சொல்லமைப்புத் தந்திரங்கள் பலவாறு வேறுபட்டு வளர்ந்துவந்துள்ளன. எவ்வாறு என்பதை இப்போது ஆய்ந்து மகிழ்வோம். குறைகள் காண்பது நம் நோக்கமன்று. குறைகள் ஏற்படவே செய்யும். நீண்ட நெடிய வரலாறு உடையதன்றோ தமிழ்மொழி. சொல்லாக்கத்தின் கருத்தாக்களாக மக்களும் திகழ்ந்துள்ளனர்; புலவர்களும் இருந்துள்ளனர்.
காக்கா அல்லது காக்கை என்ற சொல்லில் அந்தப் பறவையே அந்த முயற்சிக்கு ஊற்றுக்கண்ணாகத் திறன் காட்டியுள்ளது. பல மொழிகளில் இது நடைபெற்றுள்ளது. க்ரோ என்ற சொல்லும் கத்தொலியைக் கறந்து வடித்த சொல்தான். சீனர்களின் செவிகட்கு நாய்கள் காவ்காவ் என்று கத்துவதுபோல் கேட்டுள்ளது. வெள்ளைக் காரனுக்கு பவ்வௌ என்று கத்துவது தான் சரியென்று தோன்றியுள்ளது. இதுபோன்ற சொற்களை ஒப்பொலிச் சொற்கள் நம் மொழிநூலார் பெயரிட்டுள்ளனர்.
பூனை மியாவ் என்று கத்துவதாகச் சொல்வர். ஆனால் நம் பண்டைத் தமிழர் அது ஞை என்று கத்துவதாகக் கருதி, பூஞை என்று பெயரிட, அது திரிந்து பூனை ஆகிவிட்டது. இதுவும் ஒப்பொலிச் சொல்லே.
இன்னொரு தந்திரம்
குருவி பிடிக்கும் பொறிக்குக் குருவிப்பொறி என்று பெயரிட்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குப் பத்தாயம் என்று பெயரிட்டனர். குருவியைப் பற்றிக்கொள்ளும் கருவி ஆதலின் பற்று ஆயம் என்று பெயர் வந்தது. ஆக்கித் தருவது கருவி எனற் பொருட்டு, ஆ+ அம், ஆ - ஆக்கு என்னும் வினைச்சொல், அம் -அமைப்பு என்னும் பொருள்தரும் விகுதி. இச்சொல்லில் பற்று என்பது பத்து என்று பேச்சுவழக்குக்கு ஒப்பத் திரிந்தபடியால், இது சிற்றம்பலம் என்பது சி(த்)தம்பரம் ( ல் - ர்) என்னும் திரிபு போல் ஆயிற்று.
இப்படிச் சொற்கள் பல திரிந்துள்ளன. ஒன்பதின் மேற்படுவது பத்து. பத்து என்று ஒரு சொல் அமைக்கவேண்டி நேர்ந்தபோது அடிச்சொல்லாகப் "பல்" (பல) என்பதைக் கொண்டனர். பல் + து > பற்று > பத்து ஆனது. இங்கும் பற்று என்று எழுத்துப் புணர்வினால் ஆன சொல், பத்து என்றே ஊர்வழக்கை ஒட்டியே திரிந்து அமைந்தது. து என்பது ஒன்றன்பால் விகுதி ஆயினும், ஓர் எண்ணே குறிக்கப்பெறுவதால் பொருந்துவதாயிற்று. பன்மை விகுதி கொள்வதாயின் " அ" என்பதை இடவேண்டும். எழுத்துகள் புணர்ந்து பல என்று வரின், இன்னொரு சொல் அவ்வடிவு கொண்டு நிலவுதலால், அது பொருந்தாதது ஆயிற்று என்க. எருது என்ற சொல்லின், எருவுக்குப் பயன்படும் விலங்கு என்ற பொருளில் எருது என்று விகுதி புணர்த்தினர். இங்கு அதன் ஒருமை எண்ணிக்கை கருதப் படாமல் விலங்குக்குப் பெயராகவே அமைப்புற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட எருது என்பதற்கு எருதுகள் என்று கள் விகுதி இணைப்புற, ஒருமை குறிக்கும் து விகுதியொடு கள் விகுதி புணர்க்க, ஒருமை பன்மை மாறுபாடு கருதப்படாதது ஆயினது கண்டுகொள்க. [ஏர்+ து>எருது என்று சொல்வதுண்டு]
ஒருவன் உண்மை பொய் என்ற இரண்டும் வந்து எதிர்கொள்கையில் உண்மையையே பற்றிக்கொள்தல் வெண்டும். யாரும் பற்றி ஒழுகத் தக்கது உண்மை. அதனால் அதுவும் பற்று+ அம் > பற்றம் ஆகி, ஊர்த்திரிபின் முறையையே தழுவி, பத்தம் என்று திரிந்தது. ஆகவே பத்தம் என்றால் உண்மை என்று பொருள். இதற்கு எதிர்ச்சொல் ஆவது பத்தம் அல்லாதது என்று பொருள்படவேண்டுமே. அதனை அல் ( அல்லாதது) + பத்தம் என்று அமைக்கலாம். அது அற்பத்தம் (அல்பத்தம்) என்று வரலாமே அப்படியானால் அரபிச்சொல் பாணியில் " அல்கதீப்" என்பதுபோல் அமைந்தாலும் சரியானதாகவே தோன்றும். ஆனால் அல்பத்தம் என்பது திரிபுற்று " அபத்தம் " ஆகி இன்றுவரைத் தமிழில் வழங்கிவருகிறது.
ஊர்களில் வற்றிப்போய் விட்டது என்று தமிழ் வித்துவான் சொன்னால் வீட்டில் உள்ள பாட்டி வத்திப் போய் விட்டது என்றுதான் சொல்வாள். காரணம் பேச்சுமொழிச் சொல் வத்திப்போய்விட்டது என்று சொல்வதுதான். ஆய்வாளன் ஒருவன் பேச்சுமொழி வடிவம் எழுத்துவடிவில் வராது என்று முடிபாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. செய்யுள் வழக்கு உலக வழக்கோடு வேறுபடும். நாம் உலக வழக்கு என்று சொல்வது நகர வழக்கு, வட்டார வழக்கு, ஒருசாதியினர் வழக்கு, பலசாதியினர் வழக்கு, தமிழ்நாட்டின் ஒருமூலையில் மட்டும் உள்ள வழக்கு, பல ஊர்களின் வழக்கு என்று உண்மையில் எண்ணிறந்தன வாகும். இவை பலவும் அறியாமல் ஊர்வழக்கு என்று சொல்லக்கூடாது சொல்லாக்கத்திற்குப் பயன்படாது என்று சொல்லுதல் மடமை. இலக்கணம் என்பது ஒரு மொழியை எழுத்திலும் பேச்சிலும் பிழைபடக் கையாளாமல் முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்னும் நூல்தான். புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் கொள்வதற்காக எழுதப்பட்ட இலக்கணம் அன்று. புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் குவித்தாலும் அவற்றை யாரும் பயன்படுத்தாவிட்டால் அவை குப்பைதான்.
ஊர்வழக்கில் உள்ளவை முன்பே உள்ள சொற்கள் தாம். அவற்றின் வழக்கியலை யாரும் ஒழித்துவிடவும் இயலாது.
இவையும் பிற பலவும் தந்திரங்கள் என்றே கூறத் தகுவனவாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.