ஞாயிறு, 14 அக்டோபர், 2018

tamil for word: battery.

பேட்டரி, பாட்டரி என்னும் மின்சேமி

பாட்டியுடன் ஒரு பேரன் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்  . திடீரென்று கைப்பேசி நின்று உரையாடல் அறுந்துபோயிற்று.  என்ன என்று பார்க்கும்போது  கைப்பேசியில் "பேட்டரி" என்னும் மின்சேமிப்பு (மின்சேமி ) தீர்ந்துவிட்டது.  அதில் மீண்டும் மின்னாற்றலை ஏற்ற வேண்டியதாயிற்று.

என்னைத் தொடர்பு கொண்டு, அந்தப் பாட்டியின் பேரன் கேட்டார்.(இது இலக்கணப்படி தவறு:  ஒருமை பன்மை மயக்கம்)  இந்தப் பாட்டி என் அறைக்குப் பக்கத்தில் இருந்ததால், நான் இதை அறிந்து பேரனிடம் தெரிவித்தேன்  -  ஒரு குறுஞ்செய்தி மூலமாக.

மின்சேர்வி:

என் உரையாடல் தமிழில் இருந்தது, ஆனால் நான் மின் கலம் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்தியது மின்சேர்வி என்ற சொல்.

நான் கொடுத்த தகவல்:   " பாட்டி கைப்பேசியில் மின்சேர்வி தீர்ந்துவிட்டது" என்பதுதான்.

சேர் என்ற சொல் ரகர ஒற்றை இழந்து  சிலவிடத்து சே என்று வரும்.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல் :  சேமிப்பு.

சேர்கரித்தல் -  சேகரித்தல்:  இதில் ரகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: நேர்மித்தல் ஆகும்.  நேர்மித்தல் என்றால் ஒரு பட்டியல் பெயர்களில் ஒவ்வொன்றுக்கும்
 நேர் எதிரே குறிப்பு எழுதிவைத்து நிறுவுதலைக் குறிக்கும்.

கருணாகரன் ............  தளபதி.

அதாவது கருணாகரன் தளபதியாய் நேர்மிக்கப்படுகிறார்.   இது பின்னாளில் நேமித்தல் என்று தன் ரகர ஒற்றை இழந்தது.

ஓர்மித்தல் என்ற சொல் மலையாளத்தில் வழங்குகிறது. இதன் பொருள்: நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது.  ஆனால் இச்சொல் ஓமித்தல் என்று திரியவில்லை.  ரகரம் நன்றாகவே ஒலிக்கப்படுகிறது.  சொற்களைக் கவனமாக உச்சரிப்பவர்கள் மலையாளமக்கள் ஆவர்.

மின்னடை

இவை ஒரு புறம் கிடக்கட்டும்.  மின்சேர்வி என்பதையே நான் பயன்படுத்தினேன்.  ஒரு சமயம் : மின் அடை அல்லது மின்னடை என்பதைப் பயன்படுத்தினேன்,   ஒரு பாட்டரியில் மின் ஆற்றல் அடைந்து வைக்கப்படுகின்றது.  ஆகவே இதுவும் நல்ல மொழிபெயர்ப்பே.

மின் கலம்

ஒரு மின்சேர்வி ஒரு சட்டிபோல; அதற்குள் மின் ஆற்றல் பெய்து வைக்கப்படுகிறது.  ஆகவே கலம் ஆகலாம்.

ஆற்றலடை:

ஆற்றலடை என்றும் சொல்லலாம்.  மின் ஆற்றலை அடைந்து வைத்துள்ளதே பாட்டரி-- ஆற்றலடை.  தேனீக்கள் தேன்சேகரித்து வைத்துள்ள அடைவு  தேனடை எனப்படுகிறது.  அதேபோல ஆற்றல் அடைந்து  வைத்துள்ள அடைவு ஆற்றலடை ஆகிறது.   நன்றாகவே உள்ளது.

இருதா:

இனி சந்தா,  வாய்தா முதலிய சொற்களின் அமைப்பைக் காண்பீர்களாக.  சம் - சேர்தலைக் குறிப்பது; தா = சேர்தலுக்குத் தரவேண்டிய கட்டணம்.  ஆகவே சந்தா ஆயிற்று.  சம் என்பது தம் என்பதன் திரிபு.  முன் இடுகைகள் காண்க.

இதே பாணியில் அமைந்த இன்னொரு சொல்:   நிலம் முதலியவற்றின் விளைச்சல்களிலிருந்து ஒரு பகுதியை வரியாகக் கொடுக்கவேண்டியுள்ளதைக் குறிக்கும். .  அப்படிக் கொடுக்கப்படுவது வாய்தா எனப்பட்டது   :   அதாவது வருவாயில் தா என்பது வாய்+தா = வாய்தா.
படுதா என்ற சொல்லைப் பாருங்கள்.  போர்வைபோலப் படர்வாக பிற பொருள்கள் மேல் போட்டு மூடத் தருவது படுதா.   படு= படர்வாக. அல்லது மேலே படுமாறு;   தா= போட வழி தரும் விரிப்பு.   படுதா என்பது நல்ல அமைப்பான சொல்லே.இவை எல்லாம்  மிக்க எளிமையான சொற்புனைவுகள். இவற்றைப் பின்பற்றி பாட்டரி என்பதை  இருதா என்று கூறலாம்.  இருப்பில் இருப்பதாகிய மின்னாற்றலைத் தருவது இருதா.  மின்னடைக்கு இருதா என்பதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.  முன் அமைந்தவற்றை ஆராய்ந்து அதேபாணியில் அமைக்க என்ன கட்ட(கஷ்ட) மென்று கேட்கிறோம்?   ஒவ்வொரு கைப்பேசியிலும் ஓர் இருதாவாவது  தேவை.

இப்போது இங்கு தரப்பட்ட மொழிபெயர்ப்புகள்:

மின்சேமி
மின்சேர்வி
மின்னடை
ஆற்றலடை
இருதா
மின் கலம்.

ஆங்கிலத்தில் பாட்டரி என்பது அடிப்பு என்று பொருள்படும் சொல்.  மின் ஆற்றலை அது அடிக்கிறது.   அதாவது செலுத்துகிறது.   அடிக்கும் மட்டை பேட் எனப்படுகிறது.  இங்கிலாந்துச் சட்டத்தில் ஒருவனை அடித்தால் அது பேட்டரி என்னும் குற்றம்.  இது ஆங்கில ஒருமைச்சட்டத்தின்படியான குற்றவியற் குற்றம் . English common law,   criminal law.  சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் இதை voluntarily causing hurt  என்று  சொல்கிறோம்.  பாட்டரி என்ற ஆங்கிலப் பதத்தில் மின்சார்ந்த சொல் அல்லது பொருண்மை எதுவும் இல்லை.  இதற்குச் சொல்வழக்குத் தான் காரணமாகிறது.

வேறுபட்ட வகையாக மொழிபெயர்ப்புகளை நீங்கள்  கண்டிருந்தால் இங்குப் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.

திருத்தம் பின்.
( சில மாற்றங்கள் காணப்பட்டன.  கவனிக்கின்றோம்).

இலக்குவன் கோடிழுத்த தகையோன்.

நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.

இர்  >  இர் +ஆம் + அன் =  இராமன்.  ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன்.  உலகில் மிகப் பெரியது விண்.  அந்த விண்ணின் நிறம் கருமை.  அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும்.  அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும்.  இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )

இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை).  எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?

அனுமன்:   மனிதனுக்கு அண்மையானவன்.   அண் = அன் =அனு.   மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி -  கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).

பீமன் = பீடுடைய மன்னன்.  பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.

தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ  இன்ன பிற தோன்றி இன்புறுத்தும்.  வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம்.  அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.

இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே.  காதை = கதை.

சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன்.  "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.

ஒ.நோ: பட்சி >< பக்கி ;  நக்கத்திரம் > நட்சத்திரம்.  பக்கம் > பட்சம்

கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.

இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு:  பழம் > பலம்.   மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க.  பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர். 

அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே.   அடிச்சொல்: அழ.  அழ என்பதன் திரிபு  அல.   அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர்.  உண்மையில் இது :  அல+ கு + ஆர் + அம் ஆகும்.   அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும்.  ஆர்:  நிறைதல்.  அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும்.  அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது,  அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை.  அலங்கு ஆர் அம் - அலங்காரம் :  அழகின் நிறைவு எனினுமாம்.  இதை இங்கு சொல்லக் காரணம்:  இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது;  பழ > பல என்பதுமது.

இனி இலக்குவனுக்குத் திரும்புவோம்.  இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம்.  அதைப் பின் விளக்குவோம்.

இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று.  தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே.  கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக.   வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.


இலு + கு = இலக்கு.  கோடிழுத்த இடம்.


























அடிக்குறிப்புகள்:

இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?

வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?

வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

சனி, 13 அக்டோபர், 2018

அகலியை ( அகலிகை )

அகலியையின்  வரலாறு நம்மைச் சிந்திக்க வைப்பதாகிறது,

இதைப்பற்றிச்  சில எழுதியுள்ளோம்.

கீழ்க்கண்ட இடுகையையும் படித்து இன்புறுவீராக.

https://bishyamala.wordpress.com/2018/10/13/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/