சனி, 10 டிசம்பர், 2022

சீயகங்கன் என்ற மன்னன் பெயர் தமிழ் ( சமகாலம் "நன்னூல்")

 இது ஒரு மன்னனின் பெயர்.  திரிபுப் பெயர் ஆகும்.

 சீரிய -   சீய  ( ஸ்ரீ ய,  ஸ்ரீஜ ).

சீய என்ற வடிவம் இடைக்குறை.(  மற்றவை கூடுதல் மேம்பாடு செய்யப்பட்டவை).

கங்கன்:  

இதிலுள்ள அன் விகுதி தமிழுக்குரிய ஆண்பால் விகுதி.

கங்கையன் >  கங்கயன் >  கங்கன்  (  யகரம் இடைக்குறை).

கண்+ கை + அன் >  கங்கையன்,  ஒப்பீடு:  கண்காணி >  கங்காணி.

மேலரசர்க்கும் மக்கட்கும் கண்ணும் கையுமாகப் பயன்படு ஆட்சியன்.

சீரிய கங்கையன் >  சீயகங்கன்.

ஒப்பீடு:

ஆர்+இய >  ஆரிய  > ஐய  இதுபோல் சீரிய >  சீய.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வேங்கடமும் குடமும்.

 சொல்லமைப்பில் இவ்விரண்டு சொற்களுக்கும் மிக்கத் தொடர்பு உள்ளது.

அகரத் தொடக்கத்துச் சொல்,  உகரத் தொடக்கமாகும்  என்பதை  முன் இடுகைகளில் உணர்த்தியிருந்தோம். சொல்லாய்வுகளில் இதுபோலும் திரிபுகளை மறந்துவிடுதல் ஆகாது.  இவை நினைவிலிருத்தப் படும்வரை பயிலப்படுதல் வேண்டும்.  இவற்றையெல்லாம் நினைவு கூர்தல் கடினம் என்று நினைப்போனுக்கு,  இவற்றுடன் உள்ள தொடர்புறவு நீடிக்குமாறு ஓர் வழியில்லை என்பதறிக.

எடுத்துக்காட்டு:   அதழ் > இதழ்.   முறைமாற்றுத் திரிபும்  அதுவே. ( இதழ் - அதழ் எனினுமது ).

அதுபோலவே, கடம் என்பதும் குடமென்று வரும்.  ( அ - இ அல்லது இ-அ).

கடமென்பது  காடு அல்லது தாழ்வரு செடிகொடிகளும்  ( தாழ்வரம்> தாவரங்(கள்)  நிறைய வளர்ந்து  கடந்துசொல்லற்கு  இயலாமை போலும் ஓர் அரிய நிலையை உண்டாக்குமிடம்.  கடு > கடம்;  கடு > (முதனிலை நீண்டு) காடு என்று இச்சொற்களின் உறவு கண்டுகொள்க.

கடம்  மற்றும் குடம் என்ற இருசொற்களும்,  திரிபெழுத்துக்களால் உறவாயின என்பது மட்டுமன்றி.  பொருளிலும் தொடர்பு உள்ளவை.

குடத்திட்டவை,  அதைக் கடந்து செல்ல இயலாமையும் இச்சொற்களின் பொருளுறவு ஆகும்.  காட்டையும் கடத்தல் கடினம்.  குடத்தின் சுற்றுக்கட்டினையும் உள்ளூற்றிய நீரினால் கடந்து செல்ல முடியாது.  இங்கு முடியாது என்று நாம் சொல்வது,  மிகமுயன்றாலே முடியுமென்று பொருள்கொள்ளவேண்டும். 

மனிதன் காட்டைக் கடப்பதற்கு விடா முயற்சி தேவை.  நீருக்கோ இட்ட அரிசி முதலியவற்றுக்கோ,  நிறைவடைந்தாலன்றிக் கடத்தல் இயலாது.  நிறைவு கொண்டாலும், குடவாய் கடக்கும் நிலை எய்தினாலன்றிக் கடக்க இயல்வதில்லை.

கடம்  - மலைச்சாரல் -  அடிப்படைப் பொருள்:  கடக்கக் கடினம்,

குடம் -  குடவாய் கடக்க நிறைந்தாலன்றி,  கடக்க இயலாமை.

வேங்கடம் என்பது வேகும் அளவு வெப்பமிகை உணர்த்துகிறது.

வேகு கடம் என்பவற்றில்,  கு என்னும் வினையாக்க விகுதியும் கெட்டது. மூளையற்றவன் தான் விகுதிகளைக் கட்டி மாரடிப்பவன். இன்னொரு சொல்லிருந்து உதவுமா என்பதே கேள்வி. இல்லையேல் இல்லை பயன்.

இனி,  குடம் எனற்பாலது,  குடைவாகவு மிருத்தலால்,  குடை + அம் > குடமாகும். பகுதியும் விகுதியுமிணைய,  ஈற்று ஐ  கெட்டது.   கடு > குடு> குடம் என்றும் விளக்கலாம். வேறு சொல் அமையுங்கால்,  விகுதிகளை விடாமல் வைத்திருத்தல் சில வேளைகளில்  வேண்டற்பாலதால்.   குடையம் என்று ஒரு புதுச்சொல் அமைக்கையில் வேறுபடுத்த,  அதை வைத்துக்கொள்ளலாம்.  

வாத்தியக்குழுவில், குடம் கடமெனப்படும்.  இது Gadam  அன்று.  கடம் தான். எடுத்தொலித்தல் தவிர்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


குமாரி என்ற சொல்.

 கொம்மை என்பது  ( கொம் )  ஓர்  அடிச்சொல் ஆகும்.

ஒரு சொல்லின் உறவுச்சொல்லைக் கவனித்தால் பொருள் தெளிவாகிவிடும்.

கொழு என்ற சொல்லிலிருந்து கொழுப்பு.  கொழுமை என்ற சொற்களும்,  கொழுத்த,  கொழுவிய என்ற சொற்களும் வருகின்றன.  "கொழுவிய வாத்து,  ஆற்று நீரில் விழுந்துவிட்டது"  என்பது ஒரு வாக்கியம்.

கொழு கொழு என்று இருந்தவள்,  கோவிட்டுக்குப்பின் இளைத்துவிட்டாள் என்பது இன்னொரு வாக்கியம்.

கொழு  >  கொழுமை.

கொழுமை >  கொம்மை.   இதிலிருந்து   " ழுகரம் " நீங்கினால்  கொம்மை.  இதனமூலம்,  பொருள் தெளிவாகிவிடுகிறது.

கொம் >  கும். உருண்டு திரண்ட சதைப்பிடிப்புள்ள தன்மை.  இது இளம் வயதினர்க்கு உள்ளதாகும்.

கும் >  குமரன்  > குமரி.

இவை இருக்கட்டும்.  குமாரன், குமாரி என்பன காண்போம்.

கும் -  உடல்திரட்சி உடைமை.

ஆர் -  நிறைவுடைமை.

கும் + ஆர் + இ  >  குமாரி.   இளையவள்.  கொழுகொழு வென்னும் உடலள்,  திருமணம் ஆகாதவள்.

குமாரன் என்பது ஆண்பாற் சொல்.

பிற வகை விளக்கங்களும் உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.