இன்றைக்கு ........
இப்படி எழுதத் தொடங்கும் பொழுதே, இன்றைக்கு என்று எழுதாமல் " இற்றை நாளில்" என்று தொடங்கவேண்டு மென்று ஆவலாய் உள்ளது. கடினமான சொற்களைப் புகுத்தி எழுதுதல் கூடாது என்று நீங்கள் நினைப்பீராயின் அதுவும் சரிதான். கொஞ்சம் கடின நடையி லெழுதினால்தான், பல தமிழ்ச்சொறகள் ஓரிருவரிடமாவது புகுந்து வாழும் என்று யாம் நினைப்பதுவும் சரிதான். இப்போது துரோகி என்ற சொற்குள் ( சொல்லுக்குள்) புகுந்து எதையாவது தெரிந்துகொள்வோம்.
நீங்கள் நினைப்பீராயின் ---- இல்லை, நீங்கள் நினைப்பீர்க ளாயின்.... ஏன் அதிகம் கள்? நீங்களில் ஒரு கள் . அப்புறம் வாக்கியத்தின் வினைமுற்றிலும் ஒரு கள் எதற்கு? கள் என்பதே அஃறிணை விகுதி என்று தொல்காப்பியம் கூறுகிறது, அது தமிழ்மொழியில் இலக்கணம். இது என்ன மாறாட்டம்? சரி, இருக்கட்டும்.
தமிழ்மொழி பெரிதும் திரிந்துவிட்டது. நீ உண்டு என்று சொன்னாலே அது இலக்கணப்படி தவறு. ஏனென்றால் நீ என்பது முன்னிலை ஒருமை. உயர்திணைக்குரியது அது. உண்டு என்பது -- உள் + து. து என்பதோ அஃறிணை ஒன்றன்பால் விகுதி. பொருந்துமா றெங்ஙனம்?
சரி, துரோகி என்ற சொல்லுக்கு வருவோம். ஒருவன் மற்றவனுக்கு நண்பனாய் இருந்துகொண்டே அவனுடைய மனைவியிடம் போய் ஆசை வார்த்தைகள் பேசுகிறான் என்றால், அந்த ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலுள்ள புனிதமான தொடர்பில் " துருவிச் செல்ல" முனைகிறான் என்று அர்த்தம். இவ்வாறு பிறர்தம் நேரிய தொடர்பில் துருவக் கூடாது. அத்தகைய துருவுதல் அல்லது நுகர்தல் ஓங்கிவிடுமாயின், அது துரு + ஓங்கு + இ > துரு + ஓகு + இ = துரோகி ஆக்கிவிடுகிறது அவனை. ஓங்கு என்பது இடைக்குறைந்தால் ஓகு ஆகிவிடும். ஒன்றில் ஓங்கி நிற்பவன், ஓகி. மனத்தை நிலை நிறுத்தி எண்ணங்களை ஆழ்ந்துசெல்லுமாறு செலுத்தி ஒன்றன் தன்மையை உணர்ந்துகொள்ளுபவன், ஓங்கு > ஓகு > ஓகி > யோகி.. இத்திரிபு ஆனை> யானை போல. ஓகி என்ற தனிச்சொல் திரிந்தாலும் துரு என்பதனுடன் அடைவு கொண்டுள்ள ஓகி என்பது அப்புறம் திரியவில்லை.
துருவுதல் என்ற சொல்லின் அடிச்சொல்லாகிய துரு என்பதும் ஓதியவன் என்று பொருள்படும் ஓது+ அன்+ அன் > ஓதனன் என்பதும் சேர்த்து, துரு+ ஓதனன் > துரியோதனன் ஆகி, எல்லாம் நன்றாகப் படித்துத் தெரிந்தவன் என்ற பொருளைத் தந்து, அவனை நல்லவனாகக் காட்டுகிறது. அவனும் துறக்கத்திற்குச் சென்றான் என்பது கதை. எதையும் நன்கு துருவித் துருவி ஓதி அறியவேண்டும்.
ஆனால் எவ்விடையத்தையும் வேண்டாத துருவல்கள் செய்து அதில் முன்னிற்கும் கேடுடையான் துரோகி.
துருவு , இது இடைக்குறைந்து துவ்வு , துவ்வுதல் என்பது நுகர்தல் என்று பொருள்தரும் சொல். பருப்பு என்பதை பப்பு என்றதுபோலும் இடைக்குறைச் சொல் இதுவாகும். (பப்பு வேகாது என்று ஏளனமாகச் சொல்வது கேட்டிருக்கலாம்.)
இனி ஓர் இடுகையில் சந்திப்போம். வேறு பொருண்மையும் உண்டு. அதைப் பின் எழுதுவோம். *
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
இதையும் காண்க:
*இது இன்னொரு விளக்கம்: