தமிழினால் விளக்கவியலாத மொழிகள் உலகில் சிலவே என்பது எம் கருத்து ஆகும். இதை வாதிட்டுக் கொண்டிருப்பதைவிட, உடனே ஒரு அயற்சொல்லைத் தமிழால் விளக்கிவிட்டு அப்பால் சென்றுவிடுதல் நன்மை பயக்கும்.
இதற்கு குறு என்ற அடிச்சொல்லை எடுத்துக்கொண்டால், மனம் குறுகிய தன்மை என்று கொண்டு, அல் என்னும் தமிழ் விகுதியை இணைத்து, "குறுவல்" என்னும் சொல்லை உண்டாக்கிவிடலாம். கொடுமையாக நடந்துகொள்வோர் எவ்வாற்றானும் விரிந்த மனப்பான்மை உடையாரல்லர். ஆகையால் குறுவல் என்று நாம் உண்டாக்கிய சொல், ஆங்கில மொழியில் உள்ள குருவலென்பதுடன் ஒத்திசைந்தே செல்வது காணலாம். டு என்னும் விகுதியைக் கொடுத்து, "குறுடு" என்றாலும், பெரிதும் வேறுபடுதல் இல்லை. குறடு என்ற சொல்லும் தமிழில் உண்டு.
குருவல் என்ற ஆங்கிலச்சொல், crudelis என்ற இலத்தீனிலிருந்து போந்ததாகவே மேலையரும் கொள்வதால், "குறுடு" "குறடு" என்பவற்றினின்று ம் தொலைவில் இல்லை.
கொடிறு - கொறுடு என்பதில் எழுத்துமுறைமாற்று அமைப்பைக் காணலாம். வெளிநாட்டு மொழிகட்குத் தொடர்பொன்றும் இல்லாமலே இத்தகு முறைமாற்றுச் சொல்லமைவு தமிழில் காணப்படுகிறது.
ஆங்கிலச் சொல்லமைவு, குருவல் என்பதில் கரடுமுரடான தன்மை என்ற கருத்தடிப்படையில் சொல் எழுந்ததாகச் சொல்வர்.
கொடுமை குறிக்கும் பொருண்மை, வளைவு என்பதே. தமிழர் நேர்மை, கொடுமை என்று எதிர்க்கருத்துக்களை உணர்ந்துகொண்டனர். கொடுங்கோல் என்பது கோல்வளைவு குறிக்கும். தமிழில் கோடு என்பதே வளைவு என்பதுதான். கொடைக்கானலில் பொருட்கொடை குறிக்கும் தன்மை எதையும் கண்டுபிடிப்பதை விட, கொடு - வளைவு என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். கொடு - வளைவு, கொடு ஐ . > கொடை, வளைவு என்று அறிய, அங்கு சென்று பார்த்தாலும் வளைந்த மலைகள் இருத்தலைக் கண்டுகொள்ளலாம். நாம் வழங்கும் கொடை என்ற சொல்லுடன் ( நன் கொடை) இது மாறுபடுவதாகும். நல்+கொடை > நன்கொடை.
நாட்டின் கொடியும் வளைந்து வளைந்து காற்றிலாடுவதுதான். கொடு > கொடி ஆகிறது. பண்டைத் தமிழர் ஒன்றை ஒருவற்குக் கொடுக்கும்போதும் வளைந்தே கொடுத்தனர். இவ்வாறு உண்டானதுதான் கொடுத்தல் என்னும் சொல்.
இவற்றைப் பின்னொருகால் தொடர்வோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
சில திருத்தங்கள்: 20032022 1330