சிலர் இப்போது உள்ள தமிழ் இலக்கண நூல்களைப் படித்து, அதன்கண் உள்ள விதிகட்கு உட்பட்டுச் சொல்திரிபுகள் காட்டப்பட்டுள்ளனவா என்று காண முனையலாம். ஆனால், இலக்கணம் என்பது மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்பிக்கும் நூல் என்று கா. நமச்சிவாய முதலியார் (1876 -1936) போன்ற ஆசிரியர்கள் உணர்ந்து சொன்னதே உண்மை. இலக்கணம் என்பது எவ்வாறு மொழியைத் திருத்தமாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு பேசவும் எழுதவும் செய்வது என்று தெரிவிக்கிறது. இலக்கணம் வேறு , சொல்லாய்வு வேறு. மேலும் ஒரு சொல்லைப் பிரித்து அதன் உள்ளுறுப்புகளை கண்டுபிடித்து எவ்வாறு அவ்வுறுப்புகள் புணர்த்தப்பட்டுள்ளன என்பதை இலக்கணம் தெரிவிக்காது. இலக்கணம் கூறும் புணரியல் முழுச்சொற்களின் புணர்ச்சி பற்றியது. சொல்லமைப்பில் வலி (வல்லெழுத்து )மிகவேண்டுமா, வேண்டாமா என்பது புணரியல் தெரிவிப்பதில்லை. ஒரு மொழியைத் திருந்தப் பயன்படுத்தக் கற்றுக்கொள்பவர் சொலாராய்ச்சியாளர் அல்லர். அவர் வெறும் மாணவரே. புணரியல் கூறும் நிலைமொழி, வருமொழி என்ற குறிப்புகள் ஒரு சொல்லினுள் இருக்கும் கூறுகள் அல்லது துண்டுகளைக் குறிக்காது. மொழி என்பது ( நிலைமொழி, வருமொழி என்ற சொற்களில் ) முழுச்சொல்லைக் குறிக்கும்.
தகு என்ற வினைப்பகுதி அகரத்துடன் சேர்ந்தால் தகு+ அ > தக்க என்றும் வரும். தக என்றும் வரும். தக என்பது வினை எச்சமாகப் பயன்படும். இரட்டித்த தக்க என்னும் எச்சம் பெயரெச்சமாகப் பயன்படும். ஆனால் இரண்டிலும் அகரம் சேர்ந்துள்ளது. அறு+ அம் என்ற சொல்லமைப்பு, அறம் என்று ஒருவகையாகவும் அற்றம் என்று இன்னொரு வகையாகவும் சொல்லாகும்.
இலக்கணம் என்பது ஒரு பேச்சுமுறை அல்லது மொழிக்குப் பிற்பட்டது. பேச்சுமுறை முதலில் தோன்றி, அப்புறம் அதில் ஓரளவு ஆய்வு செய்தவர்கள் இலக்கணத்தை உரைத்தனர். இதற்குக் காரணம் முன்னோர் பயன்படுத்தியவாறே மொழியை எளிதில் கையாளவேண்டும் என்ற நோக்கம்தான். இதைத்தான் மரபு என்று சொல்கிறோம்.
இலக்கணம் எழுதியவன் கண்டுபிடிக்காமல் விட்டதெல்லாம் இல்லை என்று நினைப்பது அறியாமை ஆகும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி என்று ஒருசில இலக்கண நூல்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும் அது தொட்டுச்செல்வது போன்றதுதான். அதனால் சொல்லாய்வு என்பது இலக்கணத்தின் ஒரு பகுதியாகிவிடாது. தொல்காப்பியமுனி, சொல்லின் பொருளும் காரணமும் பார்த்தவுடன் தெரிந்துவிடாது என்று மட்டும் சொல்லிவைத்தார்.
இலக்கணம் சொல்வது எல்லாம் சரியென்றால், அது சொல்லமைப்புக்கும் பொருந்துமென்றால்,
மக + கள் என்பது ஏன் மகக்கள் என்று வராமல் மக்கள் என்று வருகிறது. மக என்பது தானே பகுதி? மக் என்பதா பகுதி? மக என்பதில் இறுதி அகரம் அன்றோ? அ+ கள் : அக்கள் என்று வரவேண்டுமே. மக+ அள் என்பதும் மகவள் என்று வரவேண்டும், எப்படி மகள்?
ஏற்க முடியாது என்பவர்கள் நன்கு சிந்திப்பார்களாக.
மருந்து சாப்பிட்டவன் எல்லாம் பிழைத்ததுமில்லை, இலக்கணம் படித்தவன் எல்லாம் சரியாக உணர்ந்து மொழியை அறிந்ததுமில்லை. சிலரே அறிந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.