செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

தாக்கல் செய்தல், சொல்வழக்கு

 ஏதேனும் அலுவலகம் போன்ற அமைப்பில்  சில சான்றேடுகளைக் கொண்டுபோய்ப் பதிந்து  வருவதை,  " தாக்கல் செய்தல்"  என்னும் வழக்கு,  பெரிதும் பேச்சு வழக்கில் காணப்படுகிறது.   " வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் பண்ணிவிட்டோம்"  என்பதைச் செவிமடுக்கின்றோம்.  இச்சொல், தாளிகைகளிலும் வழக்குப் பெற்றுள்ளது.  ஆனால் இப்போது ஆங்கிலச் சொற்களின் மிகுதிப் பயன்பாட்டால்,  இத்தகு சொற்பயன்பாடு குன்றிவருதல் அறியலாம்.   இதனிடத்தில் submit,  file, tender(ing)  எனப் பல ஆங்கிலச் சொற்கள் வந்துவிடுகின்றன.

முழுமையாக ஆங்கிலத்திலே பேசி முடித்துவிடாமல்,  கொஞ்சமாகவாவது ஆங்கிலம் கலந்து பேசிமுடித்தல்,  தாய்மொழிப்பற்று இன்னும் இருப்பதைக் குறிக்கலாம். இதை விருத்தி செய்துகொள்தல் வரவேற்கத்தக்கது.

தாக்கல் என்பது தாக்கு என்ற வினையினடியாக எழும் சொல்லாகும்.  பதிந்திடுதலைக் குறிக்குங்கால்,   இது "அடித்தல்"  (தாக்குதல் )  என்று பொருள்படும் சொல்லினின்று  வேறுபடும் சொல்லாகும்.

பதியத் தருதல் என்று பொருள்தருகையில்,    இது தரு~ என்னும் வினையினோடு தொடர்புடைய கருத்தே  ஆகும்.  தரு என்ற வினைப்பகுதி,   தா என்றும்  திரியும்.  தா என்ற திரிபுநிலையை அடைந்தபின்,  இச்சொல்  மீ ண்டும்  வினைவிகுதி பெற்று,  தாகு(  தாக்கு)  என்றாகி,  அல் விகுதியும் பெற்று,   தா + கு+ அல் > தாக்கல் என்ற வடிவை அடைந்தது.  கணிப்புக்கு ஏற்றல்,  பதிந்திடத் தருதல், முன்வைத்தல்,  அறியத்தருதல் என்று பல நுண்பொருள்களை விரிக்கலாம்.

வினையானபின் மீண்டும் வினைவடிவம் அடைதல் தமிழில் காணப்படும் அமைப்பு  ஆகும்.   பழைய இடுகைகளில் இதனை விளக்கியிருக்கிறோம்.  முயலுதல்> முயற்சித்தல்  என்பதும்  சிலர் வழங்கும் இத்தகைய வினைச்சொல்லே ஆகும்.   அடுத்தல்,  அடு+இ >  அடி > அடித்தல் என்பதும் காண்க.  நொண்டு(தல்) >  நொடு>  நொடி > நொடித்தல் என்பதுமாம்.  கடு> கடு+இ >  கடித்தல் என்பதும் அது.  கொள் > கொள்தல்,  கொள் -  கொடு,  கொடுத்தல் என்பன பொருள்மாற்றத்துடன் வருகின்ற திரிபுகள்.

தாக்கல் என்பது  உருது அன்று. 

அறிக மகிழ்க

மெய்ப்பு - பின்னர்.




வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

தயையும் தாயும் சொல்லுறவு

 நாம் இன்று தாய் பற்றிய தமிழர் சிந்தனை,  எத்துணை அளவு மொழியில் (அதாவது சொல்லைமைப்புகளுக்குள் ) அடைவுகண்டு கிடக்கின்ற தென்பதை அறிந்துகொள்வோம்.

தமிழ்மொழியைப் பேசியோர்,  தாய்மேல் உள்ள பற்றுதலால்  தாய் என்ற சொல்லையும் அம்மா என்ற சொல்லையும் எப்படி இணைத்து,  இருசொல் பகவொட்டாக  அமைத்தனர் என்பதை விளக்கியுள்ளோம்.

அம்மை > அம்மா   ----   மா. (முதற்குறை).

தாய்  >   தா  ( கடைக்குறை ) 

மா+ தா =  மாதா.

பன்முறை அம்மா என்பது  அன்பின் திண்மை காட்டும்.

மாதாவை  ஒருநாளும் மறக்கவேண்டாம் என்பது தமிழர்பண்பாடு.

பெற்றதாய் தனை  மகமறந்தாலும்.  ( வள்ளலார்).

தெய்வத்தைக் குறிக்கும்  அம்மன் என்ற சொல்லும்,  அம்மை என்ற சொல்லினடியாய் வந்தது நீங்கள் அறிந்தது.

அம்மன் என்ற சொல் அன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று முடிந்தாலும்,  அவ்விகுதி பெண்பாலையே பொருட்குறியாய்க் கொண்டது,  அன் என்னும் விகுதி  அணுக்கம் என்னும் பொருளிலிருந்து புறப்படுதலின்,  வெகு பொருத்தமாம்.  அன் என்பது அன்பு என்பதன் அடிச்சொல்லுமாகும்.

குறுக்கினும் நீட்டினும் ஒருபொருள் தரும் சொற்கள் உள,  எ-டு  பதம்  -  பாதம்.  (கால் கீழ்).

அம்மைக்குப் பின்புதான் அப்பன் என்பதால்,   பிதா என்ற சொல் அவ்வாறே அமைந்தது.

தாய்ப்பின் > (முறைமாற்றாக )  பி(ன்) + தா(ய்) >  பிதா.

முறைமாற்று அமைப்புக்கு இன்னொரு காட்டு :  இலாகா <   இல்லாமாக அல்லது இடத்திலமைந்த  காப்பு  இயக்கம்.   இல் - இடம்.  ஆ :  ஆகிய அல்லது ஆக்கம்;  கா-   காப்பு.   ( காப்புக்காகிய இடம் ).   இல் என்பது இடப்பொருள் உருபு.   இது திறம்பட அமைக்கப்பட்ட சொல். உருது அன்று.

மேற்கூறிய பதங்கள்  பூசாரிகள் வழக்கில்,    திறம்பட அமைக்கப்பட்டிருப்பது  பாராட்டுக்குரித்தாகும்.

பின் என்பது பி என்று கடைக்குறைவு எய்திற்று,  எ-டு இன்னொன்று:  தன் பின் > தம்பி.   பின்பு அம் > பிம்பம் என்பதும் அது . ( பின்னிழல்).

இத்தகு  சொற்கள்  பல,  தாய்தரும் அன்பைக் காட்டத்தக்கவை.

யார் பின் -  யார் முன் என்பது ஒருவகை மனந்தரு தகுதியே ஆகும்.

அப்பனைக் காட்டிலும் அன்பு மிக்கவள் தாயே  ஆவாள்.   அப்பனிடம் அத்துணை மென்மை இல்லை.  கைபார்த்த ஒரு புத்தபிக்கு,  நீ உன் " "அம்மாக் கடவுளிடம்" போய் வணங்கு"  என்று வந்தவரிடம் சொல்லியனுப்புகிறார் என்றால்  அம்மாவின் (  அம்மனின்)   அன்புதான் எத்துணை என்று அளவிடல் அரிதேயாகும்.

தாய்  >  தய்+ அண் + கு>  தயங்கு.  ( விரைந்து ஒறுக்காமல், நின்று நிதானிக்கும் தன்மை).

தாய் >  தய் + அ + கு + அம் .>  தயக்கம்.

தாய்>  தய்+ ஐ  >  தயை  (  அன்பு,  கருணை)

சொல்லமைப்பில் சொற்கள் குறுகிப் புதுச்சொற்கள் உண்டாகும்.  இது  முன் நீங்கள் அறிந்தது.  தய் = தை.

எ-டு:   சா > சா+அம் > சவம்;    தோண்டு+ ஐ>  தொண்டை.  காண் > கண்.

சொல் குறுகி வினையும் பெயரும் அமையும்:  நாக்கு >  நக்கு;     காது>கத்து.

காண் -  கண்,  (மேற்கண்ட இரண்டிலிருந்து இஃது முறைமாற்று)

தயை, தாய் என்பவற்றின்  சொல் திறம் கண்டீர்.   தயை என்பதன் தொடர்புகள் கொண்டாடத்தக்கவை.

தாயாகி நிற்போன்:  தாய் + ஆ+ நிதி >   தயாநிதி. பூசை ஆர்வோர் இலக்கணம்,  இஃதொரு வடமொழிப் புணர்ச்சி எனினும்,  உண்மை இதுதான் .  தாய் ஆ = தாய் ஆகும் என்பது பொருள்.

ஒரு புதிய இலக்கணம் சொல்லும்போது மாற்றுரையாகச் சொல்வதில் குற்றமொன்றுமில்லை.  அவ்வாறு தமிழிலக்கணியரும் கூறியுள்ளனர்.  தமிழில் "மாட்டிக் கூறாமல்," தனியாக்கிக் கூறுவது  ஓருத்தி. 

தயை என்பது தைத்தல் வினையோடு தொடர்புடையது.  இனியொருநாள் காண்போம்.  மக்களை இணைக்கும் மாதமும் தை எனப்பட்டது. தோலில் ஒட்டும் மருந்தெண்ணெயும்  தைலம் எனப்பட்டது. அடிப்பொருள்  ஒட்டுதல், மனவொட்டுதல். இணைப்பு. [ மனத்துள் தைக்கவேண்டும்.]  குழந்தையை ஒட்டிநிற்பவள் தாய்.



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சில சேர்க்கப்பட்டன.  மீள்பார்வை பின். 27022022


செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

பராக்கும் பார்வையும்.

 சொற்கள் சில, மிக்கச் சுருக்கமாக விளக்க இடந்தரும் உருவுடையனவாம்.

ஆங்கிலத்தில் ,  நேராகவும் நிமிர்ந்தும் நிற்குமாறு படைஞர்கட்கு  உத்தரவிடும் முகத்தான்,  "அட்டென்ஷன்"  என்று கட்டளைதருவர்.  மலாய் மொழியில் "சிடியா" என்று கத்தல் எழும். ஒவ்வொரு தேயத்தும் இத்தகு கட்டளைச் சொற்கள் உள்ளன. இராசராசனின் படையினர் எத்தகு கட்டளைகளைப் பிறப்பித்துப் படைநடத்தினர் என்பதைக் கூறும் நூல் எதையும் யாரும் இதுகாறும் வெளியிட்டிலர் என்பது அறிகிறோம்.  

எழுதுவதில் தமிழர் நல்லபடி செய்கின்றனர்,  எழுதியவற்றைப் படிப்பதில் தமிழர் முன்னணியில் இல்லை என்பது எம் கருத்து ஆகும்.  இரண்டும் சமமாக  நடைபெறுதல் நன்று.

பழங்காலத்தில் படைஞனின் கவனத்தை ஈர்க்க  "  பார்  ஆக்கு" என்று குரலெழுப்பினர்.

பார் - பார்வை;  ஆக்கு -- கவனமுடன் நிற்பாய் என்பது.  இது அரசர் காலத்தில் வழங்கியதாகத் தெரிகிறது. 

ஆங்கிலத் தொடர்கள், பாராக்கு என்பதன் மொழிபெயர்ப்பு. இது போன்ற கட்டளைகள்,  நீட்டி இழுத்து வெட்டுப்பட்டதுபோல் ஒலிக்கும்படி விடுக்கப்படுதல் வேண்டும். ப....ரா.........க்   என்பதுபோல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்