வாழ்த்தியம் என்பது
வாத்தியம் என்று திரிந்தது ஓர் இயல்பான திரிபு. இதில் ழகர ஒற்று போய்விட்டது.
வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர் வாத்தியார் எனப்பட்டார். அதில் யகர ஒற்று ஒழிந்தது.
இப்படி எழுத்துக்கள் ஒழிந்தமைக்குக் காரணம், தமிழர்கள் எப்போதும் தம்மொழியைத் திரிபுறப்
பேசியதுதான் . ஆனால் இத்தகைய திரிபுகளால் ஒரு நன்மையும் விளைந்தது. ஒரு புதிய சொல்
பயன்படுத்துவோனுக்குக் கிடைத்தது. வாத்தியம் ஆனமையால், வாழ்த்து என்ற சொல் அவன் எண்ணத்திலிருந்து
மறைந்தது. பொருள் விரிவு அடைந்தது. எப்படி ?
வாழ்த்து ஏதும்வழங்காத போதும் சொல் பயன்பாட்டில் தடையேதுமின்றிச் சென்றிணைந்தது.
அதாவது, வாழ்த்தியமாகவே இருந்திருந்தால், வாழ்த்தும்போதுமட்டுமே அது பயன்பட முடியும்.
ழகர ஒற்று மறைந்ததால், ஏனைச் சூழ்நிலைகளிலும் கருத்துத் தடையின்றிப் பயன்பட்டது.ஓர்
இறந்தவீட்டில் வாசிப்பதும் வாத்தியமே ஆனது.
வாத்தியார் ஆனதால்,
வாயாற்பாடம் சொல்லாமல் தபால் அல்லது அஞ்சல்மூலம் கற்பிப்பவரும் வாத்தியார் என்ற
சொல்லில் அடங்கினார்1
ஆனால் அப்படி மாறியபின்
இன்னொரு தொல்லையும் விளைந்தது. அது என்ன ? அச்சொல்
உப அத்தியாயி என்ற சொல்லுடன் குழம்பியது. சிலர் உப அத்தியாயி என்ற சொல் வாத்தியார்
என்று திரிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் இதனால் பயன்படுத்துவோனுக்குக் கருத்துத்தடை
ஏதும் ஏறபடவில்லை.
பல்லியத்தனார் என்று ஒரு கங்கப்புலவர் இருந்தார். அவர் பாடலைச் சுவைத்துக்கொண்டிருந்தகாலை இந்தக்
கருத்துக்கள் மேலெழுந்தன. இவற்றை எழுதிவிட்டபடியால்
அடுத்த இடுகையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாமே!
-----------------------------------------------------
குறிப்புகள்
------------------------------------------------------
உப + அத்தியாயி = உபாத்தியாயி, > உபாத்தியாயர். இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர்.
திருத்தங்கள்: பின்.