பரமாணர் என்ற சொல் இப்போது நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலோ பேச்சு வழக்கிலோ இல்லை. ஆனால் இதன் உள்ளுறைவுகளான : பரம் என்பது உள்ளது. மாணர் என்பதில் மாண் ( மாண்பு) என்பதும் உள்ளது. அர் என்ற விகுதி பல சொற்களில் இறுதியாக வருகிறது. எனவே, இது அறவே எண்ணிப்பார்க்க முடியாத சொல்லன்று. இப்படி ஒரு சொல் இருந்திருக்க, வாய்ப்புகள் உள்ளன என்பது தெளிவாகிறது. எளிதில் அதை மீட்டுருவாக்கம் செய்ய முடிகின்றது.
பரமாணர் என்போர், கடவுட் சேவையில் சிறந்து ( மாண்புற்று) வாழ்ந்தோர் என்ற பொருளும் தெளிவாகவே கிட்டுகின்றது.
தமிழ் தோன்றிய காலத்திலிருந்து அதில் அழிந்துவிட்ட இலக்கியங்களும் சொற்களும் மொழிப்பயன்பாடுகளும் எண்ணிலடங்காதவை என்பது தெளிவு. பெயர்கள் மட்டும் நாம் அறிந்த இலக்கியங்களும் புலவர்களும் மிகுதி. அகத்தியம் என்று பெயர் தெரிகிறது, நூல் கிடைக்கவில்லை அல்லவா? இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கின்றன என்று நீங்கள் வெளியில் எடுத்தெறிந்து விடுகிறீர்கள். மற்றவர்களும் எறிந்துவிடுகிறார்கள். யாரும் காத்துவைக்கவில்லை என்றால், அவை அழியத்தாம் செய்யும். ஆகவே, ஏதேனும் ஒரு நூலில் பரமாணர் என்ற சொல் இருந்திருக்கலாம்.
பிரமாணம் என்பது மாணம் என்று முடியும் சொல், அது உள்ளது. பரிமாணம் , பரிமாணனார் என்பன உள்ளன. எனவே மாணம் என்று முடியும் சொல் தமிழில் இல்லை என்று கூறிவிடல் இயலாது.
ஐந்து நில வகைகள் தமிழில் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றில் வாழ்ந்தோர் இடையர். முல்லை நிலத்தார். அவ்வாறே, மலையில் மட்டும் வாழ்ந்தோர் குறவர். இவ்வாறு ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்தோர், அதற்குரிய பெயருடையவராய் அறியப்பட்டனர்.
பரமாணர் என்போர், எங்கும் பரந்து வாழ்ந்து பரமன் போலவே, அறியப்பட்டோர்.
இச்சொல் காணாமற் போய், அதுவே இன்று பிராம்மணர் என்று வழங்குகிறது என்று அறிந்துகொள்வது எளிதாம். பரந்து எந்நிலத்திலும் வாழ்ந்தோர். பிரம்மத்தை உணர்ந்தோர் என்ற விளக்கம் பிற்பட்டதாகும். உணர்வின் காரணமாகப் பெயர்பெறுதலென்பது, அவ்வளவு எளிதன்று. உணர்வு என்பது காண்பொருளன்று. அருவமானது ஆகும். இடம் பொருள் முதலியவற்றால் பெயர் பெறுதலே பெரும்பான்மை. இவ்வாறு நோக்கின், பரமாணர் என்பது எளிதாய்ப் பொருந்துமொரு சொல். இச்சொல்லிலும் மாண் என்பது அருவமானது என்றாலும், அவர்கள் எந்நிலத்திற்கும் உரியராய் இருந்தனர். இதுவேபோல், பரையர் ( பறையர்) என்போரும் எந்நிலத்திலும் வாழ்ந்தோர் ஆவர்.
பெருமானார் > பிராமணர் என்பதிலும் பரமாணர் > பிராமணர் என்பது அணுக்கமுடையதாகும்.
அறிக மகிழ.
மெய்ப்பு பின்னர்.