இன்று கேரளம் என்ற சொல்லைச் சிந்தித்து
அறிவோம்.
பல மொழிகளில் சே என்பதும் கே என்பதும்
ஒன்றுக்கொன்று பரிமாற்றமாக வரும். ஆங்கிலத்தில் பல சொற்கள் சிஎச் என்று எழுத்துக்கூட்டி
க என்று ஒலிக்குமென்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனை ஐரோப்பியத்திலும் இங்கனம் வருமென்றாலும்
உங்களுக்கு தெரிந்த எளிதான மொழியிலிருந்தே இதை உணர்ந்துகொள்ளுதல் நன்று.
பண்புநலன் என்று பொருள்படும் கேரக்டர்
என்ற ஆங்கிலச்சொல் சேரக்டர் என்பதுபோல் எழுத்தில் தோன்றினாலும் கேரக்டர் என்றே அதை
ஒலித்தல் வேண்டும். இது பலமொழிகளிலும் உள்ள அமைப்பு ஆகும்.
ஸி என்ற ஆங்கில எழுத்தின் ஒலி ச என்பதுதான்.
இது அடுத்து எச் என்ற எழுத்தைப் பயன்படுத்தாமலே இப்போது மலாய் மொழியில் ச என்ற ஒலிப்பைப்
பெறும். ஓர் ஐம்பது ஆண்டுகட்குமுன் சிஎச் என்று
எழுதவேண்டியிருந்தது. இப்போதுள்ள முறையில்
மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் சை சீ அல்லது சாய் சீ என்ற
சீனத் தொடரை ஆங்கில எழுத்துக்களால் எழுத நேரும்போது ஸி யின் அடுத்து ஓர் எச் போடவேண்டியுள்ளது.
மலாய் அல்லாத மொழிகளின் சொற்கள் சிலவற்றை உரோமன் எழுத்துக்களால் எழுதுகையில் மலாய்மொழியில்
பின்பற்றப்படும் ஏற்பாடு ஏற்கப்படவில்லை.
இவற்றை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
கேரளம் என்ற சொல்லைப் பொருத்தி நோக்கினால்
இது சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்ட சொல் என்றே மலையாள நண்பர்கள் கூறவிரும்புவர். இப்படிச் சொல்வது இது சமஸ்கிருதத்தின் வழிப்பட்ட
மொழியாக அல்லது அதிலிருந்து வடித்தெடுத்த மொழியாக இதை எண்ணுவதுதான் காரணம்.
இத்தகைய கருத்தினால் மலையாளத்திற்கு
இந்தோ ஐரோப்பியத் தொடர்பு கிட்டுகிறது; மொழியின் மதிப்பும் கூடுகிறது; ஆகவே இதை விட்டுக்கொடுத்தல்
அவர்களுக்கு துயர்விளைப்பதாக எண்ணப்படும்.
கால்டுவெல்லின் ஆராய்ச்சி இதைத் தமிழின்
இனமொழி என்று முடித்திருப்பினும் பெயர் கிருதத்திலிருந்தே பெறுதற்குரியதாய் கருதற்கு
முனைவர்.
மலையாளிகள் சேரர்கள். சேரம் என்னும்
சொல் சேரலம் என்றும் வழங்கும். சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததற்கு வியப்படையத்
தேவையில்லை. சே என்பது கே என்று திரிந்தது பல மொழிகளில் இயல்பானது. ல ள திரிபும் மிகுதியாய்க் காணப்படுவதே. பட்டியல் தேவையில்லை.
தண்ணீரைத் தண்ணீர் என்று மெய்ப்பிக்க ஓர் அறிவியலாளன் தேவையில்லையே.