இன்று கடை என்னும் சொல்லைஅறிவோம். கடை என்பது சாமான்கள் விற்கும் கடையையும் குறிக்கும். இறுதி என்றபொருளும் அதற்கு உள்ளது."கடைக் குட்டிப்பையன் " என்ற வழக்கு, இறுதியாய்ப் பிறந்தவனைக் குறிக்கிறது.
கடை என்பது தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் காணக்கிடைக்கும். " மூன்றலங்கடையே" -மூன்றும் அல்லாத விடத்து என்று வரும். கடை என்பதற்கு இங்கு இடம் என்பதே பொருள்.
இடம் என்பது இடு+ அம் என்ற வினைப்பகுதியும் அம் விகுதியும் பெற்றமைந்தது. ஒன்றை ஓரிடத்து இடுகிறோமென்றால் அதுதான் அதற்கு இடம்.
கடை என்பது கடந்து செல்லுதல் என்ற பொருளுடைய கட (கடத்தல்) என்பதில் அமைந்தது. ஓரிடத்தைக் கடக்க அங்கு இடம் இருக்கவேண்டும் ஆதலால் அது இடப்பொருளை அடைகின்றது. இருத்தலானாலும் இடுவதானாலும் கடப்பதானாலும் எல்லாம் இடமே. அதற்கடுத்து, ஓரிடத்தைக் கடந்தபின் கடந்த இடம்போல் பிறிதில்லையானால் அதுவே கடைசி ஆகிறது. ஆகவே கடை ஆனது கடைசியும் ஆகும்.
கட - கடத்தல்.
கட + ஐ= கடை. இங்கு ஐ என்பது விகுதி.
கடை + சி =கடைசி. இங்கு சி என்பது விகுதிமேல்விகுதி.இடையில் இருக்கும் விகுதியை இடைநிலை எனினும் ஒக்கும்.
கடையேழுவள்ளல்கள்- இதில் கடைசியாக எண்ணப்பட்ட ஏழு வள்ளன்மார் என்பது பொருள்.
கடை என்பது தெலுங்கில் மிகுதியாய் வழங்கும்.
தலை என்பதும் இடப்பொருளதே. இது தலம் என்று அம் விகுதி பெற்றும் வரும்.ஸ்தலம் என்று மெருகும் பெறும். தலை என ஐ விகுதியும் இதற்குண்டு. அடிச்சொல் தல் என்பது.
அறிக மகிழ்க
கவசம் அணிக.
மனித இடைவெளியும் காத்தல் வேண்டும்.
மெய்ப்பு பின்னர்