ஞாயிறு, 27 டிசம்பர், 2020

பரந்தாமன்.

"   அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்:  அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்"  வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர். 

கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம்  ஆகும்.  இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.

கடவுள் பேரான்மா  அவர்போலவே அமைந்த  நாமோ  ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா.  கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.

கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது.    இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.

இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம்.  இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால்,  அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு.  தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும்.  தாமே பரம் என்ற சொற்றொடர்,  பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து  பரந்தாமன் ஆகிற்று,  இஃது முறைமாற்று அமைப்பு.

பரம் + தாம் + அன் = பரந்தாமன் 

வேறு பொருள்:  பரந்த ஆகாயத்தில் உள்ளவர்.  பரந்த + ஆம்+ அர்.  ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை.  ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 *  குறுக்கை -  சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர்.  குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

நடிகை சித்திரா ( தமிழ்நாடு) மரணம்

எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார்

எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்

அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார்

மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்

வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!

சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை

அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் எனச்சொல்வார்

நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே!

உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;

நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ?



பொருளுரை:


எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார் - இந்தப் 

நில உலகில் எதிர்காலம் முழுவதும் அறிந்த மனிதர்கள்  

யாருமில்லை;


எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்  -  எதிர்காலம் 

அறிந்துவிட்டால் அவர் கடவுள் என்னலாம்;


அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார் - இதன்

காரணமாகத்தான் திருமணத்துக்கு முன் சோதிடம் 

பார்க்கிறார்கள் (பொருத்தம் முதலியவை).


மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.-  சோதிடர்

அறிவுரையைப் பெற்று எதிர்கால வரவுகளை முதலில்

அறிந்துகொண்டு திருமணவாழ்வில் புகவேண்டும்; ( இதனால்

நீங்கள் இழப்பது சோதிடருக்குத் தரும் கூலி மட்டுமே; இது

பெரிய இழப்பு அன்று.)


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்-

இதனை அறிந்துகொள்ளும் முன்பே கல்யாணம் செய்துகொண்டு

குடும்ப வாழ்க்கை நடத்தினால் (துன்பம் ஏற்படக்கூடும்,  அதைத் 

தவிர்க்க )  மரணயோகம் இருக்கிறதா,  

என்பது தொடங்கி;


வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!---

வாழ்க்கையில் காணப்போகும் இன்னல்கள் பற்பல, அவற்றை

அறிந்துகொள்ளாவிட்டால் எவ்வாறு, தெரிந்துகொள்ளுங்கள்.


சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை -  

சின்னத்திரை நடிகை சித்திரா விரைந்து மரணம் எய்தியதை;


அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர். ---

தெரிந்துகொண்டு இவ்வழகிய உலகில் இருந்து நல்லபடி

வாழ்கின்றீர்கள். ( இந்த உயிரிழப்புக்கு உங்களால் செய்ய

முடிந்தது ஒன்றுமில்லையே!)  அதாவது சோதிடமாவது அதை

மற்றியிருக்குமே! ஒருவேளை அதைக் கண்டறிய முடிந்திருந்தால்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் 

எனச்சொல்வார்---அது கொலை என்றும்,  இல்லை என்றும்,  

தற்கொலை என்றும் (பலவாறு ) சொல்வர்;


நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே! --

நிலவரத்தைப் பார்த்தால் தலைக்குமேல் அலைகள் தோன்றியுள்ளன;


உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;  -  உண்மை

சொல்லுதலை நிலைநிறுத்துங்கள்;  பிறவற்றைச் சொல்வதை

விலக்குவதே நன்று;


நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ? - இந்தப்

புவியில் வருவதை அறிந்து வாழ்பவர்கட்கு நிகரானவர் யார்

உள்ளனர், யாருமில்லையே.





உருவணிமை: அப்புதல் மற்றும் apply

 அவ்வப்போது சில ஆங்கிலச் சொற்களும் ஒலிப்பிலும் பொருளிலும் அண்மித்து நிற்றலை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  உள்ளார்ந்த தொடர்பொன்றும் இல்லாமலே சொற்கள் ஒருமைகொண்டு நிற்றலும் உண்டு. மனிதர்களைப் போலத்தான்: வேறு வேறு கண்டங்களில் பிறந்திருந்தாலும் சிலவேளைகளில் உருவொற்றுமை யுடன் ஒருவருக்குப் பதில் இன்னொருவர் நடிப்பது முதலானவற்றைச் செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இவ்வாறின்றி  இருவேறு மொழிகளில் உண்மைத் தொடர்பு இருந்து அதனால் சொற்களில் உருவணிமை உள்ளதாதலும் நிகழ்தலுண்டு. ஒருமொழியிலும் இன்னொருமொழியிலும் தொடர்பு கற்பிக்கவும் உடனிகழ்வின்மையை உறுதிசெய்யவும் குறைந்தது நானூறு சொற்களாவது கிட்டுதல் வேண்டும் என்று ஆசிரியர் சிலர் வேண்டுவதுண்டு. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் தொடர்பு காட்ட அத்தகைய ஓர் இடுகை முப்பது ஆண்டுகளின் முன் கிட்டிற்று,  ஆனால் இப்போது அது இல்லை என்பர். இவற்றை நீங்காது வைத்திருத்தலுக்கும் செலவு உண்டாதலின் சில நீக்கப்படுதல் உண்டு. இருக்கும்போது அறிந்து வைத்திருக்காமல் அஃது போனபிறகு கவலை காட்டுவதில் தமிழர்கள் முன்னணி கொள்வதுபோல் தெரிகிறதென்பது உண்மைதான்.

ஒரு மருந்தை புண் முதலிய பட்ட இடத்தில் அப்புவதென்பது யாண்டும் நிகழ்வதே.  அப்புதல் அத்துதல் என்பன போலிச்சொற்கள். இவ்விரண்டிலும் அப்புதல் என்பது அப்பிளை என்பதுடன் உருவணிமை கொண்டது. அப்பிளை - ஆங்கிலச்சொல்: apply,  as in " Apply some powder (or snow) to your face."

ஐரோப்பிய  மொழிகளில்  "அப்ளை"  என்ற சொல்லுக்கு பழைய அர்த்தம் அப்புவது, ஒட்டுவது, தடவிச்சேர்ப்பது என்பதுதான்.  ஆங்கிலத்தில் 1400 -ஆம் ஆண்டுமுதல் இது  பயன்பாட்டில் இருந்துவருகிறது. வேலைக்கு மனுப்போடுவது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது.  ஆனால் அது 1850 "வாக்கி"லிருந்து மக்களால் புழங்கப்பட்டு வருகிறதென்று தெரிகிறது. இவற்றை ஆங்கிலச் சொற்றொகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பொருளில் இச்சொல் வழங்குவது பிற்காலத்தது என்று தெரிகிறது.

"பிலிக்காரே" என்ற இலத்தீனிலிருந்து  அவர்கட்கு இச்சொல் கிட்டியுள்ளது.  இதன் முன்னைப்பொருள் " மடக்கு " என்பது என அறிந்துரைக்கின்றனர். ஒட்டும்போதும் சேர்க்கும்போது மடக்கி ஒட்டுதல் நிகழும் செயல் என்ற அளவில்  அஃது தொடர்புடைமை காண்பதே. அதனால் அப்புதல் இச்சொல்லுக்கு அடியாய் இருத்தல் கூடுமெனினும், இன்னும் ஆய்வுக்குரியதாகவே இதைக் கிடத்தவேண்டும்.  முடிவாய்க் கூறுமளவு ஒற்றுமை காண இயல்வில்லை.

ஆயினும் இற்றை அளவில் ஓரளவு ஒலியணுக்கமும் உருவணிமையும்  கொண்டசொற்கள் இவையாகின்றன.

அறிக மகிழ்க.

பெய்ப்பு - பின்னர்.