இன்று பிடரி என்ற சொல்லைக் கவனிப்போம்.
இது இரு சொற்களால் அமைந்த ஒரு கூட்டுச்சொல். அந்த இருசொற்களாவன: பிடு என்பதும் அரி என்பதுமாம்.
பிடு என்பது ஒரு வினைச்சொல். இதன் பொருள் வேறாக்கி எடுப்பது என்பதே.
"கோயிலில் கிட்டிய வடையைப் பிட்டு அவளுடன் பகிர்ந்துகொண்டேன்" என்ற வாக்கியத்தில் பிட்டு என்ற வினை எச்சம் பிடு என்ற வினையினின்று வந்தது ஆகும்.
பிடு > பிட்டு ; இது கெடு > கெட்டு, விடு > விட்டு என்பவை போல.
சில விலங்குகட்குப் பிடரி என்பது உடலினின்று பிட்டுத் தூக்கியது போல எழுந்து நிற்பது ஆகும் . இது கழுத்தின் பின்புறம். இவ்வாறு மேலெழுச்சி இல்லாத விலங்குகட்கும் மனிதனுக்கும் இந்தச் சொல் பயன்பட்டது. இதற்குக் காரணம் சிறப்புப் பொருளில் அமைவு கண்ட இச்சொல் பிற்காலத்து தன் சிறப்பை இழந்து பொதுப் பொருளில் வழங்கியதே ஆகும்.
கழுத்து என்பது உடல்போலும் அகலமின்றி அருகிய பகுதியே ஆகும். இது நன்றாகத் தோன்றுமாறு அருகுதல்: அரு > அரி ( அரு + இ ) என்ற சொல்லும் இணைக்கப்பட்டது.
பிடு + அரி = பிடரி.
பீடம் என்ற சொல்லும் இவ்வாறு ஒரு மேலெழுந்த பகுதியைக் குறிப்பதுவே ஆகும், பிடு+ அம் = பீடம், இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். பீடு என்பதும் இவ்வாறு பிட்டெழுந்த நிலையையே குறிக்கும்,