தொல்காப்பியத்தின் பாயிரத்தில் பனம்பாரனார் ஓர் அறிமுகச் செய்யுள் இயற்றியுள்ளார். அறிமுகச் செய்யுள் என்று இற்றை மொழியால் நாம் குறிப்பிடுவதை, "பாயிரம், முன்னுரை, அணிந்துரை..." என்று பல பெயர்களால் முன்னோர் அழைத்தனர்.
ஒரு முதற்செய்யுளிலே, அவர் பெரும்புலவர் என்பது தெரிகிறது. அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் வேறு எந்தச் செய்யுளையும் யாம் கண்டதில்லை. இருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டம் இட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தமிழ்மொழியின் ஈடு இணையற்ற பெருநூலுக்கே முன்னுரை வழங்கும் பெருமை பெற்றவர், தொல்காப்பியனாரைப் போலவே பெரும்பாவலராய் இருந்திருக்கவேண்டும்.
"புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்" என்று மோனைநயத்தோடு பாடுகிறார். புலம் - தாம் ஆய்ந்து கண்டவை; தொகுத்தோன் - அப்படிக் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் சொல்லாமல் தமிழை அறிந்துகொள்ளத் தேவையானவை மட்டும் சொல்லுதல் மேற்கொண்டோன். போக்கு என்றால் குற்றம் குறைகள். போக்கறு பனுவல் என்றால் எந்தக் குற்றங்களும் காணவியலாத பனுவல். இவ்வாறு பனம்பாரனார் தொல்காப்பியரையும் அவர்தம் பனுவலையும் புகழ்கிறார். எதற்குப் புகழ்கிறார், தமிழை அறியாத பலர் அறிந்து கொள்ள ஊக்கமளிக்கிறார்.
இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தக்காரரான தொல்காப்பிய முனிவர், ஐந்திரம் நிறைந்தவர் என்று பனம்பாரனார் தெரிவிக்கிறார். அதாவது ஐந்திரம் என்பவை யனைத்தும் முற்றக் கற்றவர் என்று தொல்காப்பியரைப் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
இங்கு, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரென்ற சொற்றொடர் தொல்காப்பியருக்கு அடையான ( qualifying or modifying the name Tholkaappiyar) ஒன்றாக வருகிறது. தமிழ்மொழியின் அடையாக வரவில்லை.
பெரும்புலவரான கா. சுப்ரமணியப் பிள்ளை, தமிழ் மொழியில் ஐந்திரம் என்ற இலக்கணம் இருந்து அதைத் தொல்காப்பியர் முற்ற அறிந்தவர் என்ற கொள்கையை முன்வைத்தார்.
மற்றவை பின்பு.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.