வெள்ளி, 8 ஜனவரி, 2021

சஞ்சலம்

 மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்"  என்பது.

சல்லுதல்  - சல்லடையால் சலித்தல்

சலித்தல் -  பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது  என,  சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச்  சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.

சல் - சலிப்பு:    கோபம். மனநிறைவின்மை.

சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.

கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .

அலை என்பதன் அடிச்சொல் அல்.  அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.

அல் >  சல்>  சலி > சலித்தல்.  

இதுவுமது:  அமண் - சமண்.  பிற மற்ற இடுகைகளில் அறிக.

கவனிக்க:

அல்  > அலை

அல் >  அலம்பு.

அல் > அலட்டு

இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன.   அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின.   இஃது ஒப்புமையாக்கம்.

சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே.  ( சல்+ அன் +அம்);

இனிச் சஞ்சலம் என்பது:

தம் + சலி + அம் =  சம் + சலி + அம் >  சஞ்சலம்.   லி e


ன்பதன் இகரம் கெடுதல்.

தம் > சம்  ( த - ச திரிபு)

சலி + அம் >  சலம் 


தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது.  சம் என்பதும் அது.

மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும்.  ஆகவே சஞ்சலம்

என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.

அறிக.  மகிழ்க.

 

  


புதன், 6 ஜனவரி, 2021

ஐஸ்வரிய அல்லது செல்வங்களின் தொகுப்பு

 செல்வங்கள் பதினாறு என்பது நம் சொற்றொகை அகரவரிசை சொல்வது. இந்தச் செல்வங்களின் தொகுதிக்கு இன்னொரு பெயர் ஐஸ்வரியம்  ஆகும் இச்சொல்லின் அமைப்பை எளிதினுணர்தற் பொருட்டு  பிற்பாகமான  "~வரியம்" என்பதை  முதலில் அறிந்துகோடல் நலம்.

மனிதன் பிறக்கும்போது கோவணமும் இன்றித்தான் பிறக்கிறான்.  " நீ என்னதான் அப்படிக் கொண்டுவந்துவிட்டாய்,  அதை நீ இழப்பதற்கு?" என்ற பகவத் கீதையின் கேள்வி பொருண்மை மிளிர்வதாகும். பிறனொருவன் நூல் துணி உடுத்திருக்க, தான் பட்டாடையில் பவனிகொள்வதானால்,  அவன்றனக்கு செல்வவரவுண்மையையே அந்நிலை குறிக்குமென்பதில் ஐயமொன்றில்லை. பிறன் சிறுதொகைத்  தாட்பணமே பயன்படுத்த,  தான் காசோலையும் கடனட்டையும் அரண்மனை போல் வீடும் உந்துவண்டியும் உடையவ னாயின் செல்வமுடையவன் என்று மதிக்கப்படலாம்.  இதுவே ஐசுவரியம் என்று மக்கள் கருதவும் தடையில்லை..இத்தகு மதிப்பீடுகளில் வேறுபடுவோரும் உண்டு.

பண்டைத் தமிழர் பெரும்பாலும்  ஆகுதல் என்ற வினையால் அமைந்த ஆக்கம் என்ற சொல்லையே வழங்கினர்.  அதனடிப் பிறந்த "ஆகூழ்"  என்ற சொல்லையே குறள் முதலிய இலக்கியங்கள் பதிவுசெய்தன. செல்வமாவது ஆக்கம். நற்பலனெனில்  அது நிலம் உடைமை,  ஆடுமாடு கன்றுகள் உடைமை என்று செல்வமுடையோர் மற்றுப் பிறரும்  எண்ணினர்.  இவர்களே  திருவுடையர்,  உரிமை பலவும் உடையார் என்ற கருத்தில்  கிழார் எனவும் குறிக்கப்பட்டனர்.  (கிழமை உடையர்,  கிழ + ஆர் >  கிழார், ).  மாடு என்ற சொல்லே செல்வம் என்ற பொருண்மையும் உடைத்தாயிற்று. கிழமை = உரிமை.

திரு வேறு,  தெள்ளியர் ஆதலும் வேறு என்று, அறிஞர்களைக் குறள் போற்றினாலும்   செல்வமுடையார் மன்பதையுள் வல்லோராகவே  நின்றனர்.

இந்தப் பாடல்வரிகள் கவனத்துக்குரியன:

செல்வமே சுக [ ......தாரம்]*

திருமகள் அவதாரம்;

உள்ளபடி செல்வம் இல்லாதவரே

உலகினிலே வாழ்வதும் தவறே

கல்லார் எனினும் காசுள்ளவரைக்

காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?  [ கம்பதாசன்]


இன்னொரு கவி செல்வங்களை இவ்வாறு நிரல்படுத்துகிறார்:

பெண்டு பிள்ளை வீடு

கன்று மாடு தனம்

பெருமையான பெரும் பள்ளம்.

கண்டு மோகம் கொண்டு.......

~~~மீளாக் கடலில் வீழ்ந்துவிடாதே...... என்று எச்சரித்தவாறே.


இங்கு  வீடு மாடு கன்று என்பவற்றைக் கவனத்தில் கொள்க.

இனிச் சொல்லியலின் படி,  ஐஸ்வர்யம் என்பதை இவ்வாறு விளக்குவோம்:

மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்றொரு பொருள் உளது.

மறத்தல் ஆகாது:

ஆக்கம் என்பதில் அகரமே முதலெழுத்து.

ஆ -  மாடு  ( செல்வம்,  கோமாதா).

இல் -  இடம்.  [  தமிழில் இல் என்பது இடப்பொருள் காட்டும் உருபு, வீடு என்றும் பொருள் உளது ]

வரு  -  வருதல் என்பதன் வினைமுதல்.  தனக்கே அன்றித் தான் பிறந்த குடிக்கு இருந்ததாயினும் அது தனக்கு வருவதாகவே கொள்ளப்படும். இது வீடும் மாடும் வருதல். அதாவது செல்வம் வருதல்.

இ -   இருந்து ( செலவாகிவிடாமல் இருப்பது ).

அம் -  அமைதல் குறித்த விகுதி. [ சொற்கள் பலவினிலும் சில விகுதிகள் பொருளிணைந்தும் சில பொருளின்றி வெற்று இறுதியாகவும் உள்ளன ].

ஆ + இல் + வரு + இ + அம்.

இது:

ஆ + இஸ் + வரி + அம்

. ஐஸ்வர்யம்  ஆகும்.

இங்கு:

ஆ -  ஐ எனத் திரிய,

இல் > இஸ்  ஆனது.

வரு + இ > வரி  ஆனது.

ஆகாரத்தில் ( ஆ என்று) தொடங்கும் சொற்கள் அகரமாகவும் திரியும்.  எளிதான எடுத்துக்காட்டு:

ஆங்கு > அங்கு.

ஆன் (ஆண்பால் விகுதி )  >  அன்  ( ஆண்பால் விகுதி ).

ஆவல் >  அவா.

ஆப்பம் <> அப்பம்

ஆடு மாடுகள் வைத்திருந்தோர் ஒரு காலத்தில் தம் சொத்தால் உயர்ந்து நின்றனர். அன்ன புகழ் அவ்வழி வந்தோர்க்கும் உரித்தாயிற்று.

ஆயர் > ஐயர்.   ஆ> ஐ.

ஆரியர் என்ற சொல்லும் ரி (ரிகரம்) குன்றி ஆயர் என்றாகும்.

செல்வம் வெவ்வேறு குடிகளை வெவ்வேறு சமையத்தில் மேலேற்றிக் காட்டியது.  அரசன் போர்நடவடிக்கைகட்கு அவர்கள் உதவிநின்றும் பங்குகொண்டும் வெற்றியில் களித்தும் தாமடைந்த நிலைகளைத் தமவாக்கிக் கொண்டனர். 

பூசை முதலியவற்றில் செல்வமுடையார் இன்றளவும் முன்னிலை வகிக்கின்றனர். "மரியாதை" பெறுகின்றனர். பொறாமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அன்னதானத்துக்கு இரண்டாயிரமோ மூன்றாயிரம் சிங்கப்பூர் வெள்ளி செலவானால்,  அதை அவர்கள் கொடைசெய்கின்றனர். இவ்வுலக வாழ்வில் ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால்,   இதன்மூலம் தீயகருமவினை விலகும் என்பது உண்மை.  வந்து உண்போருக்கும் கருமவினை தீரும் என்பதும் பொய்யில்லை. ( முன்செய் தீவினை மிக்கிருப்பின் முழுமையும் நீங்காமல் சிறுபாகமே நீங்கினாலும் ஒரு பேறுதான், அடிபட்டுச் சாகவேண்டியவன் இயற்கை மரணம் எய்தல் உதாரணம் ).

ஐயப்ப சாமிகள் செய்யும் தானங்களும் இதன் பொருட்டே. சங்க காலத்தில் வானொலி அலைகளை மக்கள் அறிந்திருக்கவில்லை,  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் இல்லை என்பது மடமை. எமது சிவஞான போத உரையை இங்கு வாசித்தறிக.

ஐஸ்வரியம் யாதென அறிக. மகிழ்க

 தட்டச்சு மெய்ப்பு - பின்னர்.




.

திங்கள், 4 ஜனவரி, 2021

சண்டாளர் என்போர் யார்

 இன்று சண்டாளன் என்ற சொல்லினை அறிந்தின்புறுவோம்.

சண்டாளன் என்பவன் ஓர் இறைவணக்கத் தொழிலுடையார் பெண்ணுக்கும் பிற குலத்திற் பிறந்த  ஆண்மகனுக்கும் பிறந்தவன் என்று பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.   ஆபிடியூபா முதலான அறிஞர்களும் இச்சொல்லை ஆய்ந்துள்ளனர். நாம் இச்சொல்லை சில ஆதாரங்களுடன் காண முற்படுவோம்.

இச்சொல்லில் உள்ள " ஆளன்" என்ற சொல் உண்மையில் இது  தமிழில் உண்டான ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றது.. பண்பாளன் என்ற சொல்லில் ஆளன் வருவது போலவே இங்கும் வந்துள்ளது.    ஆளன் என்பதைப் பிரித்தெடுக்க, முன் இருப்பது  சண்டு என்ற சொல்தான்.

சண்டி, சண்டு என்பna இடக்குகள் செய்தலைக் குறிக்கிறது. கடுங்கோபமுடையவன்,  சண்டன் எனப்பட்டான்.  ஒருவேளை இத்தகு பிறப்பில் வந்தோரை இழிவாக நடத்தியதால் அவர்கள் கோபக்காரர்களாய் மன்பதைக்குள் வளர்ந்து திரிந்தனர் என்றும் நாம் எண்ணலாம். இவர்களை எமனுக்குப் பிறந்தவர்கள் என்று பிறர் பழிப்பது வழக்கமாய் இருந்தது என்று எண்ண இடமுண்டு.

பெரும்பாலும் சண்டைகள் அண்டையிலிருப்போரிடையே தாம் பெரிதும் ஏற்படுகின்றன. இன்றும் இது உண்மை. தென் கிழகாசியாவில் உள்ள ஒருவருக்கு ஆர்க்டிக் துருவவாசியுடன் சண்டை ஏற்படும் வாய்ப்பு இன்றுமே மிக்கக் குறைவுதான்.  சண்டை என்ற சொல்லை அமைக்குங்கால் அண்டையில் இருப்போரிடை ஏற்படுவதென்பதை மொழி ஆக்கியோர் நல்லபடி கவனித்துக்கொண்டுதான்  செய்துள்ளனர். சொல்லியலின்படி,  அண்டு > அண்டை > சண்டை  என்று  வருவது ஏற்புடையதே  ஆகும். அகர வருக்கம் சகர வருக்கமாய்த் திரியும்.   நீர் ஆடும் அல்லது உள்ளிருக்கும் கலம் ஆடி > சாடி ஆனது.  அடுப்பில் அட்டு ( சமைத்து ) உணவு செய்யும் கலம்  அட்டி > சட்டி ஆனது, அமணர் சமணர் ஆனார். ஆ என்று வாயைப் பிளந்து இறப்பதால் ஆ> சா என்று வந்ததா என்பது  ஆய்வுக்குரியது  ஆகும்.  ஆ > சா.   " நான் வாயைப் பிளந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை யார் பார்ப்பது ?"  என்பது பேச்சு வழக்கில் வரும் வாக்கியம். இதுவரை சாய் > சா என்பதே சொல்லியலார் தெரிவித்திருப்பது ஆகும். அகர சகரத் திரிபுகள் பழைய இடுகைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  ஆங்குக் காண்க.

ஒருவனை அண்டி இருந்துகொண்டு அண்டினவனையே ஆள நினைப்பவன் அண்டு ஆளன் அல்லனோ?  அது முனையும்கால் அவன் இடக்கு மடக்குகளும் செய்வான்.  எனவே அண்டு ஆளன் என்பதே சண்டாளன் என்றானது. பெரிதும் ஒரு பூசாரியை அண்டி இருந்துவிட்டு பூசாரியின் மகளை அடைந்துவிட்டுப் பிள்ளை பெற்றுக்கொண்டமையினால் பிறந்த மகற்குச் சண்டாளன் என்று பெயர் வருதல் ஒன்றும் வியப்புக் குரியதன்று.

இவர்களிற் சிலர் நாய் வளர்த்துக்கொண்டு அதற்குச் சமைத்து உணவு கொடுத்தனர் என்று தெரிகிறது. இவர்களுக்கு "நாய்க்கெரிப்போன்" என்ற பெயர் வந்தது. இது கடைக்குறைந்து "நாய்க்கெரி"  என்று வரும்.  இதை மேலும் தொடராது விடுவோம். நாய்க்கெரிகளும் சண்டாளரே ஆயினர்/

சண்டாளர் என்ற பகுப்பினில் வந்தோர் பிறர் உளர். பின்பொருநாள் காண்போம்.

மெய்ப்பு பின்.