வியாழன், 25 ஜூலை, 2024

வேதம் - ஐதரேய உபநிடதம். தமிழ்த் தொடர்பு

 இப்போது ஐதரேய உபநிடதம் என்ற சொல்லை விளக்குவோம்.

ஐ + தரு + ஏய உபநிடதம் என்பதைக் கவனிப்போம்.

ஐ என்பது தலைமை என்ற பொருளில் பலகாலமாக வழங்கிவரும் சொல்லாகும். இதை ஐயர் என்ற சொல்லிலிருந்து தெரிந்துகொள்வோம்.

ஐயர் என்ற சொல், தொல்காப்பியனார் காலத்தில் " குமுகாயத் தலைவர்"  ( சமுக முன்னணி மாந்தர் ) என்ற பொருளில் வழங்கிவந்தது. இத்தொடரை அல்லது சொல்லை, Leaders of the society என்று மொழிபெயர்த்தால் சரியாகவிருக்கும்.  இது இன்று உள்ள பொருளன்று.  தொல்காப்பியனார் காலத்தின் பொருள்.

பொய்யும்  வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்று தொல்காப்பியம் சொல்கின்றது.

இதன் காரணமாக, ஐ என்ற முதற் பகவுக்கு முதன்மையான, மூத்த, முன்வரும் ஒளி உடைய என்று பொருள்கூற வேண்டும்.

தரு என்பது தருதல், பயத்தல், உண்டாக்குதல்.

ஏய்தல் என்பது இயைத்தல், கொண்டுபோய் இணைத்தல்.

உங்களுக்குப் பொருந்தும் பொருளை இவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். எம்முடன் பொருந்தினவரை யாம் இதை:  முதன்மையாய் உண்டாகிப் பொருந்திய ( ஏய்ந்த அல்லது இயைந்த) உபநிடதம் என்று எடுத்துக்கொள்வோம். இதுவே சரியானதாகும்.

ஏய என்பது இயைந்தது என்பதன் பொருண்மை உடையது.

இதற்குத் தலைப்பு கொடுத்தவர் ஆதிசங்கரப் பெருமானாக இருக்கலாம். அவர் தமிழர். தமிழ்ப்பெயரையே சூட்டியுள்ளார்.

வேதங்களை மக்களுடன் இயைத்தவன் தமிழன்.

மேலும் இதைப் பாடிய முனிவனும்  ( ஐதரேய முனிவன்) இற்றை நிலையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ப. இதை ஆதிசங்கரப் பெருமானே பொருளெழுதிப் பெருமைப் படுத்தியுள்ளார்.

இதனால் சாதி என்பது இந்து மதத்தின் பிரச்சினை அன்று ( அல்ல) என்பது தெளிவாகிறது.  இதைப் பூதமாக்கியவன் பிரிட்டீஷ் வெள்ளைக்காரனே.

 சாதிகட்குச் சட்ட முலாம் பூசியது வெள்ளைக்காரன் ஆட்சியில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



செவ்வாய், 23 ஜூலை, 2024

கவின் ( அழகு) எப்படி அமைந்தது?

 கவின் என்பதென்ன?

மலையிலிருந்து கிட்டும் மல்லிகை மலைமல்லிகை எனப்படும். இது மிக்க அழகாக இருக்கு மென்று புறநானூறு பழைய உரை கூறும். பின் காட்டு மல்லிகை என்றும் ஒன்று அறிகிறோம். இதுவும் அழகுடையதே, உங்களுக்கு இவற்றின் வேறுபாடுகளைக் கூற முடிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

கவின்பெற்ற மலைமல்லிகை என்கின்றார்கள்.  தாளிப்பூ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை என்றும் குறிக்கிறார்கள்.

பார்த்த மாத்திரத்தில் அதை எடுத்து மோக்காமல் செல்லமுடியாத அளவுக்கு அழகு வாய்ந்ததாம். 

கவ்வு, கவை, கவிழ்தல், கவர்தல். கவர்ச்சி  என்பனவெல்லாம் கவ என்று சொல்லுடன் தொடர்புடையனவே. விட்டு அப்பால் செல்லமுடியாத கவர்ச்சி. தன்பக்கம் இழுக்கும் அழகு.

கவர்ச்சி என்பது சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசனை அல்லது நன்மணம் என எதனாலும் ஏற்படும்.

விட்டுச் செல்லமுடியாத அழகுதான் கவின்.

கவ> கவி> கவி+ இன் > கவின்.

இன் என்பது உடையது என்ற பொருள் உள்ள பழஞ்சொல்.

கவி என்ற பாட்டுக் குறிக்கும் சொல்லும் .இதனோடு  தொடர்புடையது.  அழகானது. பொருள் செவ்வனே கவிக்கப்பட்டு இயல்வது, கவிக்கும் உரைக்கும் வேறுபாடு உள்ளது. பொருளினை மேலே குவித்துள்ளான் கவிஞன்.

குவி< கவி.

பொன்னழகைக் குவித்து வைத்தது போல.

அழகைத் திரட்டி வைப்பதும் அந்த திரட்டுக்குள் காணும் மனிதன் ஓடவியலாமல் ஒட்டிக்கொள்வதும் பொருண்மை. 

கவின் வாடுதலும் உண்டு என்று கலித்தொகை சொல்கிறது. காரிகை பெற்ற கவினும் வாடிவிடுகிறதே! 

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே

பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் 124.

வீதிகளும் கவின்பெறும்  ( அலங்காரம் பெறும்.) என்பார் தண்டமிழாசான் சாத்தனார். கொஞ்சநேரம் ஒரு கல்லில் அமர்ந்து வீதியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்பும் நிகழ்வு  நடந்துள்ளதா உங்கள் செலவுகளின்போது?

தமிழ்ச் சொற்கட்கு இத்துனை பொருண்மை.

Covet  என்ற ஆங்கிலச் சொல்லைக் காண்போம். Thou shalt not covet thy neighbor's wife.  Thou shalt not covet thy neighbour's goods என்பன பத்துக்கட்டளைகளின் இறுதி இரண்டு. "கவட்" என்ற சொல்லையும் கவர் என்ற சொல்லையும் நுணுக்கமாக நோக்குங்கள். Cupidas  என்ற இலத்தீன்  சொல்லிலிருந்து கவட் என்னும் சொல் வந்தது  என்று சொன்னூலார் கூறுவர். வெள்ளையர்கள் ஆசியாவிற்கு வந்தபின் ஐரோப்பிய மொழிகளெல்லாம் வளன் பெற்றன. இந்திய மொழிகளில் பலவற்றை இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்கு வந்த தன்மை உடையவை என்று கூறுவர்.  வெள்ளையர்கள்தாம் வெளியிலிருந்து வந்தார்கள். இவர்கள் அங்கு போகவில்லை. உரோமப் பேரரசின் தொடக்கத்திலே நம் புலவர்கள் அங்குச் சென்று சொற்களை உதவினர்.   இதை ஓர் ஆய்வாளர் எழுதியுள்ளார். (சென்னைப் பல்கலை).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

திங்கள், 22 ஜூலை, 2024

ஆரண்யகா Aranyaka ( வேதம்)

 ஆரண்யாகா என்பதன் மூலத்தை நோக்குவோம்.

இதனுடன் தொடர்பு உடைய சொல் அரண் என்பது.

அரண் என்ற சொல் பாதுகாப்பு என்று தமிழிற் பொருள்படுவதாகும். இதனைப் பிரித்தால் இதில் இரண்டு பகவுகள் உள்ளன.  அரு என்பதொன்று. அண் என்பது இன்னொன்று. இவ்விரு பகவுகளும் இணைய, அரு என்பதில் உள்ள இறுதி ருகரம் ( ரு)  நீங்கும். ( சந்தி இலக்கணத்தில் "கெடும்" என்பது).

அரு என்றால் அரிதாய்க் காணப்படுவது. அதாவது எங்காவது ஒரு முதன்மையான இடத்தில் அமைந்திருப்பது. இதன் முதன்மை யாதென்றால், இது போர்ப்படை நகர்வுகளுக்கு இன்றியமையாமை உடைய இடத்திலிருப்பது. அரண்கள் இருவகை. இயற்கையாக அமைந்த இடங்கள்.  காடு, மலை, ஆறு முதலியவைகளும் தாமே அமைந்த பாதுகாவலிடங்கள்.  செயற்கையாக அரசன் அமைத்து வைத்திருக்கும் அரண் என்பது கோட்டை மதில் அகழிகள் முதலியவை. இவை அனைத்தும் படைநடத்துவதற்கு  இயல்பாகவே உதவும் இடங்களில் அமைந்திருக்கவேண்டும். எதிரி அணுகும் வழிகளை எதிர்நோக்கி இவை இருக்கவேண்டும்.  அரு என்ற சொற்பகவில் இப்பொருளெல்லாம் அமைந்திருக்கிறது.

அண் என்பது அண்மை அல்லது எளிதில் எட்டும் தொலைவில் இருப்பது என்று பொருள்.

இவ்விரு பகவுகளும் தமிழ் மூலங்களே.

கா என்பது காவல் அல்லது காப்பது என்று பொருள்படும். இது அரு என்ற சொல்லினைத் தெளிவுபடுத்தி 9 பொருளுக்கு ஒளியூட்டுகிறது என்று முடிக்கவேண்டும்.

எனவே ஆரண்யகா என்றால் அரணுக்குரிய காப்பு என்பதாம்,

ஆனால் வேதத்தில் இருந்து நோக்கினால்  காட்டிலிருந்து கொண்டு உலக வாழ்விலிருந்து விலகித் தன்னைத் தான் ஆன்மீக நெறியில் காத்துக்கொள்வதுதான்.

வேய்தல் என்ற சொல்லும் வேய்+  து + அம் என்றாகி  வேய்தம்> வேதம் என்று முடியும் சொல்லமைப்பு.  அறிதற்கு ஆக்கம் செய்யப்பட்டது என்று பொருள். வேய்தல் என்பதும் தமிழ்ச்சொல்தான். இதில் அறிதலுக்கு என்பது வருவிக்கப்பட்டமையினால் இது காரண இடுகுறிப்பெயர் ஆகும்.

இதைப் பாடியோர் அல்லது சேர்த்துக் கட்டியோர் தமிழர்கள். அதனால் அவர்கள் தமிழ்ப்பெயரையே வைத்துள்ளனர்.

சமஸ்கிருதம் என்ற பூசைமொழி சமம் கதம் என்ற சொற்களால் ஆன சொல். சமம் என்றால் தமிழுக்குச் சமம், கதம் என்றால் ஒலி, கத்து> கது ( இடைக்குறை)>கது + அம் > கதம்.  கதமே பின் கிருதம் என்று மாறியுள்ளது. இது பூசைமொழித் திரிபு. மதங்கம் என்ற சொல் மிரு தங்கம் என்றானது காண்க. மத > மிருத,  அதுபோல் கத> கிருத. சம் > சம என்றால் சமமான, அதாவது தமிழுக்குச் சமமான ஒலி.  சமமான கிருதம். சமஸ்கிருதம்.  சமமான கதம். மதுரையை மஜ்ரா என்றதுபோல வெள்ளைக்காரன் சான்ஸ் கிர்ட் என்று மாற்றிக்கொண்டான். வித் என்ற சொல்லிலிருந்து வேத் என்றாகி வேதம் என்றானது என்று வெள்ளைக்காரன் சொன்னது அவனுக்கு வேண்டியபடியான திரிபு, மியன்மார் என்றதை பர்மா என்றதுபோல. பெய்ஜிங்க் என்றதை பீக்கிங்க் என்றான்.  இவை எல்லாம் ஆனந்தம்தான். பரமானந்தம்.  நாக்குத் திரும்பாவிட்டால்தான் ஆனந்தமெல்லாம் ஆரம்பம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.