புதன், 12 மே, 2021

கொரனா பரவல்

 கொரனா என்னும் கோவிட் 19,  இன்னொரு சுற்றைத் தொடங்கி உள்ளது என்று தெரிகிறது.  கொஞ்சம் ஓய்ந்தவுடன்  இறுதியை அடைந்துவிட்டதாகச் சில நாடுகள் எண்ணிவிட்டன,  அது தவறு என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. இப்போதுதான் அறியத் தொடங்கி உள்ளோம்.

இது யாரும் எதிர்பார்க்காததுதான். கொரனா என்பது முன் நாம் அறியாத ஒன்று ஆகும்.  எந்தக் கொம்பனுக்கும் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. கணிக்க முடியாத காலன் இந்தக் கொரனா,

மலேசியாவில் 1722 பேர் இறந்துள்ளனர். 

சிங்கப்பூரில் சில இடங்களில் பரவியுள்ளது.

இது பற்றித் தனிமனிதன் தான் கவனமாக இருக்கவேண்டும்.

மந்திரிகள் வந்து நமக்குக் கவசம் அணிவித்துவிடமாட்டார்கள்.  அது அவர்கள் வேலை இல்லை.






செவ்வாய், 11 மே, 2021

மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழ் விளக்கம்.2

 மந்திரம் என்ற சொல் இந்தியாவின் பலமொழிகளிலும் வழங்கும் சொல். இச்சொல் தமிழிலும் வழங்குவதாகும்.

முன்னர் இச்சொல்லைத் தமிழாசிரியன்மார் ஆய்ந்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன விளக்கம் வருமாறு.

மந்திரம் என்பது   மன் +திறம்(1) என்று பிரிக்கத் தக்கது.  இவற்றுள் திறம் எனற்பாலது ஒரு விகுதியாகி,  றகரம்  ரகரமாய்  மாற்றுண்டு,  
ஏனைச் சில சொற்களிற் போல,  ~திரம் என்று நின்றது; எனின்,  ஆய்வுக்குரியது பெரிதும் மன் என்பதே.  மன்னுதல் என்னும் வினை,  நிலைபெறுதல் என்னும் பொருளுடைத்து.   ஆதலின்,  மன் + திரம் >  மந்திரம் என்பதன் பெறுபொருளாவது, அடுத்தடுத்து வேண்டுதல் மொழிபல  பலுக்கி,  ஒருவன் தன் மேற்கொண்ட எண்ணத்தை நிலைப்படுத்தி  வெற்றி எய்துவது என்பது  என்று கொள்ளப்  பொருள் நன்கு  அமைகின்றது..

இதற்குப்   புலவர்  சிலரிடை ஏற்பட்ட மறுப்பில் உள்ளீடு ஒன்றுமில்லை.  இரு சொற்கள்  மன் திரம் என்று புணர்க்கப்படின்,  மன்றிரம் என்று வரவேண்டுமாதலால், மந்திரம் என்று வருவது தமிழன்று  என்று மறுப்பு விடுத்தனர்.   ஆனால்,  பின்+தி>  பிந்தி,   முன்+தி >  முந்தி  எனச் சொற்கள் தமிழில் அமைந்துள்ளதனை அவர்கள் மறந்துவிட்டனர்.  மான் என்ற அடிச்சொல் மன் என்பதன் நீட்சி.    அது  தன் என்ற இறுதியைப்  பெற்று,  மாந்தன் என்று அமைதலையும்   மான்றன் என  அமையாமையும்  காண்க.  மேலும் மன் + தி என்று புணர்க்கப்பட்டு,  மந்தி என்று வந்ததன்றி  மன்றி என்று வரவில்லை.  மந்தி எனின் மனிதன் போன்றது என்பது  பொருள். மேலும் சொல்லாக்கம் வேறு,   வாக்கியம்  அமைத்தல் வேறு.  மான் தன் என்பவற்றில் வருமொழி நிலைமொழி என்பன இல்லை.   இரு சொல் துண்டுகளே உள. மான் இங்கு மன் என்பதன் திரிபு அல்லாமல் தனிச்சொல் அன்று.  தன் என்பதும் த் அன் அல்லது து  அன் என்ற இடைச்சொற்களின் புணர்வு  ஆகும்.  இவை வருமொழி ஆகா.  இவை பற்றி  முன் எழுதியுள்ளமையால்  பழைய இடுகைகள் காண்க.  முன் கூறியவற்றை இன்று மீண்டும் எழுதத்தேவை இல்லை.

மான்  என்பது  விலங்கு அன்று,    மன் என்ற வினையின் நீட்டம்.  அது மன்னுதல் என்ற வினையினின்று போந்த கரு வடிவம். உருவுள்ளது போல இருப்பினும் இடைவடிவம் ,  அமைந்துகொண்டிருக்கும்  ஆகாவுரு.  தன் என்பதும் சிதறல்கள்  கூட்டு.. கல்லின் தெறித்த சில்கள்.  இவை எவ்வாறு இறுதியுருப் பெறும் என்பதே நம்  முன் இருக்கும் கேள்வி.  இவற்றுக்கு இலக்கணம் இல்லை.

மேலும் எந்தப் பொருளுமின்றி வெறும் இடுகுறிகளாகவும் சொற்களை அமைக்கலாம்  ஆதலின் குறித்த மறுப்பு  வாதங்கள் பொருளற்றவை. டிங் டாங்க்  என்று சொல்லமைக்கலாம்.  ஒலிக்குறிப்புச் சொல்.  டி என்பது மொழிமுதல் ஆகாதென்பதால்  திங்குடாங்கு என்று மாற்றிக்கொள்ளுமளவு தான் செல்லலாம்.

இனி மந்திரம் என்பது இன்னொரு வகையிலும் அமையும் என்பதால் இஃது ஓர் இருபிறப்பி  ஆகலாம்.  தொடக்கத்தில் மந்திரங்கள் வரும் தொல்லைகளை மடித்துத் திருப்பிவிடுதற்காகவே  ஓதப்பட்டன.  தொல்லைகள் மடிந்து திரும்புவதால்,   அல்லது மடிந்து மீண்டுவராமல் அங்கே  நின்றுவிடுதலால்,  மடிந்து இரும் >  மடிந்திரும் >  மடிந்திரம் ,  இது இடைக்குறைந்து  ம(டி)ந்திரம்  > மந்திரம் என்றும் வரும்.  செய்த பில்லி சூனியம் முதலியவை மீண்டு வந்து தாக்காமல் போன திசையிலே இருந்திடவேண்டும்.  இதற்காகவே மந்திரங்கள் ஓதப்பட்டன -- வேதகாலத்தின் முன்பே.

இதுபோலும் சொற்கள் மக்களால் அல்லது மந்திரம்  சொன்னோரால் நாளடைவில் அமைப்புற்றவை. புலவர்க்கு இங்கு வேலையில்லை. இறக்கும் நேரத்தில் மருத்துவர் வருவதுபோல,  விளக்கும் காலத்தில்தான் புலவர் வந்து சேர்வார்.  அதுவரை ரீம் கிரீம் என்பவையே  ஆட்சி செய்யும்.

ஆதலால்  முன் சொன்ன  சொல்லமைப்புடன் இன்னொரு வழியிலும் அது விளக்குறும்  என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

அடிக்குறிப்பு:

(1) மன்+ திறம் :  இதில்  முன்னுதல் என்பதே மன் என்று திரிந்து,  மன்+ திரம் என்று புனைவுண்டு, மந்திரம் என்ற சொல் அமைந்தது என்பார்  தேவநேயப் பாவாணர். முன்னுதல் என்றால் ஓர் எண்ணத்தைத் தலைக்குள் முன் கொண்டு வருதல். மேற்கூறிய மன்னுதல் ( நிலைபெறுதல்)  என்பதும் ஓரளவு ஒப்பமுடிந்த கருத்தேயாம்.

(2)  மந்திரித்தல் -  வினைச்சொல்.  மந்திரித்த தகடு,  தாயித்து  என்பது வழக்கு.  மந்திரித்தல் -  மன்னும்படி திரித்தல்..  ஒரு நலம் நிலைநிற்கும்படி  திரித்தல்.  ஒரு  தீமை மடியுமாறு  திரித்தல்,  மடிந்து  நிற்க அல்லது மடங்கிடத் திரித்தல். நூலும் திரித்துக் கட்டப்படுவதுண்டு..  ஆகவே மடிந்திருக்கத்  திரித்தல்  சுருங்கி  மந்திரித்தல்  ஆகும்.


திங்கள், 10 மே, 2021

சந்தர்ப்பம் கழிசறை - திரிசொற்கள்.

எந்த மொழியானாலும் அது வளர்ந்து வருகின்ற காலத்தில் புதிய பதங்கள் தோன்றுவதும் பழைய பதங்கள் தேய்வதும் அழிவதும் இயல்பாக நடைபெறுவதொரு நிகழ்வு ஆகும். இடப்பெயர்களும் மாறி அமைவதும் இல்லாமற் போய்ப் புதுப்பெயர்கள் உண்டாவதும் என்றும் நடைபெறுவன ஆகும். எடுத்துக்காட்டாக செங்கமாரி ஆறு என்று தமிழர்கள் குறிப்பிட்ட ஆறு சிங்கப்பூரில் எங்கு இருக்கிறது என்றால், இன்றைய வரைபடங்களில் பார்த்து அதைக் கண்டுபிடிக்க முடியாது போகலாம். இருபது வயதை எட்டிவிட்ட இற்றைநாட் பிள்ளைகட்கு இது தெரிந்திருக்காது. காலாங் ஆறு என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிடுவர். இதற்குக் காரணம் அது எழுத்தில் இருப்பதுதான்.


இப்போது தமிழாசிரியர்களும் வேற்றுநாட்டினராயிருப்பின் இந்த ஆற்றுப்பெயரை எங்காவது கேள்விப்பட்டிருந்தாலே அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.


இவ்வாறு மறைந்துவரும் தமிழ்ப்பெயர்கள் பல உள்ளன. இங்கிருந்து பினாங்கு வரை இவற்றைத் தேடிப் பத்திரப்படுத்தலாம். ஆனால் இதற்கு விலை ஏதும் கிடைக்கப்போவதில்லை.


இருப்பினும் சொற்களில் ஏற்படும் திரிபுகளைக் கவனிக்குங்கால், மறைந்துவிட்ட பல்வேறு சொல்வடிவங்களும் அனைத்தும் கிடைப்பதில்லை. கிடைத்த வடிவங்களை மட்டும் குறிப்பிட்டு நிரல்செய்து காட்டுங்கால் புரிந்துகொள்ளச் சற்று கடினமாகத் தோன்றக்கூடும். இவ்வாறு தோன்றும் சொற்களில் " சந்தர்ப்பம் " என்ற சொல்லும் ஒன்றாகும். இது " அமைந்து தருகின்ற சுற்றுச்சார்பு" என்றே வாக்கியப்படுத்தி விளக்கவேண்டியுள்ளது. அம் என்பது அமை என்றும் சம் என்பது சமை என்றும் பழங்காலத்திலே திரிந்து சொற்களாகிவிட்டன. சம் என்பது இதுபோழ்தில் தனித்து வழங்கவில்லை. ஆனால் அமையம், அமயம், சமையம், சமயம் என்பன நம்மிடத்தே நின்று நிலவுவன; இச்சொல்லுடன் தொடர்புள்ளவை ஆகும். இவற்றிலும் அமைதற் கருத்தே அடிப்படைக் கருத்தாய் ஓங்கி உள்ளது. ஆகவே இத்தொடர்பினை ஒருவாறு விளக்கி முன் வெளியிட்டோம். அவற்றை ஈண்டுக் காண்க. நாம் இழந்தவை பல வடிவங்கள் என்றாலும் எல்லாவற்றையும் இன்னும் இழந்துவிடவில்லை என்பதறிக.


சந்தர்ப்பம் என்ற சொல்லுக்குத் தொடர்புகள்:


https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_9.html

https://sivamaalaa.blogspot.com/2012/06/getting-closer-in-yesteryears-what-it.html


இன்னொரு சொல்லையும் அறிவோம். இது கழிசடை என்ற சொல் இது முன்னர் கழிகடை என்று இருந்தது. கழிந்த அல்லது தள்ளுப்பட்டவற்றில் கடைத்தரமானது என்று பொருள். இச்சொல் பின்னர் கழிசடை என்று திரிந்தது. இதில் "சடை" ஒன்றுமில்லை. அதாவது ஜடை என்ற சடை ஒன்றுமில்லை. கடை ( கடைத்தரம்) என்பதே சடை என்று மாறிவிட்டது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால் சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததைச் சொல்லவேண்டும். இது க- ச திரிபுவகை. இது போலும் திரிபு பிற மொழிகளிலும் உளது. சீசர் என்பது கைசர் என்பதுபோல் எழுதப்படுவது காணலாம். ஆங்கிலத்தில் சிஎச் வருமிடத்து க என்ற ஒலி எழுவதையும் காணலாம். சேரக்டர் என்பதுபோலும் எழுத்தில் வர அது கேரக்டர் என்றே உளைத்தல் ( உச்சரிப்பு) பெறும். இது அதிக விளக்கம் வேண்டாத திரிபு. இனிக் கழிசடை என்பது கழிசறை என்றும் திரியும். இது எவ்வாறு என்றால் சடை என்பது சறை, சரை என்று எவ்வாறும் திரிதல் கூடும். மடி ( செத்துப்போ ) என்பது மரி என்று ( அதேபொருள்) வருதல் போலுமே இது. இவ்வாறு திரிந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டு குறித்துக்கொள்ளலாம்.


மொழி என்றால் மாறிக்கொண்டிருப்பது. என்னதான் மாறாமை போற்ற இலக்கணம் இலக்கியம் இருந்தாலும் எப்படியோ மாற்றம் வந்துவிடுகிறது. நாம் அறிந்து விலக்குமுன் இத்தகு மாற்றங்கள் இடம்பிடித்துவிடுதலும் மறைந்து இருந்த இடம் தெரியாமல் போவதும் மொழிகளில் பொது இயல்பு ஆகும்.


திருவள்ளுவர் என்ற புலவர் பழங்காலத்தில் திருவுள்ள தேவர் என்றுதான் அறியப்பட்டாராம். திருவுள்ளவர் என்பதே திருவள்ளுவர் என்று திரிந்துவிட்டதாம்! இதைச் சொன்னவர் கருத்தை நோக்கினால் வு என்பதில் வந்த உகரம்தான் ளு என்ற எழுத்தில் மாறிவிட்டதாம். திருவள்ளுவர் என்று இவரைக் குறிப்பவர்கள் பேதையர் என்பதுதோன்ற ஒரு திருவள்ளுவ மாலைப் பாடலும் உண்டு. இவர் குறிசொன்னவர் அல்லர். அதற்கான அகச்சான்றுகள் இல்லை. அமைச்சர்களாய் இருந்தோருக்குத் தேவர் என்ற பட்டம் உண்டு. இவர் இயற்பெயர் அறிய இயலாததாய் உள்ளது. சொற்றிரிபுகளே இல்லாவிடின் இதுபோலும் ஐயங்கள் இரா.