சனி, 27 அக்டோபர், 2018

நித்தியமும் பத்தியமும்

இற்று என்ற ஒலியுடன் உலவிய சொற்கள் பல இத்து என்று மாறிவிட்டனவென்பது இட்டுக்கட்டு  அன்று:   சொல்லாய்வில் ஓர் உண்மையாகுமென்றறிக.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் என்று திரிந்தது.   இற்று என்பது இத்து என்றானது மட்டுமின்றி  லகரமும் ரகரமாய்  அழகாக வேறு சொற்களில்போலவே திரிந்தமையைப்  பலரும் உணர்ந்துள்ளனர்.  பின் அது ஒரு தகர ஒற்றினையும் இழந்து சிதம்பரம் என்றானது.  இற்றை நிலையில் சிற்றம்பலம் வேறு, சிதம்பரம் வேறு என்று நினைக்கின்ற அளவிற்கு மக்கள் முந்து வடிவினை மறந்தனர்.  வேறு சிலர் மாற்றமான சொல்லமைப்புகளையும் உரைத்தனர்.

மொழிகளில் புதிய சொற்கள் தோன்றுதற்குத் திரிபுகளே உதவியாய் உள்ளன. இல்லையென்றால் ஆதிமனிதன்  பிள்ளை  நாலு சொற்களுடனே தாம் நானிலத்தை வலம்வந்திருப்பான். இதை உணர்ந்த தொல்காப்பிய முனிவர் இயற்சொற்களுக்கு அடுத்துத் திரிசொற்களைச் செய்யுளீட்டச் சொற்களாய் அறிவித்துச் சூத்திரம் செய்தார்

நித்தியம்:

நித்தியமென்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.  உலகில் நிற்பதும் நில்லாததுமென இருவகை உண்டு. நில்லாமல் ஓடிவிடுவதில் நித்தியம் எதுவுமில்லை.  காலம் கடந்தவுடன் உயிர் ஓடிப்போகிறது.   எங்கே போயிருக்கிறது என்பதுகூட நாமறியாததாய் உள்ளது.  "குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே"  என்று வள்ளுவனார் கூறுகிறபடி உயிர் பறந்தோடிவிடுகிறது. நிலை நில்லாதது இவ்வுலக வாழ்வு.    நித்தியம் இல்லை.

நில்+ து >  நிற்று + இ + அம் = நிற்றியம்  >  நித்தியம்.

நித்திய ஜீவன் என்ற தொடரில்  ஜீவனென்பது  யிர் > ஜிர் > ஜீ;     ஜீ + அன்= ஜீவன் என்று இலங்கை ஞானப்பிரகாச அடிகளார் விளக்கியுள்ளார்.  யிர் என்பது உயிர் என்பதில் உகரம் நீங்கிய தலைக்குறை ஆகும்.

உயிர் என்பதே மிக்க அழகுற அமைந்த சொல்லாகுமே!   உ =  உள்ளே;  இர் = இருப்பது,  உடலுக்குள் இருப்பது உயிர்.  ஆகவே,  யிர்> ஜிர் என்று எடுக்காமல் இர் > ஜிர் என்றே விளக்கலாம்.   இரு என்பதன் அடியே இர் என்பது.  ய  -  ச  - ஜ என்பதோ வழக்கமான திரிபுவகை.  பல உலகமொழிகளில் காணப்படுவது ஆகும்.   யூலியுஸ்  சீசர்  > ஜூலியஸ் சீசர்.    யேசுதாஸ் > ஜேசுதாஸ்.  யமுனா - ஜமூனா.  ஜாஸ்மின் - யாஸ்மின்.  இதைப் பல்கலையிற் சென்று படிக்கவேண்டுமோ!  காய்கறி வெட்டும்போதே கற்றறியலாம்.  எத்தனை வேண்டும் இப்படி?  யி என்பதில் இ என்பதையும் இணைக்கலாம்.

பத்தியம்.

தமிழ் உலக முதல்மொழி என்று வாதாடவரவில்லை. முதல்மொழியாகவும் இருக்கலாம். நேற்றைய மொழியாகவும் இருக்கட்டும். நேற்றுவந்தவனிடமிருந்து எடுத்துக்கொள்வதும் ஓர் எடுத்தலே ஆகும்.

நோய் தீரவேண்டுமென்றால் பத்தியம் பிடிக்கவேண்டும்.  பிடிப்பது என்று ஏன் கூறுகிறோம் என்றால் அது பற்றி ஒழுகுதற்குரிய ஒன்றாக இருப்பதனால்.

பற்று > பத்து > பத்து+ இ + அம் =  பத்தியம்.

பற்றுதற்குரிய ஒழுகலாறு என்பதே சொல்லமைப்புப் பொருள்.  வாத்துமுட்டை, கோழிக்கறி, கருவாடு, பச்சைமிளகாய், பாகல்  இவையெல்லாம் விலக்கவேண்டும் என்பதைப் பத்தியமென்ற சொல்லில் எதிர்பார்த்தல் கூடாது.  எத்தனை விடையங்களைத்தாம் ஒரு சொல்லுக்குள் அடைத்துவிட முடியும்? 

வெள்ளி, 26 அக்டோபர், 2018

துரு ஓங்கிய நிலை துரோகம்.

இரும்பில் பிடிப்பது துரு.

இரும்பு என்பதைத் தமிழர் பிற்காலத்து அறிந்துகொண்டனர்.  உந்துவண்டிகள் வந்தபின்பு,  சிலர் ஒட்டுநர்களாகப் பயிற்சி பெற்று  ஓட்டி ஊதியம் பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர்.  அதுபோல இரும்பு வந்தபின்பு அதை உருக்கவும் அதனால் ஆயுதங்கள் செய்யவும் தமிழர் அறிந்துகொண்டனர்.

இரும்பு பொன் என்ற இரண்டிலும்  பொன்னையே அவர்கள் முதலில் அறிந்திருந்தனர்.  இரும்பு பின் வந்தது,   ஆகவே அதை இரும்பொன் என்றனர். இரும்பொன் என்றால் பொன்னை விடப் பெரியது என்று பொருள்.  இப்படி ஒப்பாய்ந்து பெயரிடுவதென்றால் பொன் முன் வந்தது என்ற பொருள்  சொல்லாமல்  விளங்கும்.

இரும்பொன் என்பது பின் இரும்பு என்று திரிந்தது   - நல்லபடி சொல்லானது.

துரு என்பது இரும்பைத் துருவிச் செல்வது. முதனிலைத் தொழிற்பெயர்.  எண்ணெய் சாயம்  போலும் பொருள்களால் தடையேதும்  ஏற்படாவிட்டால் துரு இரும்பைத் தின்றுவிடும்.  ஆனால் நாளாகலாம்.

இரும்பு நல்லது;  துரு கெட்டது என்று மக்கள் அறிந்துகொண்டனர்.  எளிதில் அப்போது கிட்டாத இரும்பை  அருந்துபொருள் துருவும் துருவாகும். இதிலிருந்து  துரு துர் என்று குறுகிக் கெடுதலை அறிவித்தது.

எடுத்துக்காட்டு:  துரு > துர்.     பலன் -   துர்ப்பலன்.
அதிருட்டம்  -   துரதிருட்டம்.

துரோகம் என்பதென்ன?  துரு ஓங்கிய நிலையே துரோகம் ஆகும்.

துரு =  கெடுதல். (பெறப்பட்ட பொருள்)
ஓகம் =  ஓங்கிய நிலை.

ஓ > ஓங்கு
இடைக்குறைந்து :  ஓகு.     பின்:  ஓகு+ அம் -  ஓகம்.

துரு+ ஓகம் =  துரோகம்:  கெடுதல் ஓங்கிய செயல்.

சொல்லமைப்பை ஆய்ந்து பெறப்படும் பொருள் இன்றைய வரையறவுக்கு ஏற்றதாய் முழுமையானதாய் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனைப் புரிந்துகொள்ளாத கற்போன் எவனும் ஓர் அறிந்த ஆசிரியனிடம் மேலும் விளக்கம் பெற்றாலே முடியும். இங்கு சொல்லமைப்புப் பொருள் சொற்பொருளினை நோக்கச் சற்றுப் பொதுமை வாய்ந்ததாய் உள்ளது. சரி, ஸ்பீக்கர் (  நாடாளுமன்றத் தலைவர் )  என்ற சொல் பேசுவோன் என்றுதானே  பொருள்படுகிறது.  அதன் சொற்பொருளுடன் அது ஒத்து நிற்கவில்லை அன்றோ?  அதனை நன்கு அறிந்துகொள்ளச் சொல்லியல் அறிவுடன் வரலாற்றறிவும் தேவைப்படுகிறதே!

இங்கிலாந்தில் மக்கள் பதிலாளர்கள்  வைத்த கோரிக்கைகளை, தெரிவித்த கருத்துக்களை அரசரிடம் அல்லது அரசியிடம் சென்று தெரிவித்தவரே  பேசுவோனாகிய ஸ்பீக்கர். மற்ற பொதுவர்கள் (காமன்ஸ்)  அரச அரசிகளைக் காணற்கு "அருகதை" அற்றவர்கள். இப்படியே ஸ்பீக்கர் என்ற சொற்பொருள் உருப்பெற்றது.  சில சொற்கள் கால ஓட்டத்தாலும் வரலாற்றுப் பின்னணியாலும் தம் பொருளைப் பெறுகின்றன.  இத்தகைய பொருளைப் பெறுபொருள் என்று குறித்துள்ளேம்.  புகார்மனு, புகார் என்ற சொற்களின் பொருளை விளக்கியுள்ளேம்.  உருது கிருது ஒன்றுமில்லை. இப்போது புகார் என்ற சொல்லை எந்த மொழியினரும் பயன்படுத்தலாம்.

அறிந்து மகிழ்க.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன.
பிற தோன்றின் (  மென்பொருள் தன்- திருத்தத்தால் ) உரிய நேரத்தில்
செம்மையுறும்.
 

சிறுமி கொலை - குற்றவாளி பிடிபடுவானா?

நோக்குங்கால் யாவரும்  கால்களுடன் கைகளுடன்
பார்க்கவிரு கண்களுடன் பண்பமை  ----  நீக்கமுடன்
ஞாலமேல்  உள்ளார்   ஞயமுடையார்  யார்யாரோ
காலமும் சொல்லா விடை.


விராலிமலை புதுக்கோட்டை வீட்டின்  முன்னே
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்னை
வராதவொரு வன்னெஞ்சன் வந்து கண்டு
வளைத்தாழ்த்திப் பிடித்திட்டான்  கொண்டு சென்றான்
உறாததுயர் உறப்போவ தறிந்தி   டாத
ஒண்சிறுமி கண்டமதை அறுத்து க் கொன்றான்
இராதுவெளித் துணையுமிலர் சிறார்கள் சற்றும்
ஏற்பிலாத  தெருக்களியில் தவிர்ப்பீர் ஆட்டம்!


( இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளியைப்
பிடித்துவிட முடியுமா --  என்பது தெரியவில்லை. )


இராது - வீட்டுக்குள் இருக்க மாட்டாமல்.