புதன், 26 ஜூலை, 2023

காலம்சென்ற வளர்ப்பு - ஓர் இரங்கல்கவிதை

 யான்மியா என்றாலோ

தான்மியா எனப்பாடும்,

நானென்ன பேசினேனோ

யானும்  சொல்வதில்லை!

அதுவென்ன சொன்னதென்று

அதுதனக்கே வெளிச்சமாகும்.

நிகழ்ச்சிநிரல் இல்லாத

மகிழ்ச்சிப் பெருவெள்ளம்,


சிலநாட்கள் தலைகுனிந்து

கண்மூடி அமர்ந்துபின்னே,

சட்டென்று விட்டதுயிர்;

பரமபதம் அழைத்ததோ?

பாருக்குள்தான் நிலைத்ததோ?

மீந்திருந்த உடலைகொண்டு

மின் தகனம் செய்தோமே,

அம்மா மறைந்தபின்னே

இதுவும்  மறைந்ததையோ!

மியாமியா  என்று ஒலிக்க

வீட்டில் ஏதுமில்லை.

அமைதியே  மிஞ்சியது.

என்செய்வோம் நாம் இனி?



இது கவனிப்பாரற்று இருந்தது.  காப்பகத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து கவனித்து வளர்த்தோம்.  இப்போது பிரிந்து சென்றுவிட்டது.   பிரியாவிடை கொடுத்துவிட்டோம்.

சனி, 22 ஜூலை, 2023

மகத்து சொற்பொருள்

 மகத்து என்ற சொல்லும் பொருளும் தமிழில் வழங்கியுள்ளது.  எனினும் இது சமயக் கருத்துகளில் வரும் சொல்லாகும்.  இதன் பொருள் " இது மிகப் பெரியது" என்பதுதான்.

ஒன்று சிறப்புக்குரியதாகவோ மிக்க வல்லமை உடையதாகவோ,  இருப்பதாகவோ இயங்குவதாகவோ விளங்குவதாயின்,  அதன் அளவு அல்லது பருமை என்பது ஒரு பொருட்டன்று.  ஒன்று மிக்கச் சிற்றளவினதாக இருந்துகொண்டு  மிக்க வல்லமையை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக,  ஓர் அணு,  ஆயின் அது பிளக்கப்படின் ஓர் பேராற்றல்  அதனின்று வெளிப்படுவதாக இருக்கலாம். அவ்வாற்றல் இயக்கத்தில் அறியப்படுவதே அன்றி,  காட்சியளவினைக் கொண்டு அறியப்படுவது அன்று. பருமை அல்லது பருமன் என்பது,  ஆற்றலை அறிய உதவுதன்று என்று இதிலிருந்து முடிவுசெய்தல் வேண்டும்.

ஒரு சிறிய விதை  நோய் தீர்க்கக் கூடும்.  ஒரு கட்டில் அளவினதான பரிய பொருள் அதற்கு ஒரு விதத்திலும் உதவாததாய் முடியலாம்.  ஆனால் ஓய்வுக்குக் கட்டில் உதவலாம்.

பயன்பாட்டு வலிமை என்பதும் முன்மையான கருத்தாகும்.

இவற்றிலிருந்தே சிறு மையம் , பெரிய மையம் என்ற கருத்துக்கள் கிளைத்து எழுந்தன.  சிறு மையம் என்பது சின்மயம் என்று குறுக்குண்டது.  இறைவன் அல்லது இறைமைப்பொருள்,  அல்லது பரம்பொருள்,  எங்கும் உள்ளது ஆதலின். ஒரு சிறுமையத்திலும் அது இருக்கும்.  ஒரு பெரு மையத்திலும் அது விரிந்துவிடும்.

மகம் என்பது ஒரு பெரும் பொருளைக் குறிப்பது.  ஒன்றில் இன்னொன்று தோன்றுவதே மகம் ஆகும்.   மக+ அம் > மகம்.  இங்கு வகர உடம்படு மெய் தோன்றுவது இல்லை, அதற்குத் தேவையுமில்லை.  உடம்படுமெய் போன்றவை, உடன் தோன்று ஒலி எளிதாக்கத்திற்குத் தேவையே தவிரச் சொல்லின் பொருளறிவுக்கு அத்துணைத் தேவையன்று.  மேலும் உடம்படுமெய் என்பது சொல்லின் உள்ளெழுச்சி அன்று.  அது வெறும் வெளிவரவே  ஆகும்.  அதனால் மகம் என்பது மகவம் என்று நீட்டிப் பெறப்படாதொழிந்தது அறிக.

மகம் + து என்பது மகத்து ஆகும்.  மகம் அல்லது மகமாகிய தன்மை உடைத்து.

மகத்துக்கெல்லாம் மகத்து என்றால் பெரிய அனைத்திலும் பெரியது,  ஓர் எல்லைக்குள் அடைக்க  முடியாதது ஆகும்.

எல்லை அற்றது எனவே. அது மகத்து என்றும் இறைமை என்றும் அறியப்பட்டது.

மக என்பது அம், அ, கு, அ என்ற எழுத்துக்களால் அறியப்படுவது ஆகும்.  இவை, அம் - அமைவும் , அ - அதில் தோன்றுதல்,   கு -  சேர்க்கை,  அ - சேய்மை விரிவு,  இவற்றைக் குறுக்க,  மக என்பது கிட்டுகிறது.   கு அ என்ற கடை இரண்டும் க ஆயின.

திறன் கொண்டு அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு : பின்னர்.

வியாழன், 20 ஜூலை, 2023

அலைகளில் வந்த பெண்

 நினைவுகள்  மிடைந்தொரு மிதவையு  மாகி

கடலினில் வருகின்றதே,

மனைதனில் நடமிடும்  பொழுதினில் கேட்ட

குரலொலி தருகின்றதே!


மனிதர்கள் இலாஒரு  நடுவணில் ஏகி

புனிதமெய்  அலைமன்னுதே,

கனிதரும் சுவைபெறு இனியநீர் எழிலி

இணைந்துடன் ஒலிக்கின்றதே!


விழித்ததும் மறைந்தன

கனவு கனமாகும்,

பின் அது இலதாகும்.


காலை 4 மணிக்கு ஏற்பட்ட ஒரு கனவினை இது

வருணிக்கிறது.

மிடைந்து-  இடையிடையே மாட்டிக்கொண்டு வந்து( இறுதியில் ஒரு மிதவை தெரிந்தது.)

மனைதனில் - வீட்டில்.

(குரல் மட்டும் கேட்டது).


நடுவண் - நடுவிலுள்ள இடம்.  நடுவணில் - நடுவிடத்தில்.

புனிதமெய் - இங்கு இறந்துவிட்டவர் உயிரானதுபோல் உடல்

அலைமன்னுதே  -  அலைகளிடையில் பொருந்தி வருதல்.

மழை நீர் நாவில் பட்டதுபோல் உணர, அது இனிக்கின்றது.

கனவுக்காட்சி நீங்கியது.  இதில் என்னவென்றால், மிதவையில் வரவில்லை,  மிதவையில் ஏற முயற்சி செய்யாமல் இவர் அலைகளில் பொருந்தியபடி வருகிறார்.


                                                                


 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மழை இல்லாவிடின் கடலும் கூட தன் தன்மை கெட்டுவிடும், வறண்டு போகும், மீன் முதலிய உயிர்கள் வாழ்வுக்கு உதவாதது ஆகும்.


டலினின்று  அல்லது மலைகளிலிருந்து மேகங்கள் எழுகின்றன.  எழும் மேகத்திற்கு எழிலி என்று பெயர் வந்தது.  ஆனால் பிற்காலத்தில்   மேகம் என்ற பொதுப்பொருள் எய்தியது இச்சொல்.

தான் கொண்ட நீரை மழையாக ஊற்றுதல்  -  தடிதல்.  "தடிந்து எழிலி"

மேகம்:  மேலுள்ளது.  முகில்.    மே+ கு+ அம்    இஃது  ஒரு தமிழ்ப் பேச்சு வழக்குச் சொல்.  இச்சொல் துணைக்கண்டச் சேவையில் உள்ளது நம் பேறு  ஆகும்,,



அறிக மகிழ்க
 
மெய்ப்பு:   26072023

கடலினின்று