கவின் என்பதென்ன?
மலையிலிருந்து கிட்டும் மல்லிகை மலைமல்லிகை எனப்படும். இது மிக்க அழகாக இருக்கு மென்று புறநானூறு பழைய உரை கூறும். பின் காட்டு மல்லிகை என்றும் ஒன்று அறிகிறோம். இதுவும் அழகுடையதே, உங்களுக்கு இவற்றின் வேறுபாடுகளைக் கூற முடிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
கவின்பெற்ற மலைமல்லிகை என்கின்றார்கள். தாளிப்பூ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை என்றும் குறிக்கிறார்கள்.
பார்த்த மாத்திரத்தில் அதை எடுத்து மோக்காமல் செல்லமுடியாத அளவுக்கு அழகு வாய்ந்ததாம்.
கவ்வு, கவை, கவிழ்தல், கவர்தல். கவர்ச்சி என்பனவெல்லாம் கவ என்று சொல்லுடன் தொடர்புடையனவே. விட்டு அப்பால் செல்லமுடியாத கவர்ச்சி. தன்பக்கம் இழுக்கும் அழகு.
கவர்ச்சி என்பது சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசனை அல்லது நன்மணம் என எதனாலும் ஏற்படும்.
விட்டுச் செல்லமுடியாத அழகுதான் கவின்.
கவ> கவி> கவி+ இன் > கவின்.
இன் என்பது உடையது என்ற பொருள் உள்ள பழஞ்சொல்.
கவி என்ற பாட்டுக் குறிக்கும் சொல்லும் .இதனோடு தொடர்புடையது. அழகானது. பொருள் செவ்வனே கவிக்கப்பட்டு இயல்வது, கவிக்கும் உரைக்கும் வேறுபாடு உள்ளது. பொருளினை மேலே குவித்துள்ளான் கவிஞன்.
குவி< கவி.
பொன்னழகைக் குவித்து வைத்தது போல.
அழகைத் திரட்டி வைப்பதும் அந்த திரட்டுக்குள் காணும் மனிதன் ஓடவியலாமல் ஒட்டிக்கொள்வதும் பொருண்மை.
கவின் வாடுதலும் உண்டு என்று கலித்தொகை சொல்கிறது. காரிகை பெற்ற கவினும் வாடிவிடுகிறதே!
ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் 124.
வீதிகளும் கவின்பெறும் ( அலங்காரம் பெறும்.) என்பார் தண்டமிழாசான் சாத்தனார். கொஞ்சநேரம் ஒரு கல்லில் அமர்ந்து வீதியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்பும் நிகழ்வு நடந்துள்ளதா உங்கள் செலவுகளின்போது?
தமிழ்ச் சொற்கட்கு இத்துனை பொருண்மை.
Covet என்ற ஆங்கிலச் சொல்லைக் காண்போம். Thou shalt not covet thy neighbor's wife. Thou shalt not covet thy neighbour's goods என்பன பத்துக்கட்டளைகளின் இறுதி இரண்டு. "கவட்" என்ற சொல்லையும் கவர் என்ற சொல்லையும் நுணுக்கமாக நோக்குங்கள். Cupidas என்ற இலத்தீன் சொல்லிலிருந்து கவட் என்னும் சொல் வந்தது என்று சொன்னூலார் கூறுவர். வெள்ளையர்கள் ஆசியாவிற்கு வந்தபின் ஐரோப்பிய மொழிகளெல்லாம் வளன் பெற்றன. இந்திய மொழிகளில் பலவற்றை இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்கு வந்த தன்மை உடையவை என்று கூறுவர். வெள்ளையர்கள்தாம் வெளியிலிருந்து வந்தார்கள். இவர்கள் அங்கு போகவில்லை. உரோமப் பேரரசின் தொடக்கத்திலே நம் புலவர்கள் அங்குச் சென்று சொற்களை உதவினர். இதை ஓர் ஆய்வாளர் எழுதியுள்ளார். (சென்னைப் பல்கலை).
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்