வியாழன், 14 நவம்பர், 2024

சிரத்தை - எப்படித் தமிழ்ச்சொல்?

 சிரத்தை என்பது நன் கு புனைவுற்ற தமிழ்ச்சொல் ஆகும். இது  சிற்றூராரின் சொற்றொகுதியிலும் உள்ள சொல்லே. இதை " இவன் சிரத்தையுடன் செய்திருந்தால் இப்படி ச்  சோடை போயிருக்காது  "  என்ற வாக்கியத்திலிருந்து இப்பொருளை உய்த்துணராலாம்.

இதை சிறத்தை என்று ஆய்வாக்காக எழுதிக்கொள்வோம்.

சிறத்தை என்பதில் உள்ள பகவுகளாவன:

திறம் (திற) /  சிற / அகத்து /  ஐ விகுதி.

எந்த வேலையைக் கையாள்வதாயினும் அதைச் சிறப்புடன் அல்லது திறத்துடன் மேற்கொள்ளவேண்டும்.

தகரத்துக்குச் சகரம் போலி அல்லது மாற்றீடு ஆகும்.

திற அகத்து ஐ > சிற அகத்து ஐ > 

திரிபில். அகத்து என்பது அத்து என்று மாற்றம் ஆகிறது.

திற அத்து ஐ > சிற அத்து ஐ >  சிரத்தை.

திறத்தை அல்லது  சிறப்பை உள்வைத்து ஒன்றை முடித்தல்.

பல சொற்களில் றகரத்துக்கு  ரகரம் வந்துவிடும்,  அது எப்போது என்றால் இந்தப் பகவுச்சொல் இன்னொரு சொல்லாக்கத்தில்  வரும்போது.

எடுத்துக்காட்டு:  சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுவது சரி + திறம் > சரித்திரம்.  றகரம் ரகரம் ஆயிற்று.

சிரத்தை என்பதன் தோற்றம் அறிந்தோம்.

இனி இன்னொரு அமைப்பு:

அக்கு என்றால் அங்கு சென்று சேர்தல். அ = அங்கு;  கு = சேர்தல்.

திற அக்கு ஐ >  சிற அத்து ஐ >  சிரத்தை எனினும் அதுவே.

இவை போதுமானவை.  பின்னொரு நாள் இன்னும் கூட்டுவோம்.

இரண்டு எழுத்துக்களை மாற்றிவிட்டால், யாரும் தட்டுக்கெட்டுப் போவான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்  


புதன், 13 நவம்பர், 2024

கார்கோ என்ற ஆங்கிலம் cargo [etymology]

Cargo  என்ற சொல் எப்படி வந்தது என்று ஐரோப்பிய ஆய்வாளர்களால் திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. கப்பல்களின் மூலம் பொருட்கட்டுகள் அங்குமிங்கும் அனுப்ப்பப்படுவது நெடுநாளாக நடப்பில் உள்ளது. எப்படி ஆய்ந்தாலும் இது கடல்வணிக முறையிலிருந்து வந்த சொல் என்பதை மறுக்கமுடியவில்லை.

கேரி அண்ட் கோ carry and go என்பதே சுருங்கி  கார்கோ என்று வந்திருக்கவேண்டும். இப்படிச் சொன்னால் தங்களின் மொழியறிவுக்கு ஏற்புடைத்தான விளக்கமாக இருக்காது என்று எண்ணிய இவர்கள்,  இலத்தீன், ஸ்பானிய மொழி,  பிரஞ்சு  ஆகிய எல்லா வற்றையும் ஆய்ந்து,  இறுதியில் காரஸ் carrus என்ற மூலத்தைக் காட்டுகிறார்கள்.  இதில் பிழை இல்லை. ஆங்கிலத்தில் கேரி என்ற சொல்லுக்கும் இது மூலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கப்பலில் வேலை செய்தவர்கள் இந்த மொழிகளை எல்லாம் அறிந்த அறிவாளிகளாக இருந்திருக்க மாட்டார்கள். ஒரு நாட்டின் ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு நாட்டின் இன்னொரு துறைமுகத்திற்கு த் தூக்கிக்கொண்டு போய்ச் சேர்ப்பது என்ற பொருளில் இந்த வழக்கு  (formulation ) வெகு எளிதாகவே படைக்கப்பட்டுள்ளது.  இதுபோன்றவற்றைத்தான் யாம் மக்கள்படைப்பு என்று கூறுகிறோம்.

இதில் கேரி என்ற சொல்லில் ry என்பதை நீக்கிவிட்டால் மீதமிருப்பது கார்  car என்பதுதான். இது தூக்குவதன் அறிகுறிச் சொல்.  அடுத்துப் போவதைக் குறிப்பது go என்பதுதானே! துறைமுகத்தில் நடப்பது அவ்வளவுதான். பிறகென்ன வேண்டும். கார்கோ என்ற சொல் வந்துவிடுகிறது. சான்றிதழ் இல்லாதவன் அமைத்த சொல் அப்படித்தான்.  இப்படி விளக்கும்போது  அது பாமரற்கு உரிய பாழ்மர விளக்கமாகிவிடுமோ என்பதுதான் அவர்களின் அச்சம்.  சொல்லை விளக்கினால் அது தன் பாண்டித்தியத்தையும் காட்டுவதாக இருக்கவேண்டும். இல்லை என்றால் யாரும் விளக்கலாமே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

யாங்கள் வேலையிலிருந்த காலையில் handcourse என்ற ஒரு சொல்லைச் சந்தித்தோம்.  ஓய்வு பெற்றுப் பல மாமாங்கங்கள் கடந்திருந்தாலும் இதன் மூலத்தையோ புனைவையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால்  இது மரணவிசாரணை( சாவாய்வு )முறைவரின் வழக்கைக் குறிக்கிறது என்று சொன்னார்கள். அப்படியானால் இன்-குவஸ்ட் (inquest) என்பதைக்  குறித்திருக்கலாமோ என்று ஐயப்பாடு எழுந்தது,  இன்னும் ஐயப்பாடு தீரவில்லை. ஆனால் இது மலாய் மொழி பேசும்போது பயன்படுத்தியதால் ஆங்கிலம் பொருந்தவில்லை. இப்போது இது வழக்கிறந்தது.  இதைப் பயன்படுத்திய கூட்டம் இப்போது இல்லை. மலாயில் எங்கோஸ் .  அம்மொழியின் அகரவரிசையில் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திங்கள், 11 நவம்பர், 2024

மஞ்சள் என்ற சொல்

 மண் சில நிறங்களில் கிட்டுகிறது. செம்மண், களிமண் என்ற பெயர்களைக் காண்க.  கூர்மை  நெருக்கம் என்றும் பொருள் உள்ளன.

 மஞ்சள் காயுமுன் அரத்தை போன்ற உருவில் உள்ளது. அரத்தை கொஞ்சம்  சிவப்பு நிறமாக இருக்கும்.   மஞ்சள் காய்ந்தபின் கட்டியாகி,  மங்கலப் பொருளாகவும் பயன்பட்டு,  குழம்பு வைப்பதற்கும்  பயன்படுகிற நிலையில் அதன் நிறம் காய்ந்த சிலவகை மண்ணை ஒத்ததாகவே உள்ளது. மண்ணினோடு நெருங்கிய நிறம்தான்.

மஞ்சைக் காணி என்ற சொல் மஞ்சட்காணி  என்பதற்கு ஈடாக வழங்கும்,  மஞ்சள்நீர்ப் புத்திரன் என்பதுதான்  மஞ்சணீர்ப் புத்திரன் என்னும் சொற்றொடர்.

மண்செய்  என்ற இருசொற் புணர்ப்பே மஞ்சை என்று மாறியுள்ளது.

இனி இவற்றைக் கவனியுங்கள்:

தண்செய் -  தஞ்சை.   காவிரியால் தண்மையாக்கப்பட்ட நிலம்.

பண்செய் >  பஞ்சை:   பண்களைப் புனைந்து வாழ்ந்தோர்,  யாரேனும் ஒரு செல்வம் உடையவனையே  அண்டி வாழவேண்டிய நிலை பிற்காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டது,  ஆகையால் அவர்கள் "பஞ்சை"  என்று குறிக்கப்பட்டு பணம் பொருள் இல்லாதவர்களாய்த் தாழ்ந்தனர். சில ஆய்வாளர்கள் பஞ்சைப் போல் பறப்பவர்கள் ஆனார்கள் ஆதலால் என்று ஒப்பிட்டு விளக்கினர்,  ஆகவே  அது சரி இது சரியில்லை என்று ஊகித்து வாதம் விளைக்காமல் இதை இருபிறப்பிச் சொல் என்று கிடத்துக.

கஞ்செய் >  கஞ்சை:  இது கடுமையானதாகச் செய்யப்பட்டது என்னும் பொருளில் கடுஞ்செய் >  ( வல்லெழுத்து டுகரத்தை நீக்கி )  கஞ்செய் என்று வந்து பின் கஞ்சை என்றானது.  செய் என்பது சை ஆவதற்கு இதிலும் ஓர் விதியமைப்பைக் காணலாம்.

விண்+ செய் >  விஞ்செய் > விஞ்சை.  ( விஞ்சையர் -  விண்ணோர்)

ஊஞ்சல்: =  ஓரிடத்தில் ஊன்றிக்கொண்டு முன்சென்றும் பின்சென்றும் வருவதுதான் ஊன் + செல் > ஊஞ்சல்.  உன் என்பது முன்னிருப்பவனைக் குறிப்பதுபோலவே முன் இருப்பதனையும் குறிக்கும்,  உ என்ற சுட்டடிச் சொல் ஆகும்,  ஊங்கு என்பது மீறிய என்று பொருள்படும்  " அறத்தினூங்கு  ஆக்கமும் இல்லை,  அதை மறத்தலின்  ஊங்கில்லை  கேடு"  என்பதும் காண்க. ஊ என்பது சுட்டுச்சொல்லே ஆகும்,  உன் என்பதன் முன் வடிவம் ஊன் என்பதுதான் என்று முன்னரே ஆய்வாளரால் தெளிவுசெய்யப்பட்டதே  ஆகும்.

ஊன் செல்> ஊஞ்சல்.

ஆகவே மஞ்சள்  என்பது மண்செய்>  என்பதில் விளைந்து வந்த சொல்லே ஆகும்,

அள் என்பது அடுத்திருத்தல் என்று பொருள்தரும் அடிச்சொல்.  நெருக்கம் காட்டுவது.

மஞ்சள் என்ற உயர்சொல்லை யாரும் இதுவரை விளக்கியதாகத் தெரியவில்லை,

இதுவே முடிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்