செவ்வாய், 5 அக்டோபர், 2021

அஷ்டமி-த்தல் - அட்டமிழ்தல் - அற்றமிழ்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு என்கின்றார் குறளில் நாயனார்.  மாலும் என்றால் இதுவோ அதுவோ என்று மனம் மயங்கும் நிலை.  இங்கு மாலும் என்ற சொல்லை 100% பொருந்தப் பாடியிருக்கிறார் தெய்வப்புலவர். (ஏனையவிடத்திற் பொருந்திற்றில என்பது இதன் பொருளன்று. ).  இந்தச் சொல்லாட்சி காண்கின்ற காலை எம் நெஞ்சு மால்கின்றிலது., சரியான சொல்லாட்சியாதலின்.   பகலோ இரவோ என்று மனமயக்கம் தரும் நிலைதான் மாலை நேரம் என்பதும்.     மால் > மாலுதல் என்பது வினைச்சொல்லும் அதனடித் தொழ்ற்பெயருமாகும். 

மாலையில் மேற்றிசைக் கதிரவன் கீழிறங்குந்  தோற்றமே  அவன் ஒளியற்றுக் கடலில் அமிழ்வதுபோலும் மயக்கினை நமக்குத் தருவதாகும்.  அற்று அமிழ்கிறான்!   அதுவும் கடலுக்குள்!   கரையோரம் நின்று காணுங்கள்.  இரைக்குப் பறந்து திரிந்த  பறவைகள் கூடுசெல்லும் நேரமன்றோ!  கொஞ்சம் இலயித்திருங்கள் இக்காட்சியில்.

அற்றமிழ்தல் -  ஒளி குன்றி அமிழ்தல்.  குன்றி என்பதும் அற்று என்பதும்  நுண்பொருளில் வேறுபாடு உடையவை எனினும் அவை கதிரவன் கீழிறங்குங்கால் அடையும் இறுதிக்குச் சற்று முந்திய நிலையும் மற்று இறுதி நிலையுமாம்.  ஆகலின் இரண்டையும் ஒருசேர வைத்து நோக்குவோமாக.

அற்றமிழ் >  அற்றமி >  அஷ்டமி >  அஷ்டமித்தல்

இவ்வாறு சொல் (  அஷ்டமித்தல் ) பிறந்தது.

பகல்முழுதும் கதிரவன் உலக ஓட்டின் மேற்புறத்தினைக் காய்ந்தது ---- அட்டது:   அடுதல் என்றால் சூடேற்றுதல்,  சுடுதல்  என்று வெப்பநிலைகளைப் பலவாறு சிந்திக்கலாம்.  அற்று என்பதற்குப் பதில் அட்டு எனினும் ஒக்கும் காண்க.

அட்டமிழ் >  அட்டமி >  அஷ்டமி(த்தல்).

உலகை அட்டுவிட்டு க் கடலில் அமிழ்ந்துவிடுதல்..

சொல்லிலும் பொருளிலும் திரிபிலும் உள்ள நெருக்கத்தை உணரவேண்டும். இச்சொல் இருபிறப்பியாகும்.   இரண்டையும்  ஒன்றுக்குப் பிறிதொன்று மாற்றாகக் காணினும் முரண் எதுவுமில்லை.  முன் இடுகைகளில் மொழிக்கு மொழி சொல் தாவுகையில் திரிபுறு சுந்தரியாகச் சொல் மாறிவிடுகிறதென்பதை  விளக்கிக் கூறினோம். அதையும் மறுகாட்சி கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  

அடி ஆத்தி என்ற வியப்புக் குறிக்கும் சொல்/தொடர்

 ஆத்தி என்று பெண்பால் குறிக்கும்  ஒரு பின்னொட்டாக வரும்  என்பர். எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்படுவது  :  வண் +  ஆத்தி என்பதாகும்.

அச்ச உணர்வை அல்லது வியப்பைக் குறிக்க  ஆத்தி என்று சொல்வதுண்டு.  அடி ஆத்தி என்று இணைத்துச் சொல்வதும் உண்டு.

ஆதியந்தம் என்ற கூட்டுச்சொல்  ஆத்தியந்தம் என்று வருவதுமுண்டு,   வரின், வலி மிக்கு வந்ததென்க.  (வலித்தல் விகாரம் ).

உண்மையில் வீட்டிலுள்ள இன்னொரு பெண்ணை விளித்துச் சொல்லும்  சொல். அகம் + தி >  அகத்தி >  ( திரிந்து )   ஆத்தி ஆனது.  முதலெழுத்தை அடுத்து ஒரு ககர எழுத்து அல்லது அதன் வருக்கம் வந்தால்,  அ என்ற முதல்  ஆ என்று திரியும்.  எடுத்துக்காட்டு:  பகல் > பால்.  

அகத்தில் உள்ள இன்னோர் பெண்ணை  கூப்பிட்டுச் சொல்வது இது என்பது கூறினோம்.  அய்யன், அய்யா என்பது ஐயோ என்று ஓலமிடு சொல்லாக வருவதுபோலுமே  இதுவாகும்.

அகத்துக்காரி ஆத்துக்காரி போல வருவது இத்திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



திங்கள், 4 அக்டோபர், 2021

மனம் கசியும் இறைப்பற்று






 தூணில் அழகியதாய்ப் ---பார்த்துத் .

துய்ய  மனத்துடனே

காணின் மனமயங்கும் ---  கவினில்

கைகள் குவிந்திடவே,

ஊண்நீர்  விபூதிமலர் ----  சந்தனம்

உள்ளவை முன்வைக்கிறோம்,

மாண்புற வாழ்வுயரக் -----கண்ணீர்

மல்கக் கசிந்துருகி.

துய்ய  =  தூய.

குவிந்திட - கும்பிட.

ஊண்  - பிரசாதம்

கவினில் ---  கவரும் அழகில்

மாண - சிறப்படைய

மல்க -   சொரிய, 

கசிந்து --  கரைந்து நீர்வழிய

படங்கள் தந்துதவியவர்:  சிவக்குமார்.  லீலா

மற்றும் திருமதி சி  லீலாவின் ஆலய உபயப் படங்கள்:  கோவிட் காலத்தில், அது நீங்கும்படி வேண்டிக்கொண்டு நடாத்திய அவர்தம் ஆலயப் பூசைகள்:









கோவிட்டினால் அவர் குடும்பத்தில் இருவர் தவிர யாரையும்

இப்பூசைகளில் அனுமதிக்கவில்லை. என்று கூறுகிறார்.


முடிமுகி வீழ்த்திடுவாய் ----  அம்மையே

முன்னிகர் வாழ்வுபெற.

அடிமுடி யாருனையே ----  அறிந்தார்

அகிலத்து  நாயகியே!

குடிகளைக் காத்திடுதல் ---- துர்க்கா

கோதிலை  உன்கடனே!

படிமுன்  பயப்பற்றுடன் ---  நாங்கள்

பதம்பணிந்    --தோம் உண்மையாய்.


முடிமுகி    ---  கோவிட் நோய்

முன் நிகர் --  முன் போல நோயின்றி

அடிமுடி  --   ஆதியந்தம்

கோதில்  -  குற்றமற்ற

படிமுன் -  உன் வாயிற்படி முன்னே

பதம் = பாதம்.


சிவமாலையின் கவிதை.