எந்த மொழியானாலும் அது வளர்ந்து வருகின்ற காலத்தில் புதிய பதங்கள் தோன்றுவதும் பழைய பதங்கள் தேய்வதும் அழிவதும் இயல்பாக நடைபெறுவதொரு நிகழ்வு ஆகும். இடப்பெயர்களும் மாறி அமைவதும் இல்லாமற் போய்ப் புதுப்பெயர்கள் உண்டாவதும் என்றும் நடைபெறுவன ஆகும். எடுத்துக்காட்டாக செங்கமாரி ஆறு என்று தமிழர்கள் குறிப்பிட்ட ஆறு சிங்கப்பூரில் எங்கு இருக்கிறது என்றால், இன்றைய வரைபடங்களில் பார்த்து அதைக் கண்டுபிடிக்க முடியாது போகலாம். இருபது வயதை எட்டிவிட்ட இற்றைநாட் பிள்ளைகட்கு இது தெரிந்திருக்காது. காலாங் ஆறு என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிடுவர். இதற்குக் காரணம் அது எழுத்தில் இருப்பதுதான்.
இப்போது தமிழாசிரியர்களும் வேற்றுநாட்டினராயிருப்பின் இந்த ஆற்றுப்பெயரை எங்காவது கேள்விப்பட்டிருந்தாலே அவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
இவ்வாறு மறைந்துவரும் தமிழ்ப்பெயர்கள் பல உள்ளன. இங்கிருந்து பினாங்கு வரை இவற்றைத் தேடிப் பத்திரப்படுத்தலாம். ஆனால் இதற்கு விலை ஏதும் கிடைக்கப்போவதில்லை.
இருப்பினும் சொற்களில் ஏற்படும் திரிபுகளைக் கவனிக்குங்கால், மறைந்துவிட்ட பல்வேறு சொல்வடிவங்களும் அனைத்தும் கிடைப்பதில்லை. கிடைத்த வடிவங்களை மட்டும் குறிப்பிட்டு நிரல்செய்து காட்டுங்கால் புரிந்துகொள்ளச் சற்று கடினமாகத் தோன்றக்கூடும். இவ்வாறு தோன்றும் சொற்களில் " சந்தர்ப்பம் " என்ற சொல்லும் ஒன்றாகும். இது " அமைந்து தருகின்ற சுற்றுச்சார்பு" என்றே வாக்கியப்படுத்தி விளக்கவேண்டியுள்ளது. அம் என்பது அமை என்றும் சம் என்பது சமை என்றும் பழங்காலத்திலே திரிந்து சொற்களாகிவிட்டன. சம் என்பது இதுபோழ்தில் தனித்து வழங்கவில்லை. ஆனால் அமையம், அமயம், சமையம், சமயம் என்பன நம்மிடத்தே நின்று நிலவுவன; இச்சொல்லுடன் தொடர்புள்ளவை ஆகும். இவற்றிலும் அமைதற் கருத்தே அடிப்படைக் கருத்தாய் ஓங்கி உள்ளது. ஆகவே இத்தொடர்பினை ஒருவாறு விளக்கி முன் வெளியிட்டோம். அவற்றை ஈண்டுக் காண்க. நாம் இழந்தவை பல வடிவங்கள் என்றாலும் எல்லாவற்றையும் இன்னும் இழந்துவிடவில்லை என்பதறிக.
சந்தர்ப்பம் என்ற சொல்லுக்குத் தொடர்புகள்:
https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_9.html
https://sivamaalaa.blogspot.com/2012/06/getting-closer-in-yesteryears-what-it.html
இன்னொரு சொல்லையும் அறிவோம். இது கழிசடை என்ற சொல் இது முன்னர் கழிகடை என்று இருந்தது. கழிந்த அல்லது தள்ளுப்பட்டவற்றில் கடைத்தரமானது என்று பொருள். இச்சொல் பின்னர் கழிசடை என்று திரிந்தது. இதில் "சடை" ஒன்றுமில்லை. அதாவது ஜடை என்ற சடை ஒன்றுமில்லை. கடை ( கடைத்தரம்) என்பதே சடை என்று மாறிவிட்டது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால் சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததைச் சொல்லவேண்டும். இது க- ச திரிபுவகை. இது போலும் திரிபு பிற மொழிகளிலும் உளது. சீசர் என்பது கைசர் என்பதுபோல் எழுதப்படுவது காணலாம். ஆங்கிலத்தில் சிஎச் வருமிடத்து க என்ற ஒலி எழுவதையும் காணலாம். சேரக்டர் என்பதுபோலும் எழுத்தில் வர அது கேரக்டர் என்றே உளைத்தல் ( உச்சரிப்பு) பெறும். இது அதிக விளக்கம் வேண்டாத திரிபு. இனிக் கழிசடை என்பது கழிசறை என்றும் திரியும். இது எவ்வாறு என்றால் சடை என்பது சறை, சரை என்று எவ்வாறும் திரிதல் கூடும். மடி ( செத்துப்போ ) என்பது மரி என்று ( அதேபொருள்) வருதல் போலுமே இது. இவ்வாறு திரிந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டு குறித்துக்கொள்ளலாம்.
மொழி என்றால் மாறிக்கொண்டிருப்பது. என்னதான் மாறாமை போற்ற இலக்கணம் இலக்கியம் இருந்தாலும் எப்படியோ மாற்றம் வந்துவிடுகிறது. நாம் அறிந்து விலக்குமுன் இத்தகு மாற்றங்கள் இடம்பிடித்துவிடுதலும் மறைந்து இருந்த இடம் தெரியாமல் போவதும் மொழிகளில் பொது இயல்பு ஆகும்.
திருவள்ளுவர் என்ற புலவர் பழங்காலத்தில் திருவுள்ள தேவர் என்றுதான் அறியப்பட்டாராம். திருவுள்ளவர் என்பதே திருவள்ளுவர் என்று திரிந்துவிட்டதாம்! இதைச் சொன்னவர் கருத்தை நோக்கினால் வு என்பதில் வந்த உகரம்தான் ளு என்ற எழுத்தில் மாறிவிட்டதாம். திருவள்ளுவர் என்று இவரைக் குறிப்பவர்கள் பேதையர் என்பதுதோன்ற ஒரு திருவள்ளுவ மாலைப் பாடலும் உண்டு. இவர் குறிசொன்னவர் அல்லர். அதற்கான அகச்சான்றுகள் இல்லை. அமைச்சர்களாய் இருந்தோருக்குத் தேவர் என்ற பட்டம் உண்டு. இவர் இயற்பெயர் அறிய இயலாததாய் உள்ளது. சொற்றிரிபுகளே இல்லாவிடின் இதுபோலும் ஐயங்கள் இரா.