ஒரு வேலை இல்லாத மகனுக்கு அவன் தந்தை ஒரு நாளைக்குப் பத்து வெள்ளி செலவுக்குத் தருவதாகச் சொல்லியிருந்தார். அதைப் போய் மகன் ஒருவாரத்துக்கும் சேர்த்து எழுபது வெள்ளி பெற்றுக்கொண்டான்.. அதன்பின் அவனுடைய ஓர் உறவுப் பெண்ணிடம் பூ வாங்கிக்கொண்டு வரும்படி கூறினான். அவள் இரண்டு வெள்ளிக்கு ஒரு பைக்கட்டுப் பூக்கள் வாங்கிக்கொணர்ந்து கொடுத்தாள். அந்தப் பெண்ணின்மேல் அவன் அளவுகடந்த அன்பு வைத்திருந்தமையால், அந்த எழுபது வெள்ளியையும் "நீயே வைத்துக்கொள்" என்று அவளிடம் கொடுத்துவிட்டான்.
அதன்பின் அந்த மலர்களை இறைவனுக்குச் சாத்தி வணங்கினான். அப்போது தந்தை அங்கே தாளிகை படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அக்கணத்தில் எழுபது வெள்ளியும் போய்விட்டதே என்று தன் செயலுக்குத் தானே திடுக்கிட்டவனாய், அவன் தான் " இழந்த" எழுபது வெள்ளிக்கு ஒரு சிறு ஈடாக, "சாமிக்குப் பூப்போடப் பத்து வெள்ளி கொடுங்கள்" என்று தந்தையிடம் கேட்டான். தாம் முன்னரே எழுபது வெள்ளி ஒரு வாரத்துக்குக் கொடுத்துவிட்ட படியினால், அவர், உனக்கு "எழுபது வெள்ளி கொடுத்துவிட்டேன். அது ஒரு வாரத்துக்கு! வேறு காசு கொடுக்கமுடியாது" என்று சொல்லிவிட்டார்.. "இது சாமிக்கு" என்றான். அவர்: " எதற்காக இருந்தாலும் நான் கொடுத்ததை வைத்து நீ உன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்" என்றார்.
"இது சாமிக்கு அப்பா!" என்று அவன் வலியுறுத்த, "கொடுத்ததில் ஒரு சிறு தொகையைச் சாமிக்குப் பயன்படுத்த நீ கற்றுக்கொள்" என்று சொல்லி அவர் போய்விட்டார். அங்கு அவனுடைய நண்பன் ஒருவன் அப்போது வந்தான். "என்ன, முகம் வாடியிருக்கிறது" என்று கேட்டு, நடந்ததை அறிந்துகொண்டான்.
"எழுபது வெள்ளியை என்ன செய்தாய்? அதில் ஒரு சிறு பகுதியையாவது சாமிக்கு ஒதுக்கி இருக்கலாமே. இது உன்னுடைய மடத்தனம் தான். எப்படியும் சாமிக்கும் பூ போய்ச் சேர்ந்துவிட்டது! இனிச் சாமி பெயரைச் சொல்லி நீ எதுவும் கேட்டிருக்கக் கூடாது. சாமிக்கு வைத்ததற்கு இழப்பீடு வாங்குவது ஓர் அறியாமை ஆகிவிடும்.. அதை இழப்பு என்று கருதும் உனக்கு எப்படி அருள் கிட்டும்? உன் அப்பன் உன்னிடமோ யாரிடமுமோ 'சாமிக்குப் பூ வாங்கித் தருவேன்' என்று சொல்லவில்லை. அந்த ஒப்பந்தம் இறைவனுடன் உனக்கு உள்ள ஒப்பந்தம். அதை உருண்டு புரண்டு அழுது புலம்பியாவது நீ தான் நிறைவேற்றவேண்டும்! உன் அப்பா "இதைத் தருகிறேன்" என்று சாமியிடம் சொல்லி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பாளி. அவர் சொல்லவில்லை. இதற்குப் பிறரைப் பொறுப்பாளி ஆக்குவதற்கு உனக்கு இறைவன் எந்த அதிகாரத்தையும் தரவில்லை என்பதை நீ உணரவேண்டும்" என்று சொல்ல, அம் மகன் ஒன்றும் மறுமொழி சொல்லாமல் இருந்துவிட்டான்.
ஒரு நாள் கழித்து அவனுக்கு அவனுடைய சாமியின் நினைப்பு மீண்டும் வந்தது. பூ வாங்கவோ காசில்லை. தோட்டத்தில் போய்ப் பார்த்தபோது ஒரு செடியில் மூன்று பூக்கள் இருந்தன. அதில் ஒன்றைச் செடிக்கே விட்டுவிட்டு, இரண்டு பூக்களைக் கொணர்ந்து அவனுடைய சாமிக்கு வைத்து வணங்கினான்.
ஒரு பூ என் காணிக்கையாகவும் இன்னொரு பூ என் தந்தையின் காணிக்கையாகவும் ஏற்றுக்கொள் என்று மனமுருகி இறைஞ்சினான்.
பூ என்பது மனத்தைக் குறிக்கிறது. பூ மலர்வதுபோல் உள்ளமும் மலரும் தன்மையது ஆகும். பூ வைத்தால் 'என் மனத்தை உனக்குத் தருகிறேன்' என்பதற்கு அறிகுறி. இறைப்பற்று முதிர்ந்த நிலையில் பற்றன் தன் மனமலரை இறைவன்முன் வைத்து வணங்குவதும் உயர்மலர் அது ஆகும் . அம்மகன் பின்னர் வைத்த இரண்டில் ஒரு பூ அவன் உள்ளத்தையும் இன்னொரு பூ அவன் தந்தையின் உள்ளத்தையும் படியொளிருமாறு மனத்தில் எண்ணிக்கொண்டு, ஏற்குமாறு கேட்டுக்கொண்டான். தொழுகையில் இது சரியானது: பிறருக்காகவும் இறைஞ்சும் உள்ளம் இவனுக்கு வந்துற்றது. செடியை மொட்டையடித்துவிடாமல் சிறிது விட்டுவைக்கும் இரக்கமும் இவனுக்கு உண்டாகிவிட்டது. செடிகொடிகள் முதல் எல்லா உயிர்கள் பாலும் இரங்கும் மனம் ஒரு பற்றனுக்கு வேண்டும்; அதையே இறைவனும் விரும்புகிறார் என்பது பற்றாளனின் உணர்வாய் இருத்தல் முதன்மைப் பண்பாகும்.
நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். பிறருக்காகவும் இறைஞ்சுதல் வேண்டும். ஒரு பற்றாளன் தற்குறியாதல் கூடாது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.