வெள்ளி, 25 மார்ச், 2022

இன்பம் என்பதன் வகைகள் - அவற்றின்மேல் மனம்

 




வெண்ணெய் உரொட்டி என்பது சிங்கப்பூரில் பலர் 

விரும்பி எடுத்துக்கொள்ளும் "சீஸ்ப்ரட்ப் " என்னும் வகையில்

உள்ளது ஆகும். இந்த நாற்காலியின்மேல் நெகிழிப்பைக்குள்

இரண்டு உரொட்டிகள் உள்ளன. படத்தில் காணுங்கள்.

இது கடிப்பதற்கு மென்மையான உரொட்டி ஆகும்.

தொடக்கத்தில் உரொட்டி ( ரொட்டி) செய்தவர்கள், ஓர்

உருவில் செய்து  ( சப்பட்டை வட்டமாக) அதைச் சூடான இரும்பு தகட்டில் 

ஒட்டிச் செய்தார்கள்.  உரு+ஒட்டி என்ற இரண்டு சொற்களும்

இணைந்து  உரொட்டி > ரொட்டி ஆகிற்று.  இது மலாய் சீனமொழிகளிலும் 

பரவிவிட்ட சொல் ஆகும்.  தலையிழந்த சொல். இவ்வாறு பலவுள.



வெண்ணெய்ரொட்டி   தின்றவர்க்கு வேறே  இன்பம்----- மொருகி

வெந்ததோசை தின்றவர்க்கு வேறே இன்பம், 

கண்ணும்வேறு பாடுசொல்ல வார்த்தை இல்லை ----வாயால்

கழறுகின்ற போதில் பிறிது சொல்வதே இல்லை.


குட்டை குளிக்  கின்றவேளை  வேறே இன்பம்  ----- அதில் 

மட்டை கிடப் தாயின் அதற்கும் இன்பம் உண்டோ?

நெட்டை குட்டை ஒன்றுதேனே குடிப்ப தாயின் ---  அதில்

கிட்டுமின்பம் ஒன்றுதானே வேற்றுமை இல்லை.


எந்த ஊணைக் கொள்ளும் எண்ணம் வந்தபோதும் ----  அதில்

இன்பம் என்று சொல்ல மனம் இடுதல் வேண்டுமே! 

உன்றன் நெஞ்சம் அந்த ஊணில் இல்லை என்னிலே ---- அது

இனித்தபோது கசத்தல்காணும் உண்மை ஞாலமேல்.


கண்ணும் வேறுபாடு -  கருதும் வேறுபாடு.

பிறிது -  மற்றது,  இன்னொரு வகையான இன்பம்.

நெட்டை - நெட்டையன், குட்டை - குட்டையன்.

ஒன்று தேனே -  தேன் என்னும் ஒன்றையே

ஊண் - உணவு

மனம் இடுதல் -  இட்டம் (  இடு அம் )

ஞாலம் - உலகம்.


இன்பம் என்பதை வருணிக்க முடியுமோ?  வேறுபாடு அறியுமாறு வருணிக்க இயல்வதில்லை. இனிமை, நன்றாய் இருக்கிறது என்று சொல்லலாம். ஓர் இனிமைக்கும் இன்னோரினிமைக்கும் வேறுபாடு தோன்றும்படி வருணிக்கச் சொற்கள் இல்லை. இன்பம் தருவதாக இருந்தாலும், மன ஈடுபாடு இல்லாவிட்டால் அது துன்பமாகவே தோன்றுகிறது.  இட்டம் என்ற சொல் இதைத் தெளிவு படுத்தும்.  இடு +அம் = இட்டம். இதில் டகரம் இரட்டித்தது. தமிழ்நாட்டில் திசைக்கு ஒப்ப பொருண்மை,  சொல் ஒலிப்பு  மாறுபடும்.   தமிழ்நாட்டின் வடக்கில் இருந்தவர்கள்  இதனை இஷ்டம்,  இஸ்டம் என்றனர். வட எழுத்து எனப்படும் ஒலியை நீக்கிவிட்டால் அது தமிழ் என்பதை உணரலாம். இதைத் தொல்காப்பியனார் " வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ,  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்" என்றார்.  எழுத்தொடு - மீதமுள்ள எழுத்தொடு, அல்லது உரிய எழுத்தோடு" என்பதுதான் பொருள். சமத்கிருதம் தமிழனால் சாமி கும்பிடப் பயன்படுத்தப்பட்ட  பேச்சு முறை.  அதில் தமிழன்/ இந்தியன்  மூளையும் பயன்பட்டுத்தான் மொழி உருவானது.  வெள்ளைக்காரன் அதிலிருந்து சொற்களை மேற்கொண்டான். அது மேலை மொழியன்று. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 

வியாழன், 24 மார்ச், 2022

பெண்ணாசையில் மயங்கிய பேராசிரியன்

 

நேரிசை வெண்பா


ஆராய்ச்சிச் செம்மல் அருங்கலை ஆசிரியன்

நேராய்ப் புகழ்செறிந்த நிற்புணர்ந்த ---- கூரறிவோன்

ஆயினும் பாவாடை வாடைக் கறிவுகெடல்

மேய(து) உடுப்பலன்நோ வாம்.


ஆராய்ச்சிச் செம்மல் = ஆராய்ச்சித் தொழில்கொண்ட படிப்பாளி.

அருங்கலை ஆசிரியன் - கலைகளை மாணவர்க்குப் போதிப்போன்.

நேராய் - குற்றமற்ற முறையில்

புகழ் செறிந்த - புகழோங்கிய

நிற்பு - நிலை. ( நிற்புணர்ந்த - நிற்பு உணர்ந்த )

கூரறிவோன் --- கூர்மையான அறிவுடையோன்.

கெடல் - கெட்டுப் போதல்.

மேயது - உண்டானது.

உடுப்பலன் நோ - நட்சத்திர பலனால் வந்த துன்பம்.


இல்லை என்போர் பின்னூட்டம் இட்டு விவாதிக்கலாம். கருத்துரை இடுங்கள்.


இவ்வெண்பாவையும் அலகிடவும். செப்பலோசை பிழைத்தல்

தெரிவிக்கவும்.

இதற்குரிய செய்தியை இங்கு வாசித்தறியவும்

https://theindependent.sg/ex-ntu-researcher-took-upskirt-photos-of-400-women-over-2200-photos-found-from-2015-to-2021/


புதன், 23 மார்ச், 2022

விமான விபத்தில் இறந்தோர்க்கு இரங்கல்.


வெண்பா

நூற்றுமுப் பத்திருவர் நொய்விதாய்  மாய்ந்தனரே
காற்றில் பறந்தவா னூர்தி  கறங்கிவிழ, 
ஆற்றுமோ நெஞ்சம் அடுதுயர்காண் சீனாசெல்
கூற்றுவன் பேய்க்கூத்  தினை.

எங்கள் இரங்கல் மறைந்தோர் குடும்பத்தினர்க்கு.

நொய்விதாய் -  நொடியில்,  கறங்கி -  சுழன்று,   அடுதுயர் -  பெருந்துயர்.
கூற்றுவன் -  எமன். பேய்க்கூத்து - இரக்கமற்ற ஆட்டம்.
சீனாசெல் - சீனாவுக்குச் சென்ற.