சனி, 17 செப்டம்பர், 2022

சின்னப் பிள்ளை

 இது தார்சா  பிள்ளையின் படம்.  ( கீழ்வருவது இன்னிசை வெண்பா)

அம்மாவைப்  போலொரு கைப்பையைத் தானெடுத்துச்

சும்மா சுழன்றுவரப் போகிறேன் என்கின்றாள்

இம்மா நிலத்தே இதுவும் அறிகபெண்ணே

உம்மால் இயலாமை இல்.

தான் எடுத்து - தான் கையிற் பிடித்தபடி

சுழன்றுவர -  ஊர்கோலம் செல்ல

இம்மாநிலத்தே -  இவ்வுலகில

உம்மால் - உன்னால் என்பதன் பன்மை

இயலாமை -  செய்ய முடியாத எதுவும்

நீ  திறமைசாலி என்பது கருத்து.



தார்சா படத்தில்.



வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நீர் என்ற சொல் தமிழ்

 பனி என்பது அருவிபோல் ஓரிடத்தில் ஊற்றி, வீழ்ச்சி அடைவதில்லை. விரிந்த நிலப்பகுதியில் பரவலாகச் சிறு சிறு துளிகளாகிக் கீழிறங்குவது.  ஆகவே,  துளிகள் பலவாகிப் பெய்வது ஆகும்.  இக்கருத்தில்,  பலவாய்ப்  பரவி வீழ் துளி என்பதால் பல் என்ற சொல் தொடர்புபட்டு நிற்கின்றது.

பனியும் ஒருவகை நீர் தான்.  ஆகவே இது பல் + நீர் =  பன்னீர் ஆகிறது.  பன்னீர் எனின் பலதுளிநீர் என்பதுதான்.

கடையில் விற்கும் புட்டிப் பன்னீர்,  செயற்கை முறையில் ஆனது ஆகும். இதற்குப் பன்னீர் என்பதுதான் பெயராய் வழங்கிவருகிறது.

இரவில் பெய்யும் நீரும்  "பல துளிகள்" தாம்.  ஆகவே பொருளைப் பின்பற்றிச் சொல்வதானால், அதுவும் பல் நீர்.  இவ்விரு சொற்களும் கூடி,  பல்நீர் >  பன்னீர்> பனி ஆயிற்று.  இறுதி ரகர மெய்யெழுத்து மறைந்தது.  பன்னீ(ர்)"   > பனி ஆயிற்று.

தண்ணீர் என்பது "தண்ணி" என்று பேச்சுவழக்கில் வருவது போலும் இங்கு ரகர மெய் வீழ்ந்தது.  இடைநின்ற   னகர ஒற்றும் குறைந்தது. "0னீ" என்பதும் குறுகி, "0னி" ஆனது.  நாலெழுத்துக்கள் குறுகி அமைந்து இரண்டு ஆனதில் மூன்று திரிபுகள் உள்ளன.

இரவில் பெய்வது நீரே ஆனாலும் அதைப் பனி என்பது சிறப்புப் பொருளது ஆகும். குளத்து நீர் வேறு; பெய்யும் பனி நீர் வேறு என்று நாம் கருதுவது இதற்குக் காரணமாகும்.  இச்சொல் வெளிமாநில மொழிகளில் பாணி என்று நீண்டொலித்து, பொதுப்பொருளில் வழங்குவதைக் காணலாம்.  தமிழில் வழங்கும் சில சிறப்புப் பொருட்சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருளில் வழங்கும்.  இதற்கு மாறாக, வெள்ளம் என்ற நீர்ப்பெருக்கைக் குறிக்கும் சொல், மலையாள மொழியில் தண்ணீர் என்ற பொருளில் வழங்கக் காணலாம். தமிழில்போல சமஸ்கிருதத்தில் நீர் என்பது பொதுப்பொருளில்தான் வழங்குகிறது.

நிலம் இறக்கமாக உள்ள இடத்தில் நீர் நில்லாது ஓடுவது ஆகும்.  ஆனால் சமதரையில் உள்ள நிலக்குழியுள் அடங்கி நின்றுவிடும்.  ஆகவே அதன் நிற்கும் தன்மை கருதி,

நில் >  நிர் > நீர்  ஆயிற்று.

இதை,  முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்று கருதவேண்டும்.  முதலெழுத்து நில் > நீல் என்று நீண்டு,  பின் லகர - ரகரத் திரிபாக  நீர் என்று ஆனது,  ஓடை என்பதும் நீர்தான் என்றாலும் அது ஓடுகின்ற நீர் என்று அறிக.   நீர் என்பது ஓடாத நிலையினது ஆகும்.  இது மிகப் பழைய சொல்லாதலின்  அதன் பொருள் இப்போது சிந்தித்தாலே வசமாவது காண்க.

இதிலிருந்து தமிழன் நீரை அறிந்தது அது நிற்கும் நிலையில் என்பது தெளிவாகத் தெரிகிறது.  தமிழின் சிறப்பு என்னவென்றால்,  பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழின் சொற்பொருளை இன்றும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது என்பதுதான்.

பண்டைத் தமிழன், அகத்தியனாரின் பல்லாயிரம் ஆண்டு முன்வாழ்ந்தவன், கடலில் இறங்கினால் இறந்துவிடுவேன் என்று அஞ்சினான்.  அதனாலே அது கடத்தற்கு அரிது என்று கருதி, அதைக் கடல் என்றான்.  ( கட அல் ).[ கடத்தற்கு அல்லாதது ]  அப்புறம் மிதப்புவீடு செய்து, அதைக் கடப்பல் என்றான்.  இதில் டகரம் இடைக்குறைந்து அது கப்பல் ஆனது.  கடப்பல் உண்மையில் ஒரு கடப்பலகை ( கடக்கும் பலகை) ஆகும். இவ்வாறு மிதவூர்திகள் பல உள்ளன.   அவற்றை இங்குக் கருதவில்லை.  இரும்புக் காலத்தின் முன் மரங்களே இவற்றை அமைத்தற்குப் பயன் தந்தன.  வினைத்தொகையில் வலிமிகாது. இந்த விதி அமையுமுன் கப்பல் என்ற சொல் திரிந்து அமைந்துவிட்டது என்பது உணர்க. மேலும் இது மக்கள் அமைத்த சொல்.  கடவுதல் என்பது செலுத்துதல் என்றும் பொருள்தரும்.  கடவுப்பலகை > கடப்பலகை > கடப்பல் > கப்பல் என்று அமைதலும் அது. பலவழிகளில் இதை நிலைநிறுத்துதல் கூடும்.

நிற்பது நீர் ஆதலின், இது தமிழாதல் பெற்றாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நிறுத்தக் குறிகள் சேர்க்கப்பட்டன: 18.9.2022  0330


வியாழன், 15 செப்டம்பர், 2022

நாடு + அன் சொல்லாக்கம்.

 தமிழ்ப் புணரியல் இயல்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது ஒரு முதன்மை வாய்ந்த செயலாகும்.

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வாக்கியத்தில்  நாடு + இல் ( இது இல் என்ற வேற்றுமை உருபு )  என்று புணர்த்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இது உண்மையில் " நாட்டில்"  என்றுதான் வரும்.  நாடில் என்று வருவதில்லை.  இவ்வாறே வேற்றுமை உருபு இல்லாதவிடத்தும், எ-டு:  நாடு+ ஆர்  எனில், நாட்டார் என்றே வரும்.  " நான் பேசினாலும் நாட்டார் பேசக் கூடாது " என்ற வாக்கியத்தின் மூலம் இதை உணரலாம்.  நாட்டைச் சேர்ந்தவர் " நாட்டார்".    இது நாடார் என்று முடியவில்லை.  நாம் " நாடு" என்ற இடப்பெயரைப் பற்றி இப்போது விரித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

இனி  அவன், அவர் என்று பொருள்படும்  அன்,  அர், ஆர் என்ற விகுதிகள் பொருந்திய சொல்லாக்கத்தினைக் காண்போம்.

நாடு +  ஆன் >  நாட்டான்.

[  கடன் வாங்குவதானால் நாட்டானிடம் வாங்கக்கூடாது ---  வாக்கியம் ]

நாடு + அன்  > நாடன்.

ஈர்ங்குன்ற நாடன்  ( குளிர்ச்சி பொருந்திய நாட்டை உடையவன் )

நாடு + ஆர் >  நாட்டார்.

இது ஒரு பட்டப்பெயர்.  இது நாடு + ஆர் என்றவை புணர்ந்தெழுந்த பட்டம்.

நாடு  + ஆர்

இதுவும் ஒரு பட்டப்பெயர்.  நாடு ஆர் > நாடார் ஆனது.

வாக்கியம்:  காமராச நாடார் பெருந்தலைவர்.

நாடு+ ஆர் என்பதுமட்டும் மூன்று வகைகளில் புணர்ந்து சொற்களை உண்டாக்கி உள்ளது.

மொழிக்குச் சொற்கள் தேவைப்படுகையில், இரட்டித்தும் இரட்டிக்காமலும் சொற்கள் உருவாக்கப்படும்.  இதில் புணரியல் விதிகள் கருதப்பட மாட்டா என்பதை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.