செவ்வாய், 26 ஜூலை, 2022

நலம்பெற்று வீடு திரும்புக.

 விரைவில் நலம்பெற்று, 

வீட்டுக்குத் திரும்பிவந்து,

விழைந்தபூ வனங்களிலே

கரையில் மகிழ்விலேறி

கன்னித் தமிழேகூறி

காலமே  வென்றுவாழ்வீர்!


கரை -  எல்லை.

கரை இல் -  கரையில் - எல்லையற்ற.


வணக்கம்.




 

இலஞ்சம் தமிழில்

 ஓர் அதிகார வட்டத்தில்,  இல்லை என்று சொல்ல அஞ்சி  மறுக்காமல்   வாங்கிக்கொள்ளும்  செயலும், கொடுக்கும் செயலுமே இலஞ்சம் ஆகும்.

சொற்கள்:

இல்   ( இல்லை எனல்).

அஞ்சு   (  அச்சம் வெளிப்படுதல் ).

அம் -  நிலைமையும் ஒத்துப்போதல் அல்லது அமைதல்.

எல்லாம் சேர்த்தால் இலஞ்சம் ஆகும்.  தலை எழுத்தை நீக்க, லஞ்சம் ஆகும்.

கொடுக்காவிட்டால் கேட்பது நடைபெறாது என்று அஞ்சுவதும் அச்சமே.

பலவகை அச்சங்கள் உள்ளன.

எல்லாரும் வாங்கும் இடத்தில் நீங்கள் வாங்கவில்லை என்றால் உங்களை ஊறுகாய் போட்டு உள்ளே அனுப்ப்பிவிடுவார்கள் மற்ற ஊழியர்கள். அதுவும் அச்சத்தையே ஏற்படுத்தும்.

கொடுக்காவிட்டல் தம் வேலை நடைபெறாதெனலும் அச்சமே.

தேர்தல் சமயத்தில்,

இல்  -  இல்லை வெற்றி என்று,

அஞ்சு -  அச்சம் கொண்டு,

அம் -  ( பணம் கொடுக்கும் அமைவும்)

அதுவாகும்!

அச்சம் அனந்தம்! எல்லாம் எழுதமுடியாது. கைவலிக்கும்.

லஞ்சம் என்று வரும் இலஞ்சம் பலவகையில் அவிழ்க்கக்கூடிய ஒரு முடிப்பு. முன்னர் வந்த கருத்துக்களும் உள.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 25 ஜூலை, 2022

உடம்படு மெய்கொண்டு வெவ்வேறு சொற்கள்.( தலையன், தலைவன்)

goog_1596888458 சங்ககாலத்தில் மக்கள் அனைவரும் இடம்நோக்க ஒன்றாக வாழ்ந்தனர் என்று கொள்வதற்கில்லை. மலைவாழ்நன் குறவன் எனப்பட்டான். ஆனால் விளைச்சல் நிலமுள்ள பகுதியில்  வாழ்ந்தவன்  ஊரன் என்றும் பிறபெயர்களாலும் அறியப்பட்டான். அங்குத் தண் துறைகள் இருந்தன.  இதனால் இவனைத் தண் துறை ஊரன் என்று கவிகள் சிறப்பித்தனர்.  துறையன் என்ற சொல்லும் வழக்குக்கு வந்தது.  இவர்கள் வேளாண்மை விளைச்சலில் ஈடுபடுபட்டவர்கள்தாம்.  கன்னடர் சிலர் கோவைப் பகுதிகளில் அமர்ந்து வாழத் தொடங்கிய காலை,  துறையர் என்ற  பெயர் அவர்களுக்கு உரித்தாக்கப் பட்டு, பின் ஒரு சாதியாகவும் மாறிவிட்டது!  நெய்தல் நிலத் தலைவனுக்கு  இதே அடியிற் பிறந்த துறைவன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.  ஆக:
துறை > துறைவன்,
துறை >  துறையன் 
என்று இருவேறு விதமாகச் சொற்கள் அமைந்தன.  ஒன்று யகர உடம்படு மெய் கொண்டு அமைந்தது.
தலை என்ற சொல்லினை அடியாய்க் கொண்டு அமைந்த சொல்லினின்று " தலைவன்" என்ற சொல் அமைந்தது.  அவ்வடியிலிருந்து  தலையன் என்ற சொல்லும் அமைந்தாலும்,  " மாங்காய்த் தலையன்,  பலாக்காய்த் தலையன், மொட்டைத் தலையன்,  சொட்டைத் தலையன்"  முதலிய வழக்குகளில்  இஃது ஒட்டாகவே வந்தது.  சட்டித்தலையன் என்று ஒருவகை மீனும் கடுக்காய்த் தலையன் என்று ஒருவகைப் பாம்பும்  பெயர்பெற்றன.  சற்று நீட்டலாகத் தலையாரி என்ற சொல்லை அமைத்துக்கொண்டனர்.
வலைகொண்டு உயிர்களைப் பிடித்து வாழ்ந்தவன்   வலையனென்று பெயர்பெற்றனன்  எனினும்,  வலைவன் என்ற சொல்லும் அமைந்து சொற்பெருக்கம் ஏற்பட்டது.
கலைவன், கலையன் என்ற சொற்கள் அமைப்புறவில்லை.  இவற்றை இன்னும் பயன்படுத்தாமல் இருப்பதால் எதிர்காலத்தில் ஏற்ற வழியில் அவை ஒரு புதுப்பொருளுக்குப் பெயராய் அமைய வசதி உள்ளது.
உடம்படுமெய்களை மாற்றுவதன் மூலமே இவ்வாறு ஓர் அடியினின்று
 ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் கிட்டி, மொழி வளம்பெற்றது காணலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்