப்புகிறார்கள் என்பதை உணர, மாறுபாட்டினால் வரும் ஏற்பாகவே இது படுகின்றது. அஞ்சல்காரர் ஏற்கமுடியாத அளவுக்குப் பெரியனவானவற்றை நம் சொந்த ஏற்பாட்டில்தான் பெறுவோருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுதான் இதற்குக் காரணமாகும். அதாவது மிக்கப் பளுவானவற்றைச் சொந்தப் பளுவுந்துகளில்தாம் அனுப்பவேண்டும். ஆகவே பிரித்து அனுப்புதல் என்பதே பார்சல் என்பதன் பொருள்.
"பார்ட் அண்ட் பார்சல்" ( part and parcel ) என்ற சொற்றொடரும் இதைத்தான் புலப்படுத்தும்.
ஆனால் பொட்டலம் என்பது சேர்த்துக் கட்டிக் கொண்டுவருதல் குறிப்பது. பொட்டு (தல்) - வெடித்துப் பிரிதல், அடுத்த பகவு, அல் என்பது, அல்லாததைக் கொணர்ந்து நிறுத்துகிறது. ஆகவே இரண்டும் சேர்ந்து சேர்த்துக் கட்டப்பெறுவதை உணர்த்தும். அம் என்பது அமைப்புக் குறிக்கும் விகுதி.
பொட்டியதைக் கட்டி அனுப்புவதனால் அது பொட்டலம் என்று வழங்கப்பட்டது. பொட்டல் என்ற சொல்லின் பொருள் வேறுபட்டது ஆகும்.. அது எதுவும் முளைக்காமல் கிடக்கும் நிலப்பகுதியைக் குறிக்கும்.
பொள் என்ற அடிச்சொல்லில் வருவதுதான் பொட்டித்தல் என்பது. புள்> பொள் என்பன பிரிவுக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட வேர்ச்சொற்கள் ஆகும்.
இவ்வாறு இடையில் அல் ( அல்லாமை) வந்த சொற்கள் தமிழில் பல. அவற்றுள் தீபகற்பம் என்ற சொல் இங்கு நினைவுகூரத் தக்கது. தீவகம்+ அல்+ பு+ அம் > தீவக + அல் + பு+ அம் > தீவகற்பம் > தீபகற்பம் ( மண்ணிணை) - பொருள் கண்டுகொள்க. தீவு என்பது தீர்வு என்ற சொல்லின் திரிபு. நில இணைப்பு முற்றிலும் தீர்ந்த பெரிய திட்டு நிலம், தீவகம் என்பது தீவு+ அகம். உள்ளே நிலமுடைய பெரிய திட்டு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.