அவ்வப்போது சில ஆங்கிலச் சொற்களும் ஒலிப்பிலும் பொருளிலும் அண்மித்து நிற்றலை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உள்ளார்ந்த தொடர்பொன்றும் இல்லாமலே சொற்கள் ஒருமைகொண்டு நிற்றலும் உண்டு. மனிதர்களைப் போலத்தான்: வேறு வேறு கண்டங்களில் பிறந்திருந்தாலும் சிலவேளைகளில் உருவொற்றுமை யுடன் ஒருவருக்குப் பதில் இன்னொருவர் நடிப்பது முதலானவற்றைச் செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வாறின்றி இருவேறு மொழிகளில் உண்மைத் தொடர்பு இருந்து அதனால் சொற்களில் உருவணிமை உள்ளதாதலும் நிகழ்தலுண்டு. ஒருமொழியிலும் இன்னொருமொழியிலும் தொடர்பு கற்பிக்கவும் உடனிகழ்வின்மையை உறுதிசெய்யவும் குறைந்தது நானூறு சொற்களாவது கிட்டுதல் வேண்டும் என்று ஆசிரியர் சிலர் வேண்டுவதுண்டு. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் தொடர்பு காட்ட அத்தகைய ஓர் இடுகை முப்பது ஆண்டுகளின் முன் கிட்டிற்று, ஆனால் இப்போது அது இல்லை என்பர். இவற்றை நீங்காது வைத்திருத்தலுக்கும் செலவு உண்டாதலின் சில நீக்கப்படுதல் உண்டு. இருக்கும்போது அறிந்து வைத்திருக்காமல் அஃது போனபிறகு கவலை காட்டுவதில் தமிழர்கள் முன்னணி கொள்வதுபோல் தெரிகிறதென்பது உண்மைதான்.
ஒரு மருந்தை புண் முதலிய பட்ட இடத்தில் அப்புவதென்பது யாண்டும் நிகழ்வதே. அப்புதல் அத்துதல் என்பன போலிச்சொற்கள். இவ்விரண்டிலும் அப்புதல் என்பது அப்பிளை என்பதுடன் உருவணிமை கொண்டது. அப்பிளை - ஆங்கிலச்சொல்: apply, as in " Apply some powder (or snow) to your face."
ஐரோப்பிய மொழிகளில் "அப்ளை" என்ற சொல்லுக்கு பழைய அர்த்தம் அப்புவது, ஒட்டுவது, தடவிச்சேர்ப்பது என்பதுதான். ஆங்கிலத்தில் 1400 -ஆம் ஆண்டுமுதல் இது பயன்பாட்டில் இருந்துவருகிறது. வேலைக்கு மனுப்போடுவது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது. ஆனால் அது 1850 "வாக்கி"லிருந்து மக்களால் புழங்கப்பட்டு வருகிறதென்று தெரிகிறது. இவற்றை ஆங்கிலச் சொற்றொகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பொருளில் இச்சொல் வழங்குவது பிற்காலத்தது என்று தெரிகிறது.
"பிலிக்காரே" என்ற இலத்தீனிலிருந்து அவர்கட்கு இச்சொல் கிட்டியுள்ளது. இதன் முன்னைப்பொருள் " மடக்கு " என்பது என அறிந்துரைக்கின்றனர். ஒட்டும்போதும் சேர்க்கும்போது மடக்கி ஒட்டுதல் நிகழும் செயல் என்ற அளவில் அஃது தொடர்புடைமை காண்பதே. அதனால் அப்புதல் இச்சொல்லுக்கு அடியாய் இருத்தல் கூடுமெனினும், இன்னும் ஆய்வுக்குரியதாகவே இதைக் கிடத்தவேண்டும். முடிவாய்க் கூறுமளவு ஒற்றுமை காண இயல்வில்லை.
ஆயினும் இற்றை அளவில் ஓரளவு ஒலியணுக்கமும் உருவணிமையும் கொண்டசொற்கள் இவையாகின்றன.
அறிக மகிழ்க.
பெய்ப்பு - பின்னர்.