பாடம் பண்ணிக்கொள்வதில் சில வகைகள் உள்ளன. ஆனால் இப்புதிய ஊழியில் எதையும் மனப்பாடம் அல்லது மனனம் செய்துகொள்வதை மாணவர்கள் விரும்புவதில்லை. ஒன்றைப் படித்து நல்லபடியாக அதை உணர்ந்துகொண்டால் மனப்பாடம் செய்யவேண்டியதில்லை என்று ஆசிரியர்கள் சிலர் வழிகாட்டுவதுண்டு. யார் எதைச் சொன்னபோதிலும் எமக்கு மனப்பாடம் செய்து ஒன்றைக் கற்றறிவதில் எந்த மறுப்பும் இருப்பதில்லை.
எமக்குத் தெரிந்த சீன மாணவர் ஒருவர், சட்டத் தேர்வுக்குத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார். கடைசி ஆண்டுத் தேர்வில் உள்ள நான்கு பாடத்துறைகளுக்கும் ஒரு துறைக்கு 20 கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து இவற்றுள் எந்தக் கேள்விகள் வந்தாலும் பதில் எழுதுவதற்கு அணியமானார். எனவே 4 (20) - 80 கேள்விக்கான பதில்கள் மனப்பாடம்.. மூன்றாண்டுகள் தேர்வுகளுக்கும் 3(80) : 240 கேள்விகளுக்கான பதில்கள் மனனம் ஆனது. ஏனென்றால் கல்விக்கு எதிரி மறதிதான். எதையும் படித்து அப்புறம் மறந்துவிட்டால் அந்த மறப்பானது உங்களை வாசிக்காதவருக்குச் சமமாக்கிவிடும். இவ்வாறு கற்பதில் மிகுந்த உழைப்பு தேவைப்படும்.
சில அடிப்படைகளை மனனம் செய்யவே வேண்டும். எடுத்ததற்கெல்லாம் புத்தகதைப் பார்க்க இயலாமை ஏற்படலாம். இவ்வாறு கூறவே, சொல்லாய்வுகளில் எந்த எழுத்து எதுவாகத் திரியும் என்பதை மனப்பாடமாக்கிக் கொள்வது இன்றியமையாதது. அப்போதுதான் ஒரு புலமையின் அடித்தளம் ஏற்படும். தனித்தமிழாய்ந்த மறைமலையடிகளார்க்கு தொல்காப்பியம் முழுதும் மனப்பாடமென்றும் ஒவ்வொரு நூற்பாவிலும் அடிக்கு எத்தனை எழுத்துக்கள் என்பதும் அவர் கூறுவார் என்றும் பிற புலவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். திரு.வி.க அவர்கள் பெரியபுராணம் மனப்பாடம் என்பது மட்டுமன்று, அதற்கே அவர் உரையாசிரியரும் ஆவார். சுவாமி கிருபானந்த வாரியாருக்கு எண்ணிறந்த பாடல்கள் மனப்பாடம். மேடையில் பாடிப் பொருள் கூறும் புலமை உடையவர். ஒரு மேடையில் பாரதிதாசன் தலைமையில் தமிழ் என்பதற்கு நூறு பொருள் கூறி அசத்தினார். இசையறிஞர்களும் பல அடிப்படைகளை மனனம் செய்யவேண்டி யுள்ளது.
இன்று கடைதலைப்பாடம் என்ற சொற்றொடரை அறிந்துகொள்வோம். ஒன்றைக் கடைசிவரியில் தொடங்கி முதல்வரிவரைப் பிறழாமல் சொல்ல இயல்வதே "கடைதலைப்பாடமாகும்". இதைத் தலைகீழ்ப்பாடமென்றும் சொல்வார்கள். இப்படிச் சிலவற்றையாவது மனனம் செய்துகொள்வது நல்லது.
கடைதலைப்பாடம் என்பது "கரைதலைப்பாடம்" என்றும் திரியும். கடை என்றால் கடைசி. நிலத்தின் கடைப்பாகத்தில் கடலை அல்லது ஏரியை ஒட்டிய பகுதியே கரை என்று சொல்கிறோம். கடை > கரை ஆனது.
இனி, கரை என்பதன் ஐகாரமும் தலை என்பதன் ஐகாரமும் வீழ்ந்து, கரைதலை என்பது கரதல என்றும் வரும். இந்நிலையில் தல என்பது அம் விகுதி பெற்று தலம் என்றுமாகும். தலம் என்பதற்கு மூலம் தலை என்ற சொல்லே ஆகும். ஐகாரம் வீழ்வது ஐகாரக் குறுக்கம் என்று தொல்காப்பியம் சொல்லும். பல இலக்கண நூல்களும் இது கூறும். " கரதல" என்பதில் இரு ஐகாரங்கள் வீழ்ந்தன.( நிற்க, உயிர்முன் இரு என்பது ஈர் என்று திரிதலை யாம் எளிதாக்கும் பொருட்டுப் பின்பற்றவில்லை).
கடை என்பதன் டைகாரம் ரைகாரமானதன்றோ. இது டகர ரகரப் பரிமாற்று. மடி என்பது மரி என்று திரிந்ததும் காண்க.
அடு ( அடுத்தல் ) என்பது அரு என்றுமாம். என்றாலும் அரு என்பது வினையாம் பொழுது ஒரு குகரச் சாரியை பெற்று அருகு > அருகுதல் என்று வரும். உண்மையில் அரு > அருமை என்றால் அது சிறப்புநிலையை அடுத்துவிட்டது என்றே பொருளாகும்.
நம் உருவம்,பல உள்ளுறுப்புகளைக் கொண்டுள்ளது, அல்லது உடுத்தி உள்ளது. எனவே, உடு> உரு என்பதன் தொடர்பினைக் கண்டுகொள்க.
மடுத்தல் என்பதற்கு இணைதல் என்ற பொருளும் உளது. மருவுதல் என்பதற்கும் இப்பொருள் இருக்கிறது. எனவே, மடு > மரு என்பதன் தொடர்பு கண்டுகொள்க. இதில் வேறுபட்டது என்னவென்றால் மருவு என்பதில் வரும் வுகர வினையாக்க விகுதி மடுத்தல் என்பதில் வரவில்லை. இது ஒரு விகுதி பற்றிய வேறுபாடுதான். அடிச்சொல்லில் ஒன்றும் குழப்பமில்லை.
[வேறுபாட்டுக்கு வித்தியாசம் என்று சொல்வதுமுண்டு. உண்மையில் வித்தியாசம் என்பது விரிந்து சென்று பேதமாவது என்ற பொருளதே. விரி> விரித்தியாயம்> வித்தியாயம்> வித்தியாசம் என்றானதே ஆகும். யகர சகரப் போலியைக் கண்டுகொள்க. விரித்தி என்பது வித்தி ஆனது இடைக்குறை.]
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.