செவ்வாய், 21 ஜூலை, 2020

தூது தூதன் தூதுவன்

தூது என்பது அழகிய சொல். இன்று தொன்றுதொட்டுத்
தமிழில் வழங்கி வந்துள்ளது. இந்தச் சொல் வேறு 
இந்திய மொழிகளிலும் உலவுவதுடன் மலாய்மொழி
யிலும் வழங்கிவருகிறது. அயல்நாட்டுத் தூதர்கள்
செயலகம் அமைந்துள்ள சாலைக்கு "ஜாலான் துத்தா" 
(தூதுவர்கள் சாலை) என்று பெயரிட்டுள்ளனர்.

தூத(ன்) > தூதா > டுத்தா.

தூதன் என்பவன் ஒரு பதிலாளன் ஆவான்.  இன்னோர்
அரசுடன் எதைப்பற்றியும் பேசுவதென்றால், அதை 
விழைகின்ற அரசன் நேரடியாகப் போய்ப் பேசலாம் 
என்றாலும் இது கடினமான காரியமே. செலவும் பிற
இடர்களும் விளையலாம்.  அதற்கு ஒரு தூதுவனை
அனுப்பிவைப்பதே சரியாகும்.


அரசனுக்காக அடுத்த அரசினரை அண்மிச் செல்வோன்
"ஆகமைவன்"   ( அரசுக்கு ஆக அமைதல்) என்றோ, 
அடுத்த அரசை அண்முகிறவன் என்ற பொருளில், 
" அடுத்தண்மி " " அடுத்தரசண்மி" என்றோ,  இன்னுமுள்ள
பலவழிகளில் ஏதாவதொரு வகையிலோ ஒரு சொல்லைப்
படைத்துக் கையாண்டிருக்கலாம். அரசணவர் என்றால்
நன்றாக இல்லையா?  அரசை அணவி நிற்பவர் என்பது,
முயன்றால் பல நூறு சொற்களை வடிவமைத்து 
அதிலொன்றைப் பற்றிக் கொள்ளலாம். ஊடுருவன்
எனலாமோ? அரசுகளுக்கிடை நின்று பணிபுரிதலால்
அரசிடைஞர் எனலாம்.1  இதிலெதுவும்.  கடினமுள்ளதாய் எமக்குத் 
தெரியவில்லை. அமைத்த சொல் வழக்குக்கு வந்து 
அன்றாடக் கிளவியாய ஆகிவிட்டால் அப்புறம் 
தடையுணர்ச்சி கழன்றுபோகும்.

ஆக ( முழுமையாக ) அண்டிவந்து  ( அண் - அண்டு - 
அண்மு), இங்கு எடுத்துச் செல்லும்   ( இகு), அவனுக்கு 
 (அன்)  [ பொருளைத் திருடிச் செல்வோனை]  "ஆக+ 
அண்+இகு + அன் "  ஆகணிகன் என்று சொல்ல
வில்லையா? சொல் படைக்கவில்லையா?
அதைப் போன்றதே மேலே யாம் சொன்னவையும். 
இங்கு என்பது இகு என்ற குறைவதில்லையா?  
முமுமையாக அமைந்த இறைப்பற்றுச் செயல் 
அமைப்பு,  ஆக+ அமை+ அம் என்று காணப்பெற்று
ஆக+அம்+அம் = ஆகமம் ஆகவில்லையா?
இவைபோல்வனவே உரைக்கப்பட்டனவும்.

அரசாணை பெற்று இத்தகு பணியினை
 மேற்கொண்டு அடுத்த அரசனிடம் செல்வோன்,  
தூயவனாய் இருக்க வேண்டும். மேற்குறித்தவாறு 
பருப்பொருள்கொண்டு சொல் லமைப்பதினும்  
பண்புப்பொருள்கொண்டு அமைத்தலே
தகுமென்று கருதி  தூய்(மை)+ து >  தூய்து > 
தூது > தூதன், தூதுவன் என்றனர்.2  தூய்  என்ற 
அடியின் யகர மெய் வீழ்ந்தது.இவ்வாறு 
வீழ்ந்தனவற்றைப் பழைய இடுகைகளில் காண்க.

அவனுக்குக் கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள்
 இருந்தன. அவன் யாருக்குப் பதிலாளனாகச் சென்றானோ
அவனுக்குத் தீங்கு நினையாத தூயவனாக என்றும்
இருக்கவேண்டும். 

அறிக மகிழ்க

தட்டச்சுத் திருத்தம் பின்பு.


===========================

1 ஒருவரை அடைந்து அண்டிச் சாப்பிடுகிறவனுக்கு
:'அடையுணி" ( அடை + உண் +இ). என்னும் சொல்
வழங்கிற்று.  இதைப்பின்பற்றினால் தூதுவருக்கு
"அடையுறவர்" என்றும் சொல்லலாம். இன்னோர்
 அரசினைச் சென்றடைந்து உறவினை வளர்ப்பவர்
என்று பொருள்தரலாம்!! நீங்கள் சில சொற்களை
உருவாக்கிப் பின்னூட்டம் செய்யுங்கள். 

2.  தூது என்பதில் இறுதி -து விகுதி.  இது எல்லா
 வகைச் சொற்களிலும்  ( பெயர், வினை பிற) வரும்.
எ-டு:   விழுது (விழு),  கைது( கையிலகப்பட்டுத் தடுத்து
வைக்கப்படுதல்),  வேது  ( வெம்மை),   இது,  யாது, மாது.

3 சங்கதம்:  தூத,  தூதக, தூதமுக, தூத்ய ( தூதுவ 
அலுவலகம்) முதலியவை;  இனி அம்மொழியில் இது
ஒரு குருவியையும் குறிப்பதாலும்  மற்றும் தேவி
துர்க்கையின் ஒரு சேடியையும் குறிப்பதாலும், இச்சொல்
பலவழிகளில் அம்மொழிக்கு வந்து சேர்ந்துள்ளது
என்பது தெளிவாகிறது.

தமிழில் தூது என்பது ஒரு நூல்வகை;  ஒரு சிறுகல்;  செய்தி;
தூதன் என்பவை. நூல்வகையானது,  தூதுபோவதாகப் 
புனைந்து பாடினமையால்;  செய்தி, தூதன் என்பவை 
சொல்லுடன் தொடர்புகொண்டவை.








திங்கள், 20 ஜூலை, 2020

இவ்வளவுதான் கடைப்பிடிக்க வேண்டியவை

இடைத்தொலைவே இருந்தவன்பால் 
    முடிமுகியோ நெடுந்தொலைவு
படைக்கிருமி பரவாமல் 
    கைத்தூய்மை கைக்கொளலே
நடைச்செலவு  புறப்படினோ 
    உடைகளுடன் முகக்கவசம்
கடைப்பிடித்தல் கொடுங்காலக் 
    கடுந்தொற்றில் வாழ்வகையே.


உரை:

இடைத்தொலைவு -  ஒருவனுக்கும் இன்னொருவருவனுக்கும்
இடையில் இத் தொற்று நாட்களில் கடைப்பிடித்தற்குரிய
இடைவெளி;

இருந்தவன் - இடைத்தொலைவு போற்றிக்கொண்டு 
இருந்தவன்,

முடிமுகி -   கொரனா வைரஸ் என்னும் நோய்நுண்மி;

நெடுந்தொலைவு -  (இவ்வாறு  போற்றிக்கொள்வானிடமிருந்து
நோய்நுண்மி  )வெகுதூரம் சென்றுவிடும்.

படைக்கிருமி -  கொல்லும் கொடிய நோய்க்கிருமி.

கைத்தூய்மை -  கழுவவேண்டும் என்று உடல்நலத்துறையோர்
கூறிய வேளைகளில் கைகளைக் கழுவுதல்;

கைக்கொளல் -  கடைப்பிடிக்கவேண்டும்;

நடைச்செலவு - நடந்து செல்லுவதற்கு 

புறப்படினோ - வெளியில் போகுங்கால்

உடைகளுடன் முகக்கவசம் -  உடுத்துக்கொள்வதுபோல 
முகக்கவசமும் அணிந்துகொள்ளுக;

கடைப்பிடித்தல் - இவைகளைச் செய்தல்,

கொடுங்கால  -  துன்பகாலமாகிய;

கடுந்தொற்றில் -  கடுமையான நோய்த்தொற்றின்போது;

வாழ்வகையே -  வாழும் வகை ஆகும்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

நோய்தவிர்க்க எண்ணாத நம்மக்கள்.

நாட்டுக்கும் தீமை நலத்திற்கும் கேடுதான்
பாட்டுக் கவரவரும் கூடிநின்று ---- கேட்டினையே
வாவென்  றழைப்பார்போல் வாய்கிழிய வெற்றியை
வாவென்று கூவியழைத் தால்.

நோய்த்தொற்று நாட்டில் நுழைந்துவிட்ட இக்காலம்
பாயிட்டெல் லாரும் படுத்துறங்க ---- கோவிட்டும்
கொஞ்சம் மனமிரங்கும் கூட்டில் உயிர்தங்கும்
தஞ்சம் அகமாகும் தான்.



இது தேர்தல் அறிவிப்பைக் கொண்டாடக் கூடிநின்று
நோய்த்தொற்று வாய்ப்புகளை மறந்து, பேரிடர்க்குள்
மாட்டிக்கொள்ளும் நிலையில் தம்மைப் புகுத்திக்கொண்ட
மக்களை நினைந்து பாடியது. 

நலத்திற்கும் -  உடல் நலத்திற்கும்.பிற நலத்துக்கும்
இது நோய்த்தொற்று பற்றிய பாடலாதலின் உடல்நலம் முதன்மை.
பாடு - துன்பம் ( நேரும்படி)
கோவிட்டு - கொரனா நோய்
கூட்டில் - உடம்பில்
"கூடுவிட் டாவிதான் போயின்" என்ற ஔவையின்
பாட்டை நினைவுகொள்க.
தஞ்சம் -  புகலிடம்
அகம் - வீடு.