வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தாது என்றால் என்ன

தாது என்ற சொல், தருதல் என்ற வினையடியாகப் பிறந்ததே.  இதன் பொருள் ஒன்றிலிருந்து பெறப்பட்டது என்றாலும் அத்தகு பொருள்கள் ஒருவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

தாது :

மண்ணால் தரப்பட்ட  பொன் இரும்பு புட்பராகம் முதலியன.

பூவினால் தரப்படுவது:  பூந்தாது.

நரம்பினால் தரப்படும் துடிப்பு.  அதனின்று நோயறியும் நிலை.

காலத்தினால் தரப்படும் ஆண்டுக்கணக்கு.

மாற்றித் தரப்படும் பொருள்.

மலர்மொட்டு வாயவிழ்தல்

எரிப்பில் தரப்படுவது.   சாம்பல்.

இயற்கையினால் தரப்படும்  நிலம், வளி, நீர், விசும்பு, தீ முதலியன.

உடலினால் தரப்படுவது:  பிணிகள் முதலியவை.

இவ்வாறு தாது என்பது தரப்பெறும் பல பொருள்களைக் குறித்தன,


பேச்சு வழக்கில் சிலவே உள்ளன. பிற இலக்கிய வழக்கு உடையவை.   தா என்ற ஏவல் வினையிலிருந்து இதனை அமைத்துக்கொண்டுள்ளனர்.  பிற காரணங்கள்  மற்றும் மூலங்கள் கூறிக் குழப்பத் தேவையில்லாத சொல் இது.

து என்னும் தொழிற்பெயர் பிற பெயர்கள் வேறு சொற்களிலும் வந்துள்ளன:

கைது --  கையிற் பிடிபட்டது.  கையும் களவுமாய்ப் பிடிபட்டான் என்பது ஒருவகைக் கைது.

விழுது

பழுது.

மாது    (  அம்மா>  மா > மாது )

கோது.

சூது   ( சூழ்து என்பதில் ழகர ஒற்று கெட்டது) விளையாடும் போது சூழ்ந்து ஆடுதற் குரியது; இன்னும் விளையாடுவோர் வட்டமாக இருந்து ஆடுவது ஒரு காரணமாகும்.

தூது  (  தூய்து என்பதில் யகர ஒற்று கெட்டது,  தூதன் அனுப்பிய அரசனுக்குத் தீது எண்ணாத நேரியனாய் இருக்கவேண்டும் ).

சேது  ( சே:  செம்மை,  சிவம் ).

ஏது  ( ஏ என்னும் வினா)

வேது  ( வேது பிடித்தல்:  போர்வைகளால் போர்த்தி வியர்க்கச் செய்தல்)

இது  ( பொருட் சுட்டு)  

அது

கேது   இடுகையில் முன் விளக்கப்பட்டது.

வாக்கியம்}

ஒரு சித்தவைத்தியர் கூறியது:  முட்டையின் சிவப்புப் தாதை எடுத்து அதில்
இந்தச் சாதிலிங்கத்தை உரைத்துக் கலக்கி முழங்காலில் தடவவேண்டும், இப்படி 48 நாள் செய்யுங்கள்.


தா என்பது ஏவல் வினை.  எடுத்துக்காட்டு:

சங்கத் தமிழ்மூன்றும் தா.

செம்மாதுளை பிளந்து தா.

இனித் தாகம் என்ற சொல்:

தாகம்:  நீர் தருவதற்கு உள்ள நிலை. உடலுக்கு நீர் தருவதற்கு நேரம் வந்துவிட்டதைக் குறிப்பது.

தா:   தருதல் குறிக்கும்.

கு:    வந்து சேர்தல் அதாவது சேர்விடக் குறிப்பு.

அம்:  விகுதி (< மிகுதி).

தா+கு+ அம் =  தாகம்.

தவித்தல் என்ற சொல்:

தா+இ.   > தாவி > தவி.  (  இது முதனிலைக் குறுக்கம் ).

இங்கு வந்த இகரம் ஒரு  வினையாக்க விகுதி.  ஒரு வினையினின்று இன்னொரு வினை தோன்றல்.

நீர் தருக என்பது  தா+இ = தவி ஆனது.

தா என்ற ஏவல் வினை,  தரு, தந்து, தந்தான்/ள், தரமாட்டான் ,  ---- இவ்வாறு பல சொற்களில் குறுகுதல் இயல்பு.  தா>த.

இந்தா என்ற சொல்லில் குறுகவில்லை.

தா என்று கேட்குமுன் இந்தா என்று கொடுத்துவிடு (வாக்கியம்).

தா > தா இ > தவி >  தவி+ அம் = தாவம்   =  தாகம்

இவை தோற்றுவாய் ஒன்றான சொற்கள்.

வகரம் பகரமாகும்.  எ-டு:  வசந்தம் > பசந்த்.   இது  பல மொழிகட்கும் உரிய
திரிபு.

தாவம்> தாபம்.  ( நீர் விடாய்;  பொதுவாக விடாய் ).

தவித்த நாவுக்குத் தண்ணீர் கொடு.  (வாக்கியம்).  நீர் கொடு - நீர் தா இரண்டும் ஒன்றுதான்.


தாது மற்றும் தாவில் பிறந்த பிறவற்றின் உறவு விளக்கப்பட்டது.

இன்னும் பல பழைய இடுகைகளில் உள.




வியாழன், 20 செப்டம்பர், 2018

பாதாளம் வரை செல்வோம் தடுப்பவர் யார்?

இன்று பாதாளம் என்ற சொல்லினமைப்பையும் தெரிந்துகொள்வோம்.

பாதாளம் என்ற சொல் காதில் விழும்போது ஏதோ வேறொரு சிறப்பான மொழியில் மிக்கச் சிறப்புடன் அமைவுற்ற சொல்லினைப் போலன்றோ ஒலிக்கிறது.  இதனால் ஏமாந்துவிடக் கூடாது. மெய்ப்பொருள் காணும் மேலான எண்ணத்துடன் என்றும் செயல்படுதலே நன்றாகும்.

பரத்தல் என்ற சொல் விரிவாய் இருத்தல் என்று பொருள்படும்.  தொழிற்பெயர்கள் அதாவது வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லாக மாறும் சொற்கள்,  பலவகைகளில் மாறும்; அதிலொரு வகை முதலெழுத்து நீண்டு அமைவதாகும்.  ஓர் எளிய உதாரணம்:  சுடு என்ற வினைச்சொல் சூடு என்று நீண்டமைந்து பெயராகிறது. பின்னும் அது ஒரு விகுதி பெற்றுச் சூடு என்று நிற்பது சூடம் ஆகும்.  பின்னும் அம் விகுதி அன் ஆகி சூடன் என்றாகும். பொருளிலும் மாறுதல் ஏற்படுதல் உளது.

இவ்வாறாக.  பர என்ற வினைச்சொல் பார் என்று அமையும். பார் என்பது இந்தப் பரந்த உலகம் என்று பொருள்படும்.  முன்னரே சொன்னோம்: பரத்தல் என்றால் விரிந்தமைதல். பார் என்ற சொல் பின்னர் இறுதி எழுத்து வீழ்ந்து பா என்று ஆகும். இந்த நிலையைக் கடைக்குறை என்பர். அதாவது கடைசி எழுத்துக் குறைந்து வருவதாகும். பொருளும் பரவலாக இருத்தல் என்பதே.

பாருங்கள்:  காலின் கீழ்ப்பகுதி பரவலாக அல்லது நடக்கும்போது நிற்க வசதியாக விரிந்து அமைந்துள்ளது.  மிகப்   பொருத்தமாக அதற்குப் "பாதம்" என்றனர்.  பா : பரவலாக;   து:  இருப்பது;  அம்: இது சொல்லின் இறுதி. அல்லது விகுதி.

பாதுகை: இது கீழே பரவலாக இருக்கும் காலணியைக் குறித்தது. ஒரு பற்றன் இராமபிரானின் பாதுகையே துணை என்று தொழுகிறான். இதனால் பாதுகை என்ற சொல்லுக்குத் துணை என்ற பொருளும் ஏற்பட்டது:  இது பெறுபொருள். 

தாள் என்பது  தாழ இருக்கும் காலைக் குறிக்கிறது.  "தாள் பணிந்து போற்றினேன் "  என்பதில்லையா:  அதுபோல்வது.  இது தாழ இருப்பதைக் குறிக்கும் தாழ் என்ற வினைச்சொல்லுடன் உறவுடைய சொல். உங்கள் அக்காவும் தம்பியும் உறவினர் ஆனதுபோலவே சொற்களெல்லாம் உறவுமுறை போற்றுகின்றன,  உறவு கண்டும் பொருள் காணலாம்.

பரந்து தாழ்வாக இருக்கும் பகுதியே பாதாளம் ஆகும்.  வழக்கில் அது மிக ஆழத்தில் இருக்கும் நிலப்பகுதியைக் குறிக்க வழங்கப்படுகிறது.  இயல்பான சொற்பொருளுக்கு மிக்க ஆழ்ந்த பொருளைத் தந்துவிடும் வழக்கு என்பது.  வழக்கு என்றால் எப்படிச் சொல்லை ஒரு மொழியில் மக்கள் வழங்கினார்கள் என்பது.  தொல்காப்பியப் பாயிரத்தல் பனம்பாரனார் எழுத்தையும் சொல்லையும் மற்றும் பொருளிலக்கணத்தையும் செய்யுள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் விதம் இவற்றையெல்லாம் ஆராய்ந்ததாகக் கூறுகிறார்.  இவ்வாறு பாதாளம் என்ற சொல் மக்கள் பயன் கொண்ட விதம் காணின் மேலாக உள்ள நிலப் பள்ளங்களைக் குறிக்காமல் ஆழமான நிலப் பரப்புப் பள்ளங்களையே பாதாளம் என்றனர்.  சொல்லின் அமைப்பை மட்டும் கண்டு உணர்ந்தால் பக்கத்தில் உள்ள படுகையைக்கூடப் பாதாளம் என்னலாம் எனினும் வழக்கில் அது இன்னும் ஆழமான பரந்த கீழ்நிலத்தைக் குறிக்கிறது; நாமும் இவ்வழக்குக்கு மதிப்பளித்து அவ்வாறே பயன்படுத்தி நம் மொழியைக் காப்போமாக.பாதாளம் என்பதும் ஒரு காரண இடுகுறிப் பெயரே ஆகும்.

பிழைகட்கு பின் கவனிப்பு.

இலக்குமி என்ற தெய்வச் சொல்

இல் என்பது தமிழில் வீடு என்று பொருள்படும் இனிய சொல். ஆத்துக்காரி என்பதனை இல்லத்தரசி என்று சொல்கிறோம்.

இல் என்பது ஓர் உருபுமாகும். கண்ணில்,   காதில், தோட்டத்தில் வீட்டில் என்று இவ்வுருபு இடப்பொருள் தருகிறது.

இல்லை என்று பொருள்தரும் இல் என்னும் சொல் வேறு பொருளுடைய வேறு சொல். இச்சொல் பற்றி ஈண்டு பேசவில்லை.

 ஆண்மகனை மணம்புரிந்து வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை  இலக்குமி என்றே சொல்கிறோம். நம் வீட்டுக்கு ஓர் இலக்குமி வந்திருக்கின்றாள் என்று எல்லோரும் மகிழ்வுகொண்டாடுவர்.  கிருகலெட்சுமி என்ற தொடரும் வழக்கில் உள்ளது. இலக்குமி வீட்டுக்கு நல்லனவெல்லாம் கொண்டுவருபவள்.

இலக்குமி:

இச்சொல்லில் இல் என்ற  சொல் முன் நிற்கின்றது. இதைப் பிரித்தால்:

இல் :  வீடு.
அ  :      அவ்விடத்து.  அங்கு.
கு:        சேர்விடம்.
உ =     முன்பு.
மி :       இது ம் மற்றும் இ என்ற இரண்டும் இணைந்த இறுதி.  பூமி என்ற சொல்லுக்கு யாம் கூறிய விளக்கத்தை மனத்தில் இருத்திக்கொண்டு நோக்குக.

இதில் கு என்பதன் உகரம் கெட்டது,

இது " இல்லத்துக்கு வந்து சேர்ந்து முன் நிற்பவள் "  என்பதாகிய பொருளைத் தருகிறது.  இதில் வந்த  இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளலாம்.  பூமி என்பதில் அஃறிணைக்குரிய விகுதி எனலே பொருந்துவது.

இலக்குமி என்ற இதே சொல்தான் இலட்சுமி என்றும் விரிந்து கிருகலெட்சுமி என்றும் வருகின்றன

இலக்கு என்ற சொல்லும் இழு இலு என்பவும் தொடர்புடையன. அவற்றைப் பின்னர் காண்போம்.