புதன், 8 ஏப்ரல், 2020

ஐக்கியம் சொல் காட்டும் தமிழர் பண்பாடு

இன்று ஐக்கியம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லுக்குரிய விளக்கத்தினை அறிந்துகொண்டபின்பு இந்தச் சொல்லைப் படைத்தளித்தவன் ஒரு சுட்டடிச் சொற்புனைவு நிபுணனாக
இருந்திருக்கவேண்டும்  என்பதை நீங்கள் உணரத் தலைப்படுவீர்கள் என்பது எமது துணிபாகும் என்பதை ஈண்டு எடுத்துக்கூறுவோம்.

ஐக்கியம் என்பதில் இருப்பவை.

அ  -    அங்கு,

இ -     இங்கு

கு  -     சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்.  அவனுக்கு, இவனுக்கு, மதுரைக்கு,
             தில்லிக்கு,   மலைக்கு என்ற எல்லாச் சொற்களிலும் கு என்பது சென்று                சேருமிடம் குறித்து நிற்கிறது.

இ -       இங்கு

அம் =   அமைவு குறிக்கும் விகுதி.

இவற்றை ஒன்றாக இணைக்க,


அயிக்கியம் என்பது கிடைக்கிறது.

அயிக்கியம் என்பதை ஐக்கியம் என்றெழுத ஓர் எழுத்துக் குறைந்து சொல்லின்
நீட்டம் குறைகிறது.


அதாவது அங்கு  பிரிந்து நின்றவர்களும்  இங்கு பிரிந்து நின்றவர்களும்
இங்கு அமைந்து விட்டால் அதுதானே ஐக்கியம். பிரிவினர் இங்கு ( அதாவது
உங்கள் முன்பே)  அமைந்துவிட்டால்  அதுவே ஐக்கியமன்றி வேறென்ன...?
இங்கிருப்போர் யாவரும் அவ் வொன்றுபடுதலைக் கண்ணால் கண்டு இறும்பூது எய்திடுவீர்கள் அல்லீரோ?  கண்கூடாக அது இங்கேயே நடக்கிறது என்றே இச்சொல்  உங்கட்குத் தெரிவிக்கிறது.

ஐக்கியம் என்பது சுட்டடியில் வளர்ந்த சொல்.   அ  இ உ என்பன முதன்மைச் சுட்டுகள்.

இது பெரும்பாலும் இந்த வீட்டு ஆண்பிள்ளை அந்த வீட்டுப் பெண்ணிடம் தஞ்சம் புகுந்து அம்மாவை மறந்து அங்கேயே கிடந்தால், சிற்றூரார்  "  அவன்
அங்கேபோய் ஐக்கியமாகிவிட்டான்" என்று ஏளனமாகச் சொல்வதற்குப் பயன்படுத்திய பதமாகும்.  ஐக்கியம் இங்கும் நடந்து முற்றுப்பெறலாம்; அங்கும் முற்றுப்பெறலாம், வீரமாகச் சண்டை  போட்டுக்கொண்டு இருந்த ஊரின் இரு சாரார்,  " இங்கு" வந்து ஐக்கியமாவதும் சிலரால் ஏளனத்துக்கு உள்ளாக்கப்படுவதே.  சண்டைக்காரன் காலில் விழுதல் என்பார்கள். சாதிக்காரன் காலில் விழாமல் சண்டைக்காரன் காலில் விழு என்பதையும் காண்க.  பெரிய பேச்சுப் பேசினானே, என்ன கிழித்தான் என்றும் ஏளனம் செய்வது வழக்கம்.  யாம் புள்ளிவிவரம் எடுக்கவில்லை என்றாலும் அதிகமாகச் சண்டையிட்டுக் கட்சி கட்டும் இயல்பு தமிழனிடமே அதிகம் என்று துணிவோம். இன்றும் போராட்டம் தமிழ்நாட்டில்தான் அதிகம், இது புள்ளிவிவரப்படி.  ஐக்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தமிழிலிருந்து தான் உலகு பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதனாலன்றோ வெள்ளைக்காரனின் சட்டதிட்டங்கள் போல் தமிழனால் அமைக்கமுடியாமல் போயிற்று!  இன்னும் சொல்வது தேவையில்லை.

தட்டச்சுத் திருத்தங்கள் பின்.
Please read with caution. There are hacking software which can
misrepresent or create errors in the final product which reaches you
after we have posted. 


செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கொன்றொழிக்கும் கொரனா நட்பு.

ஆவீதி சென்றறி யார்க்குநற் பால்கொடாது
நாய்வீதி யில்பிறரை நண்ணாது கண்டீரோ
கோவீது நுண்மியோ கொல்நட்புக் கொள்ளுமே
தாய்வீடே  ஆமிவ் வுடல்.


பொருள்:

கொட்டிலில் நிற்கும் பசு வீதிக்குச் சென்று முன்பின்
அறியாதவருக்குத் தன்மடியைத் தடவவிட்டுப் பால்
கொடுப்பதில்லை.  வீதியில் நிற்கும் நாய் அறியாதவரிடம்
செல்லாது. இவற்றுக்கெல்லாம் அறிமுகம் தேவை.

கோவீது ( கோவிட்19 என்னும் ) கிருமியோ கொன்றுவிடும்
நட்புக் கொள்கிறது.  அறிமுகம் தேவையில்லை.  மனிதனின்
அல்லது மற்ற உயிரின் உடலைத் தன் தாய்வீடு போல்
ஆக்கிக்கொண்டு பெற்றுப் பெருக்கம் அடைந்துவிடுகிறது.
இக் கிருமி யார் எது என்று பாராமல் ஒட்டிக்கொள்வது
ஆகும். ஒட்டியபின் ஒட்டிய இடத்தில் அழிவு ஏற்படுத்துவதால்
அது கொல்நட்பு என்போம்.

இது இன்னிசை வெண்பா.  இதில் கண்டீரோ என்ற சொல்லை
எடுத்துவிட்டு " நோய்தரும்" என்ற சீரைப் புகுத்தினால் அது
நேரிசை வெண்பா ஆகிவிடும்.

நோய் வராமல் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்.
நலமே நடக்கட்டும். உலகு பழைய நன்னிலைக்கு
மேவுக. நெருங்கிச் செல்வதைத் தவிர்க்கவும்.

நண்ணுதல்  -  அடுத்துச் சென்று ஒட்டுதல்.
நுண்மி  (வைரஸ் பாக்டீரியா முதலிய நுண்மங்கள்.)
 

ஆட்டா மாவு

ஆட்டாமாவு என்ற பதத்தினை அறிவோம்.

ஒலியில் எந்தப் பொருளும் இல்லை.  ஒலி அல்லது ஒலிகள் இணைந்த சொல்லுக்குப் பேசுவோர்தாம் பொருளைத் தருகின்றனர்.  மா என்ற சொல்லுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒரு பொருளிருக்கலாம். சில வேளைகளில் ஒரே பொருளில் இருவேறு மொழிகளில் சொல்லிருக்கலாம்.  எடுத்துக்காட்டு மா என்பது.  தமிழில் மா என்ற பல்பொருளொரு சொல்லுக்கு குதிரையென்பதும் ஒரு பொருள்.  அதே சொல் சீன மொழியிலும் அதே பொருளில் உள்ளது.  இஃதொரு தொடர்பற்ற உடனிகழ்வாகவும் இருக்கலாம். அல்லது இருவேறு மொழிகளுக்கிடையில் முன் தொடர்பு இருந்திருமிருக்கலாம்.  யாது என்று ஆய்ந்தாலே புலப்படும்.  நீ என்ற சொல்லும் அன்னது.  மொழியைப் பேசுவோர் என்போர் பண்டுதொட்டு இன்றுகாறும் அதனைப் பேசிவரும் வரலாறு உடையோர்.

இனி மாவுக்கு வருவோம்.   மாவு என்பது  அரிசி முதலானவற்றை ஆட்டுக்கல்லில் இட்டு ஆட்டி அரைத்து எடுக்கப்படுவது. இப்போது மின் அரைப்பான் உள்ளது. எங்கள் வீட்டில் இன்னும் ஓர் ஆட்டுக்கல் பயன்பாடு இன்றி உள்ளது.

ஆனால் உமியிட்டு அரைத்த கோதுமை மாவினைத் தமிழர்கள் அறிந்தபோது அல்லது அவர்களிடம் அது கொணரப்பட்ட போது,  அது முன்னரே அரைக்கப்பட்டு இருந்ததால்  அதை ஆட்டுக்கல்லிலில் இட்டு ஆட்டவேண்டியதில்லையாயிற்று.   ஆட்டிய தோசை அல்லது இட்டிலி மாவு வேறிருக்க, இதனைத் -   திறமையுடன் - ஆட்டாத மாவு என்றனர் தமிழர்.

இதுவே அந்த மாவிற்கு இன்று நிலைத்த பெயராயிற்று.  ஆட்டா என்ற எதிர்மறைப் பெயரெச்சம் தனிச்சொல் ஆகிவிட்டது.  "யாவர்க்கும்" என்ற பொருள்படும் இலத்தீன் சொல் : "omnibus",  இன்று பஸ் என்று குறுகிப் பேருந்து என்னும் வண்டியைக் குறிக்கவில்லையா? சொல் நூலில் இவ்வாறு வருவது ஒன்றும் புதுமையன்று.  கல் குலுக்கு என்ற வாக்கியத் தமிழ், இன்று ஒரு கணிதக்கலைச் சொல்லாகி  "கல்குலஸ்" என்ற வடிவம் பெறுகிறது. மொழிகளில் சொற்கள் திரிந்தன -- பலவாறு.

சமத்கிருதத்தில் ஆட்டா/ அட்டா என்பது சோற்றைக் குறிக்கும்.  மாவைக் குறிக்கவில்லை.  அடுதல் - சமைத்தல்.   அடு+ ஆ =  அட்டா> ஆட்டா.  அடு+பு > அடுப்பு.  அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது என்ற பழம்பாடல் காண்க.
அட்டா என்பதில் ஆ தொழிற்பெயர் விகுதி.    நில் > நிலா எனல்போல். இச்சொல் மாவின் பெயரன்று.


மறுபார்வை பின்பு