ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஆயுதம் கூர்த்திகை "வனைகலன்"



வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியில்  ஆயுதம் என்ற சொல் நன்`கு பதிவு பெற்றுள்ளது.  தண்டாயுதம் ( இப்போது தெண்டாயுதம்) என்ற சொல்லிலும் ஆயுதம் ஆட்சிசெலுத்துகிறது.  ஆயுதம் தாங்கிய கொள்ளைக் காரர்கள் என்னுங்கால் ஆயுதம் அங்கு வந்துவிடுகிறது.

ஒன்றை ஆய்வதற்கு அல்லது ஆய்வு செய்வதற்கு ஆயுதம் தேவைப்படுகிறது. கீரை ஆய்வதற்குக் கைகளே ஆயுதம்.  ஆய்தல்:   ஆய்+உது + அம் என்ற பிரிப்பில் இதனமைப்பைக் கண்டுகொளக.  உது = முன்னிருப்பது.  முன்னிருப்பதை ஆயும் கருவியே ஆயுதமாகும்.

ஆயுதம் என்பதற்கு வேறு தமிழ்ச் சொற்கள் உள்ளனவா?  தேடிப்பாருங்கள்.

கூர்த்திகை என்ற சொல் ஓர் இரண்டு நூற்றாண்டுகட்கு முன்னர் தமிழில் வழங்கியதென்று தெரிகிறது. பெரும்பாலான ஆயுதங்கள்  முன்பகுதி கூரானவை. ஆகவே கூர்த்திகை என்பது நன்`கு அமைந்த பெயர். பிற்காலத்தில் கூர்மை இல்லாதவையும் கூர்த்திகை என்று குறிக்கப்படவே,  அதன் சொல்லமைப்புப் பொருள் நழுவிற்று.

கூர்த்திகை என்ற சொல்லை வைத்து வாக்கியம் எழுதுங்கள்.  அப்போதுதான் அச்சொல் மறைந்திடாமல் இருக்கும்.     

ஆயுதம் என்பதை "வனைகலன்" எனலாமா? 

சனி, 6 ஜனவரி, 2018

மிளகாய் சொல். வெளியூர்ப் பொருள்.



மிளகாய் என்ற  சொல்.   (capiscum)

மிளகாய் என்று தமிழ்ப்படித்தவர்கள் எழுதும் சொல்லை, பேச்சுத் தமிழில் “மொளகா”   “மொளகே” என்றெல்லாம் சொல்கிறார்கள்.  இப்படிச் சொல்வது கொஞ்சம் இனிமையற்றதாய் இருப்பதால், தான் இதை “சில்லி” என்று ஆங்கிலத்தில்தான் சொல்வது பழக்கம் என்`கிறார்  யாமறிந்த தமிழர் ஒருவர்.

கறி, குழம்புகளில் காரம் சேர்க்கப் பண்டைநாளில் தமிழரிடம் இருந்தது மிளகு  ஆகும். அப்போது மிளகாய் இல்லாமையால் மிளகை அரைத்தோ இடித்தோ குழம்பு வைத்தனர்.

மிளகாய் என்பது பின்னர் சீனாவிலிருந்து பெறப்பட்டது 1 என்று அறியப்படுகிறது.  இதைச் சொல்லாராய்ச்சி மூலமாக தமிழறிஞர்கள் நிறுவியுள்ளனர். அவர்கள் சொல்லாய்வினை இப்போது காணலாம்.

மிளகாய் என்பது தவறாக அமைந்த சொல் என்று கண்டுபிடித்தனர்.  மிளகு+காய் = மிள + காய் = மிளகாய் ஆயிற்று.  இதில் இருந்த கு என்ற விகுதி விலக்கப்பட்டு,  இறுதியில் இயல்புப் புணர்ச்சியாய் வலி மிகாது அமைந்தது.  இதில் கோளாறு ஒன்றுமில்லை. அவர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், மிளகாய்ச் செடி, மிளகாய்ப் பழம், மிளகாய் இலை என்றெல்லாம் அமைவது,  அதாவது நாம் மாங்காய் மரம், மாங்காய்ப் பழம் என்று சொல்வதில்லை.  பழம் என்று சொல்லும்போது ஏன் காய் என்ற சொல் அங்கிருக்கவேண்டும்?  காரணம் என்னவென்றால் காயை அறிந்துதான் பின்னர் செடி, பழம். இலை எல்லாம் தமிழன் அறிந்தான்.  மிளகாய் என்ற சொல்லே தவறாய் அமைந்துவிட்ட சொல் என்பதுதான்.  இப்படி அமைந்ததனால் மிளகாய் வெளிநாட்டுப் பொருள். அதற்கு உண்மையில் தமிழில் பெயரில்லை. மிளகுடன் ஒப்பிட்டு மிளகாய் என்ற சொல்லை அமைத்தனர் என்பதும்  ஆகும்.

ஆனால் இந்தச் சொல் புலவர்கள் அமைத்தது
அன்று.  மக்களால் அமைக்கப்பட்டது.  மிளகாய் புதுப்பொருளாக கொண்டுவரப்பட்ட அன்றே ஒரு புலவர் போய் அதற்குச் சொல் அமைத்திருந்தால் இந்த இடர்ப்பாடுகள் இருக்கமாட்டா! யாரும் எட்டிப்பார்க்காத நிலையில் சந்தையிலிருந்த தமிழனே சொல்லை அமைத்துக்கொண்டான்.  அவன் முயற்சியை முதலில் பாராட்ட வேண்டும்.

அதன்பெயர் வேறுவிதமாய் அமைந்திருக்கலாம். மிளகாய் (மொளகா, மொளகே) என்பதன் பேச்சு உருவில் காய் என்பது இல்லை.  கா / கே மட்டுமே உள்ளது.  இதை எழுத்துருவாய் வடித்தபோது, மிளகாய் என்று தமிழ் வாத்தியார் எழுதினார்.  கா என்பதைக் காய் என்று  எடுத்துக்கொண்டார்.

மிளகு + ஆ:  இங்கு  ஆ என்பதை ஆவது என்று கொண்டால்,  மிளகுக்குப் பதிலாய் ஆவது என்ற பொருள் வரும்.  ஆ என்பது முதனிலைத் தொழிற்பெயராய் அமையும்.  மொளகா என்பதில் உள்ள கடைச்சொல் ஆதல் குறிக்கும் ஆ எனலாம்.

மொளகு ஆவு;  மொளகு ஆயி.   மொளகு  ஆ.  மொளகா > மொளகே.  அதாவது மிளகாய் என்பது மிளகுக்கு ஆகும் பொருள் (காய் அல்லது பழம்.)
மிளகு ஆவு.  மிளகு ஆயி என்பதைத் திருத்தி மிளகாய் என்று  அமைத்திருக்கக்கூடும்.

மொளவா மொளகா என்று பலவாறு அலைந்து இறுதியில் மிளகாய் ஆகிவிட்டது!    என்றாலும் -ஆ  என்பதே சொல்லிறுதி.  அப்படியானால் மிளகாய்ப் பழம் மிளகாய்ச் செடி என்பவற்றில் இடர்ப்பாடு இல்லை.  அது வெளியூர்ப் பொருள் என்பதை மறுக்க முனையவில்லை.

இனித் தோன்றும் பிழைகள் இப்போதுள்ளவை எவையும்
பின்னர் திருத்தம் பெறும்.

Pl read cautiously as a virus places extra dots on 
words. Edited but may recur. 
-----------------------------------

Footnote: 
 


1.There is also a belief that the Portuguese brought it to South Asa and SE Asia.  (Whoever brought it, it is not indigenous to  South Asia. ) 

 






வெள்ளி, 5 ஜனவரி, 2018

மோடி பொருளியல் வெற்றி.






இந்தியப் பொருளியல்  (GDP -  மொத்த உள்நாட்டு உற்பத்தி) இப்போது மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது வெளிநாட்டுப் பொருளியலாளர்களாலும் ஒருவகையில் எதிர்பார்க்கப்பட்டதே என்னலாம். இந்த மேம்பாட்டின் சிற்பிகள் தலைமையமைச்சர் மோடியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என்பது நாம் வாசிக்கும் இதழ்களிலிருந்து நமக்குத் தெரிகிறது.

ஆனால் நாட்டில் உள்ள சில வீழ்ச்சிகளை ஓர் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுகிறது. எட்டாண்டுகளாக நாடு குறித்த சில வீழ்ச்சிகளிலிருந்து மீளவில்லையே என்`கிறது.  அந்த எதிர்க்கட்சிதான் மோடிக்கு முந்திய பத்தாண்டுகள் பதவியில் இருந்தது. அப்போதெல்லாம் அக்கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது.  யார் என்ன செய்ததனால் அந்த வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது என்ற  கேள்வியும் கூடவே எழுகிறது!

நாம் எந்தக் கேள்வியும் கேட்கலாம்.  ஆனால் கேட்பவனுக்கே  அதன் தொடர்பான எதிர்க்கேள்விகள் எழுமானால்  மோடியைக் கேள்வி கேட்பதில் ஏதும் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.  இதையும் இவைபோன்ற பிற வீழ்ச்சிகளையும் சரிசெய்ய இவர்களிடமும் எந்த மாத்திரையும் இல்லை என்பதே இதிலிருந்து பிறர் அறிந்துகொள்வதாகும்.

மோடியார் சொல்வது (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) அரசில் சேவையாற்றும் பொருளியல் வல்லுநர்கள் கணித்துப்  பார்த்து  அறிவித்ததாகவே இருக்கவேண்டும். ( அவர் சரிபார்த்திருக்கலாம்.  ஆனால் கணக்குவேலை வல்லுநர் செய்வது.  எல்லா அரசிலும் அப்படித்தான்.)   அதைத் தவறு என்று சொல்ல அந்த விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்கவேண்டுமே!  மோடி ஏணியைப் பற்றிச் சொன்னால் எதிர்க்கட்சிகள் ஏற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.

அடிக்குறிப்பு:

உற்பத்தி  -  சொல்லாக்கம் அறியச் சொடுக்கவும்:
http://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html
கரு, விதைகள் முதலானவை "உள் பற்றித்தான்"  உருவாகுகின்றன.  இது
திரிசொல்.  உள் - உல்.  பற்றி -  பத்தி.  உல்+பத்தி.  உறுப்பத்தி என்னும் பேச்சுச் சொல்லும் கவனிக்கப்பாலது.