செவ்வாய், 14 ஜூன், 2022

மினிட்டும் செகண்டும் தமிழ் மூலங்களுடன் ஒப்புமை,

 மிகுந்த சிந்தனையில் ஈடுபடாமலே மிக்க எளிதாக, " மினிட்" என்ற ஆங்கிலச் சொல்லின் அமைபு பற்றி நாம் உரையாடலாம்.

தமிழில் நாம் நிமிடம் என்று சொல்கிறோம். இச்சொல் மற்ற இந்திய மொழிகளிலும் சொல்லக்கேட்கிறோம்.  ட என்பதற்குப் பதில் ஷ இருக்கலாம்.

மேலும் செல்லுமுன் இதைச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.

https://sivamaalaa.blogspot.com/2017/05/for-minute.html

இப்போது நிமிடம் :  இதில் அம் விடுபட்டால்  நிமிட்.

இதில் முதல் இரண்டு எழுத்துக்களை முறைமாற்றினால்:  நிமிட்> மினிட் என்று  மாறிவிடும்.

"வழக்கில் புல்லைச் செத்தி எடுத்தல் என்பதுண்டு.  செத்தி > செதுக்கி.

செகன்ட் என்பது  செத்துண்டு, செக்குண்டு ( செகு+உண்டு). ஒப்புமைசெய்யத் தக்க வடிவங்கள்.

வெட்டுண்ட கைகள் வேதனை கொண்டேனே

விதிவசத்தால் இந்த கெதியை அடைந்தேனே

இந்தப் பாடல் வரியில் உண்டு என்ற துணைவினை வருவதுபோலவே,  செக்குண்டு என்பது.

இலத்தீனில் "செக்குண்டா" என்பது வெட்டுண்டது என்னும் பொருளது. இது பெண்பால் வடிவச்சொல்; ஆண்பால் சொல்: செக்குண்டஸ் என்பது.

இவை மிக்க அணுக்கமுடையனவாயும் ஆய்வுக்குரியனவாயும் உள்ளவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 13 ஜூன், 2022

தாடி, தவ்வு, தாடகை

 தவ்வு என்பது இப்போது இப்போது ஓர் அரும்பதமாகவே தோன்றுகிறது. இதை தடு என்ற வினையிலிருந்து அறிந்து போற்றலாம். 

தடுத்தல்  வினை.

தடு > தடுப்பு  ( பு விகுதி),  தடை ( ஐ விகுதி), தடங்கல் ( தடு+ அம்+ கு+ அல்,  இரண்டு இடைநிலைகளும் ஒரு விகுதியும்).

வு என்பதும் ஒரு விகுதிதான்.  அறி -  அறிவு.

தடு > தடு+ வு>  தடுவு.

டு என்பது இடைக்குறையாக,  

தடு > தடுவு > த + வு > தவ்வு,   அல்லது  த(டு)வு> தவ்வு> தௌவு என்றும் எழுதினர்.

தாடி என்பதும் முகத்திற்கு ஒரு தடைதான். (குழந்தையை முத்தமிடத் தடை, வேறு தடைகளும் இருக்கலாம்).

தடு >  தாடு.  ( இது சுடு > சூடு என்பது போல).

தாடு +   இ >  தாடி. 


இனி இராமாயணத்தில் எப்படி தாடு என்பதிலிருந்து பிறந்த சொல் ஒரு பேயின் பெயராய் வருகிறது, காண்போம்.

தாடகை யாகம் இயற்றுவோரின் முயற்சிகட்கு ஒரு தடையாகவிருந்தாள்.

தாடு :  தடை.  தடுத்தல்.

தாடு + அகம் + ஐ.

அகம் என்பதை அக என்று குறைக்க,

தாடு + அக+ ஐ  > தாடகை ஆகிறது.

தவமியற்றும் இடத்தில் இருந்துகொண்டு ( "அக")  தடைசெய்யும் பேய்.

வான்மிகி ஒரு சங்கப்புலவருமாவார். இராமாயணத்தில் பல பெயர்கள் தமிழ் மூலம் உடையவை.


துர்க்கையம்மனைச் செவ்வாய்க்கிழமை தொழுதல்.

 ஒவ்வொரு நிமிடமும் உழைப்பென்றாலும்

எவ்வாறேனும் தொழுதல் இழைக்கநின்றார்;

செவ்வாயில்  சிறிதுகாலம் பசித்திருந்தார்

ஒவ்வாதன யாவையும் ஒசித்துவீசி, 

செவ்வானில் பகலோனின் ஆட்சிக்காலில்


தவ்வழிக்கும் துர்க்கையம்மை  மாட்சிகண்டார்.


செவ்வாய் - செவ்வாய்க்கிழமை

ஒசித்துவீசி  -  களைந்து எறிந்துவிட்டு.

பசித்து -  உண்ணாமை கடைப்பிடித்து

ஆட்சிக்காலில் -  ஆளும் காலத்தில், அதாவது ஒளிவீசிக்கொண்டிருக்கையில்.

தவ்வழிக்கும் -  கெடுதல் நீக்கும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.