திங்கள், 8 ஜூலை, 2024

சல்லுதல் என்ற வினைச்சொல்.

 சல்லுதல் என்ற வினைச்சொல் ,  அதாவது சல்லு என்ற ஏவல்வினை, இப்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்தப் பாத்திரத்து நீரைக் கொஞ்சம் எங்கும் சல்லிவிடு என்று சொல்லிக் கேட்கவில்லை.  இப்போது ஆங்கிலக் கல்வி மிகுந்துவிட்ட படியால், பலரும் தெளிப்பதை ஆங்கிலத்தில் "ஸ்பிங்கில்"  என்றுதான் சொல்கிறார்கள்.

பல சிறு துளைகள் உள்ள தூவு துளைத்தட்டினைக் கொண்டு தூளாய் உள்ள தானியம் எதையும் மாவு வேறாகவும் சற்றுப் பெரிய துண்டுகள் வேறாகவும் பிரிக்கச் சலித்தல் என்று சொல்கிறோம்.  சல் ( வினைச்சொல்) அப்போது சலி என்று மாறுவதை அறியலாகும்.  இது தமிழில் சொல்லமைபிற்கு உடன்பாடான திரிபுதான்,  அடு> அடி என்று மாறுவதைப் போன்ற திரிபுதான் இது.  நாம் ஆராய்தறிந்த விதிகட்கு இயைந்த திரிபு என்பதில் தெளிவுள்ளது. அடுத்துச் சென்றாலே அடித்தல் இயலும்.  நிலத்தைக் கால்கள் அடுத்தாலே அடி என்பதை வைக்கமுடிகிறது. இதை விளக்கும் பொருட்டு இங்குச் சற்று விரித்தோம்.

சல்லடை என்பது சல்லும் துணைக்கருவி ஆகும்.   சல்லும் துளைகள் அடைவாக இருத்தலான் அது சல்லடை எனப்பட்டது,  ஆதலின் சல் என்ற வினைச்சொல் முற்றும் தொலைந்துவிடவில்லை. இன்னுமிருப்பதும்  உள்ளாய்வதற்கு வசதி தருவதும் நம் நற்பேறுதான்.

சல்லடை என்பது  கல்லடை என்று திரிந்திருப்பதால்  சகர ககர மாற்றீடு மீண்டும் மேல்வரக் காண்கின்றோம்.  இதைச் சேரலம் - கேரளம் என்ற திரிபில் கண்டிருக்கிறோம். இவ்வாறு திரிதலுற்றவை பலவாகும்.

சல்லு என்பதன் மூல அடி துல்  ஆகும். அதை இங்கு யாம் விளக்கவில்லை. 

இயன்ற அளவு தமிழில் உள்ள வினைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

சனி, 6 ஜூலை, 2024

செய்வனவும் தவிர்ப்பனவும் . குறள்.

[எழுதியது:  அ.மா. மணிப் பிள்ளை.]



 அது கைப்பேசிகள் இல்லாத காலம்.  1985.

என்னுடன் அதிகாரியாய் இருந்த ஒரு சீன நண்பர் ஒரு நாள் என்னிடம் தொலைபேசி அழைப்பை விடுத்தார். அதில் ஒரு பெண்ணைத் *தான் கைது செய்திருப்பதாகவும் உம்மைத் தெரியும் என்றும் சொல்கிறாள். கேட்டு நான் என்ன செய்வதென்று அன்புகூர்ந்து சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அந்தப் பெண் பின் என்னிடம் பேசினாள். தன்னை விபசாரக் குற்றத்திற்காகக் கைது செய்திருப்பதாகவும் நான் பேசி உதவவேண்டும் என்றும் சொன்னாள்.

நடந்த விடயங்களைச் சுருக்கமாக அறிந்துகொண்டு, பின்னர் அந்த அதிகாரியிடம் பேசினேன்.  நீர் சட்டபடி நடக்கவேண்டியவர். நானும் அப்படித்தான். நாம் இருவரும் இதில் என்ன செய்ய முடியும். உமது வேலைக்கு உள்ளவாறு நீர் செய்துகொள்ளவும். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.

நாம் ஓரிடத்தில் வேலை செய்தால் அந்த வேலையை ஒழுங்கான முறையில் செய்து நலமான விளைவுகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.  பிடித்த வழக்கிலும் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அறிந்துகொண்டேன். இந்த அதிகாரியுடன் அவருடைய ( அதிகாரியின்)  குழுவினரும் கைது நடவடிக்கையின்போது இருந்துள்ளனர். இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று அந்தப் பெண் நினைத்தது அவளது முதிர்ச்சியின்மையையே காட்டியது. இது பொய் வழக்கன்று.

அப்புறம் அந்த வழக்கைப் பற்றி எனக்குத் தகவல் இல்லை. இவள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்று வெளியில் வந்துவிட்டாள் என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

இதற்குப் பின் இவளைக் கோயிலில் பார்த்து, அவள் என்னிடம் நலம் விசாரித்தாள் . இந்த வழக்கைப் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை.

நான் உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இன்னும் இருப்பதாகப் பிறர் மூலம் அறிந்துகொண்டேன்.  தான் பிடிபட்ட சங்கதி வெளிப்படாமல் வேறு தொந்தரவுகள் எனக்கு இருப்பதாகச் சொல்லுவாள்.  அதனால் வேறு சில கீழறுப்பு  வேலைகளில் அவ்வப்போது அவள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாள்.  பொய்யும் சோடனைகளும் மிகுதி.

இங்குள்ள சில குறிப்புகளை மாற்றிச் சொல்வதும் இவளுக்கு வேலையாகிவிட்டது.

காவல் துறையில் வேலைசெய்வதில் இதுவும் ஓர் இன்னல் ஆகும். சிலர் உதவவில்லை என்று வேறு எதையாவது சொல்லி அவதூறு பரப்புவார்கள். கேட்பவர்கள் இதை எல்லாம் அறிந்துகொள்ள அவர்களுக்கும் நேரம் இராது. இவ்வாறு சில எண்ணிக்கையில் நம் இந்தியர்கள் உள்ளனர். 

இவளுடன் பிற்காலத்தில் ஒருவன் சேர்ந்துவாழும் கணவனாய் இருந்தான். இப்போது பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.  வாழ்க வளமுடன்.

எல்லோரும் வாழ்க. உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

குறள்.

பரிமேலழகர் உரை:  செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)

அரசருக்குச் சொன்னது அரசின் அதிகாரிகளுக்கும் உரியதாகும். அரசுக்குத் தலைமையாய் இருப்பவர் அரசு காவல் ஊழியர்கள்  எல்லோரும் அரசர்தாம். பொருளை விரித்துக்கொள்க.




 


வெள்ளி, 5 ஜூலை, 2024

திரவம்

 திரவம் என்பதை அறிவோம்.

திர் என்பது திரட்சி குறிக்கும் அடிச்சொல்.  மாற்றமும் இதனால் அறியப்படும்.

எடுத்துக்காட்டு:  திர்>  திரிபு.

. எப்போதுமுள்ள நீரில் சற்று மாற்றம் ஏற்பட்டுத் திரவங்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டு: ஓமத்திரவம் அல்லது ஓமத் திராவகம்.

திர் > திர் + அவி + அம் >  திரவம்.  அவி என்பதில் இகரம் கெட்டது.

வேவித்து மாற்றம் அடைந்த நீர்ப்பொருள். அல்லது முன்னைய நிலை மாறிப் பின் உண்டாகிவரும் நீர்ப்பொருள். இது சொல்லமைப்புப் பொருள்.

திர் அவி அகம் >( திரவகம்) > திராவகம்.

அவி என்பது அ இ என்ற இரண்டு சுட்டுகள் ஒன்றாகி ஏற்படும் சொல். இடையில் வ் என்பது வகர உடம்படு மெய்.  முன் நிலையில் முன்னொரு மாற்றம் உண்டாகி இன்று வேறு ஒரு நிலையை  அடைந்து இருப்பதான ஒரு நீர்ப்பொருளை இது குறிக்கிறதென்பது தெளிவு. இது  சொல்லமைப்பில் உள்ள பொருள். பயன்பாட்டில் அது வேறு பட்ட நிலையினதற்கும் ஆகிவரலாம்.

திரிவுவடிவங்கள்:

திரவம்

திராவம்: ( திராவம்புரிதல்)

திராவகம்

முதலிய வடிவங்கள் இங்குக் கூறப்பட்டன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்