ஞாயிறு, 11 மார்ச், 2018

ஐம்பூதம், பூதம் ஆகியவை



பூதம் என்ற சொல்லை முன்போர் இடுகையில் விளக்கியது நினைவிலுள்ளது.  அதை இங்கு மீண்டும் விளக்குவோம்.

பூதம் என்பது தோற்றம் என்றே அடிப்படைப் பொருளைத் தரும்.
பூத்தல்  என்பதற்குப் பல பொருள் உள்ளன வென்றாலும்,  அவற்றுள் தோன்றுதல் என்பது மொன்றாகும்.

பூ (வினைச்சொல்).

பூ+ து + அம் = பூதம் என அமையும்.
நிலம், தீ, விசும்பு.  நீர், வளி (காற்று)  என்பன ஐம்பூதங்கள்.

விசும்பு என்பதில் செங்கதிர், நிலவு, உடுக்கள் என்னும் நட்சத்திரங்கள் , ஆகாயம் எனப்படும் வெட்டவெளி என யாவும் அடங்கும்.

பூ > பூ+து+ அம் > பூத்தம் , இது இடைக்குறைந்து  பூதம் என்றாம் எனினும் விளைவு ஒன்றே.

பூமி என்ற சொல்லும் பூத்தல் என்பதனடிப் பிறந்தது.  இது முன்னர் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.  அங்குக் காண்க.

சொல்லமைப்பில் பகுதியும் சொல்லீறும் இருவகையாகவும் புணரும். அதனைப் பின் வரும் உதாரணத்தால் அறிந்துகொள்க.

அறு + அம் =  அறம்.  ( வரையறுக்கப்பட்ட விதிகள் என்பது பொருள்).

அறு+ அம் =  அற்றம்.  ( அறுத்தமைந்ததுபோன்ற சரியான நேரம்).
ஒன்றில் றகரம் இரட்டித்தது; ஒன்றில் இரட்டிக்கவில்லை.  இரண்டு சொற்கள் உருவாக்கப்பட்டு இருவேறு பொருள்களில் வழக்குக்கு வந்தன.  தமிழ்மொழியில் சொல்லாக்கம் இத்தகையது.

பூத்தம் என்ற ஒரு தனிச்சொல்லையும் அமைத்து வேறொரு பொருளுக்குப் பெயராய் இடலாம்.  அப்போது இன்னொரு சொல் கிடைக்கும்.  இனி வேண்டுமானால் ஒரு சொல்லைப் படைத்துக்கொள்ளலாம், தேவைக்கேற்ப.

சொற்களுக்கு ஏற்படும் தேவைகளைச் சமாளிக்கத் தமிழில் போதுமான வசதிகள் உள்ளபடியால், கடன்வாங்கத் தேவையில்லை. ஆராய்ந்து அமைத்துக்கொள்ளலாம்.

இனி, பூ+த் +அம் = பூதம் என விளக்கி, த் என்பது சொல்லமைப்பில் ஓர் இடைநிலை எனினும்  விளைவு ஒன்றே ஆகும்.

தோற்றங்கள் ஐந்து ஆதலின் பூதங்கள் ஐந்து  எனப்படும்:  ஐம்பூதம்.

பிறப்பு+ அஞ்சு+ அம் =  பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் என்பதும் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.

சொற்களை அமைப்பதில் விளையாடியிருக்கிறார்கள். நீங்களும் நீக்குப்போக்காகவே நின்று கண்டுபிடிக்கலாம்.  சொல்லமைப்புக்கு விதிகள் சிலவே.  விதிகள் என்பதினும் இவற்றை வழிகள் என்று கொள்வதே மதிநுட்பம் ஆகும்.

மக்கள் அமைத்த சொல்லாயின் இலக்கணம் பேசவேண்டியதில்லை. பின்பற்றிப் பயன்படுத்த வேண்டியதுதான்.  வல்லெழுத்து மிக வேண்டுமா வேண்டாமா என்பதொன்றும் மக்கள் கவலையன்று.  குறிக்க ஒரு சொல் வேண்டும். மற்றவை தள்ளுபடி.

இனிப் புதிதாக உங்கள்முன் தோன்றும் உருவும்  பூதம்தான்.  பூ என்பதே பகுதி.

பூ >  பூது > புது.
பூ > புது > புத்தி.  ( அறிவில் தோன்றுவது).   பூ+ தி = பூத்தி. முதனிலை குறுகி “புத்தி.” இருவகையிலும் சரிதான். இதைப் பிறமொழிகளும் பெற்றது நமது மொழித்திறம்.

பூ> பூமி  முன்னர் சொல்லப்பட்டது.

எல்லாம் தோன்றற் கருத்து,   அறிக மகிழ்க.

தமிழே மூலம்.

பிழைகள் மறு ஆய்வில் கவனிக்கப்பெறும்.



சனி, 10 மார்ச், 2018

சொல்லமைப்பு நெறிமுறை: நிகழ்வு பயன்.(ஆதாயம், சீலை)



ஆதரவு,  ஆதாயம்  என்ற சொற்களுக்கு யாம் விளக்கம் எழுதியுள்ளோம்.

உண்மையில் இவ்விளக்கங்களில் சில அழிவுண்டன. எனினும் அவற்றுக்கு ஈடாக மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளோம்.

தமிழ்ப் பொருளிலக்கணத்தில் வெட்சித்திணை நிகழ்வுகளில் ஆதரவு ஆதாரம் முதலிய நிகழ்ந்தன. ஆநிரை கவர்தலில் கவர்ந்துவந்த ஆக்களை ஊர்மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பர்.  ஆதரவு கிட்டாதிருந்தோருக்கு அப்போது ஆதரவு கிட்டியது. பணம் என்பது பெரிதும் வழங்காத பண்டமாற்றுக் காலத்தில் ஆ இல்லாத ஊர்மகனுக்கு ஓர் ஆ கிடைத்தால் அதை ஆதரவு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?   ஆவைத் தந்து பால் மோர் தயிர் முதலிய உண்டு வாழ வழிசெய்தபின் ஆதரவு கிடைத்தது  நல்ல படியாக இருக்கிறோம்; இதை நிகழ்வித்த வேந்தன் வாழ்க என்பதில் என்ன தப்பு இருக்க முடியும்.

தமிழரசுகள் அழிந்தபின் ஆநிரை கவர்தலும் பாதீடு முதலியனவும் வழக்கிழந்தபின்  ஆதரவு ஆதாரம் ஆதாயம்  முதலியவற்றுக்குப் புதிய சூழ்நிலையில் புதிய பொருள் ஏற்பட்டது ஒன்றும் எமக்கு வியப்பில்லை.

சிறப்புப் பொருள் நீங்கி பொதுப்பொருளில் பிற்காலத்தில் இச்சொற்கள் வழங்கின.

இன்னோர் நிகழ்வு:  சீலை

சீரை என்பது மரப்பட்டை.  மனிதன் ஒருகாலத்தில் மரப்பட்டை அணிந்துகொண்டு காட்டில் வாழ்ந்த காலம் அது.  மெதுவாக அந்தச் சொல் சீலை என்று மாறியது.  அப்போது நெசவு முதலியவை கண்டுபிடிக்கப்பட்டு துண்டு துணி முதலியவை வழக்குக்கு வந்தன.    
துணி என்றால் ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்டது என்று பொருள்.  கொஞ்சம் நீளமான துணியை மரப்பட்டைக்குப் பதிலாக அணிந்து மகிழும் முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவும் சீலை என்றே பெயர் பெற்றது.  சீரை சீலை ஆனது. இது ரகர லகர ஒலிமாற்றம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பலமுறை இங்கு சொல்லி இருந்தோம்.

தமிழ் காட்டுவாசிகள் காலத்தில் உருவாகி கணினிக் காலம் வரை நின்று நிலவும் மொழி ஆதலால் இதை நம்மால் தெரிந்து கூற முடிகிறது.  புதிய மொழிகளில் இதைக் கண்டுரைப்பது கடினம். 

ஆங்கிலச் சொல் என்றால் இலத்தீன் வரை போகலாம். வளம்பெறும் பொருட்டுப் பல இலத்தீன் சொற்களை அது கடன்பெற்று வளர்ந்தது.  தமிழுக்கு அந்த நிலை இல்லை.  ஒருவன் கடன் பெற்றுப் பிழைத்திருப்பான். இன்னொருவன் கடன் பெறாமல் பிழைத்திருப்பான். ஒவ்வொருவனுக்கும் சூழ்நிலைகளும் சுற்றுச்சார்புகளும் வேறுபடும். வரலாறும் வேறுவேறு. இவன் கடன்வாங்கியதால் அவனும் கடன் வாங்கினான் என்பது மடத்தனம். கடன்வாங்கிப் பிழைத்தவன் தாழ்ந்தவனும் அல்லன்; கடன் வாங்காமல் பிழைத்தவன் உயர்ந்தவனும் அல்லன். வந்தவழி வேறு அவ்வளவுதான். கிபி 1066 வாக்கில் முன்னிருந்த பழம் பிரித்தானிய மொழி அழிந்தபின் ஆங்கிலோ செக்சானிய மொழி அமைந்தது. முன் இருநூறு ஆண்டுகள்  உரோமப் பேரரசில் இங்கிலாந்து இருந்தது. இவற்றால்  இலத்தீனிலிருந்து கடன்பெறவேண்டிய நிலை ஆங்கிலத்துக்கு ஏற்பட்டது வரலாறு ஆகும்.

மீண்டும் ஆதாயத்துக்கு வருவோம்.  ஆதாயம் என்றால் மாடு பெறப்பட்டது இலாபம் என்பது பொருள்.  ஆ- மாடு; தா = தரப்பட்டது;  அம் விகுதி.  மாடு ஒன்று கிட்டினால் அது இலாபம் இல்லையா?   யகரம் உடம்படு மெய்.

சில சொற்கள் நிகழ்வு குறித்துப் பொருள்தரும். வேறு சில நிகழ்விலிருந்து பயன் குறித்துப் பொருள்தந்து மகிழ்த்தும்.  அவ்வளவுதான்.  இது சொல்லமைப்பின் நெறிமுறை.


வெள்ளி, 9 மார்ச், 2018

கண்ணிற் பிறந்த சொற்கள்.





வாயினின்றுதான் சொற்கள் பிறக்கும்.  கண்ணிற் பிறப்ப தெங்ஙனம்? இன்று கண் என்ற உறுப்பு குறிக்கும் சொல்லினடிப்  பிறந்து தமிழ்மொழியில் பொருண்மையில் மறைவாகவும் வெளிப்படையாகவும் வழங்கும் சில சொற்களை இங்குக் கவனிப்போம்.

நேரத்தை அளவிட எண்ணிய தமிழன், கண் இமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கவனிப்புக்குள்ளாக்கினான்.  கண்ணிமைப்பொழுது என்று ஒரு தொடரை உருவாக்கினான். இது சற்றே நெடிதாய் இருந்ததனால் அதைக் குறுக்க நினைத்து, கண் என்பதனோடு அம் விகுதி சேர்த்துக் “கணம்” என்றான்.

ககரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாக மாறும்.  இதற்கு எடுத்துக்காட்டு: சேரலம் -  கேரளம் என்பது.  ச - க, மற்றும் ல-ள இரண்டும் இங்கு அமைந்துள்ளமை காணலாம்.  இதனைப் பின்பற்றி, கணமும் சணம் ( க்ஷணம்) ஆனது.

கணம் என்பதே முன்வடிவம்.

தமிழ் மிகப்பழங்காலத்திலே எழுத்துமொழி ஆகிவிட்டபடியால் கணக்குப் பார்க்கவேண்டின், அதனை எழுதிப் பார்த்தனர்.  இதற்குக் கண் என்பதிலிருந்தே கணித்தல் என்ற சொல் உருவானது.

கணித்தல் என்பது உண்மையில் கண்ணால் பார்த்து அறிதல் என்று பொருள்படும். எனினும் எழுது  கருவிகள் ஓலையும் எழுத்தாணியும்தாம். மணல் சுவர் என பயன்படக்கூடிய பொருள்கள் பிறவும் உதவின.  வசதிக்குறைவுகள் காரணமாக பெரும்பாலனவர்கள் மனக்கணக்குப் போடுவதிலும் வாய்பாடு பயன்படுத்துவதிலும் ஈடுபட்டனர்.  சோதிடம் முதலிய பார்ப்பதற்குக் கணித்தல் என்று கூறினர்.  இது கணித்தவர்கள் கணியர் எனப்பட்டனர்.

அவர்கள் கணித்தது கணிதம் ஆனது. கணி + து + அம் = கணிதம் ஆனது.  து என்பது இது என்பதன் சுருக்கம் எனக் கருதலாம். து விரிந்து இது ஆனது விரியென்றும் கருதலாம். இந்த வாதம் பெரிதனறு.

கண் என்பது விழி என்ற உறுப்பைக் குறித்தது மட்டுமின்றி  இடம் என்றும் பொருள்பட்டது.  அதன்`கண் இதன்`கண் என்பவற்றில் கண் என்பது இடமே குறிக்கும்.  இடம் இன்றேல் எதையும் காணுதல் இயலாது ஆதலால்,  கண் என்பது இடமும் விழியும் ஒருசேரக் குறித்தது பொருத்தமே ஆகும்.  இதன் பொருட்டு இடம் என்பது அதன்`கண் உள்ள பொருள்களையும் உள்ளடக்கும்.  ஓரிடத்தில் ஒரு கரடி நின்றால், இடத்தை மட்டும் நோக்கிக் கரடியைத் தவிர்த்தல் இயல்வதில்லை. காணும் பொருட்களை மனத்துள் பதியாமை என்பது வேறு.

கண் என்பது ஓர் இடப்பொருள் காட்டும் உருபாகவும் பயன்பட்டுள்ளது.

இதனின்று நிலத்தில் அளந்து தான் எடுத்துக்கொண்ட இடம்,  காணி எனப்பட்டது, கணித்து எடுத்துக்கொண்ட துண்டு நிலம் அது. கண்+ இ =  காணி ஆனது.  முதனிலை திரிந்து விகுதி பெற்ற பெயர். நிலத்தின் அளவு அரசு அலுவலர்களால் தீர்மானிக்கப்பட்டது.  கணி > காணி எனினுமாம்.

காணம் என்ற சொல்,  கணி+அம் என்று அமைந்தது, ஒரு குறிப்பிட்ட கணிப்புக்கு உட்பட்ட பொற்காசை இது குறித்தது.  காணங்கள் இப்போது வழக்கில் இல்லை.
 காணம் என்பது கணிக்கப்பட்ட மதிப்பினதாகிய பொன் காசு என்று பொருள்பட்டாலும்,  மாகாணம் என்பது மாநிலம் என்று பொருள்தந்தது.  காணி என்பது நிலம் என்ற பொதுப்பொருளில் வழங்கிய காலத்தில் மாகாணம் என்ற சொல் அமைந்ததால் அது பெரிய நிலம் என்று பொருள்தந்தது இயல்பானதே

காணி, காணம், மாகாணம் என்பனவெல்லாம் ஓர் கணிப்பு அல்லது மதிப்பீட்டுக்குரியவை. ஆகவே கண் என்பதினின்று பிறந்த கணி என்பதே அடிச்சொல்.

தொடர்ந்து இன்னோர் இடுகையில் சந்திப்போம்..