வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தத்து என்ற சொல் அமைந்தது எங்ஙனம்?



இப்போது தத்து என்ற சொல்லைப் பற்றிச் சிந்தித்து அறிவோம்.

 பிறர் பிள்ளை ஒன்றினைத் தன் பிள்ளையாக்கிக் கொண்டு வளர்த்தலையே தத்து என்று சொல்லுவர்.  இப்போது ஆங்கில மொழி மிகப் பரவி விட்டதால் “அடோப்ட்” என்ற சொல்லையே கேட்க முடிகிறது.  ஆங்கிலம் படித்திராவர்களும் அம்மொழிச் சொற்களை நன்கு  பயன்படுத்துகின்றனர்.
தத்து என்பது இரண்டு சிறு துண்டுகளை உடையது.   தன்,  து என்பவை அவை.

தன் என்ற சொல்லில் இரண்டே எழுத்துக்கள் உள்ளனவாகையால்,  தன் என்பது த-  என்று குறையும்போது,  அதை கடைக்குறை என்று இலக்கணத்தில் சொல்வர்.  மேல் என்ற சொல் மே என்று குறைந்து, பின் கறி என்ற சொல்லுடன் இணையும்போது, மேங்கறி என்று வழங்குவதுபோல்,  தன் என்ற சொல், " த " என்று குறைந்து, பின்  "து " என்பதனுடன் இணைகிறது.

து என்பது இப்போது ஒரு விகுதியாகவே பயன்படுகிறது.  விழுது என்ற சொல்லில் அது வருகிறது.  இப்படி இவ்விகுதி வருஞ்சொற்கள் பல.  மேலும் அஃறிணை விகுதியாகவும் வரும்.

உடையது என்பதையும் “து”  குறிக்கும். 

எனவே “த+ து”  என்ற சொல் “தன்னுடையது” என்று பொருள்படும்.
தத்து எடுப்பது எனின் தன்னுடையதாக்கி எடுத்துக்கொள்வது என்பதாகும்.   இனி “எடுப்பு”    “வளர்ப்பு” என்ற வழக்குகளும் உள்ளன என்பது நீங்கள் அறிவீர்கள்.

பிற சார்பு இல்லாமல் தன் சொந்த வலிமையால்  நிற்கும் ஒரு கருத்து “தத்துவம்” எனப்பட்டது என்பதை நீங்கள் இதிலிருந்து சிந்தித்தறியலாம். இங்கு  த+து+அம் என்பன (3 துண்டுகள்)  புனையப்பட்டுள்ளன.  து, அம் விகுதிகள்.
தத்துவம் என்பதில்  வ் வருவது சொல்லிணைப்பின் பொருட்டு. இதைத்தான்
வகர உடம்படு மெய் என்று இலக்கணம் சொல்கிறது.

தத்துவம் என்பது மேற்கண்டவாறே வரையறை செய்யப்பட்டு உணர்ந்து
கொள்ளற்குரித்தான சொல்.

இது 05072020 மெய்ப்பு செய்யப்பட்டது.




வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“கலா”



இன்று “கலா”  என்ற சொல்லை அணுகுவோம்.

கலா என்பது  தமிழன்று என்று கருதியவர்கள் உண்டு.  இதற்குக் காரணம் இந்தச்  சொல் “தேசிய சேவை” செய்துகொண்டிருப்பதுதான். இச்சொல் பலராலும் விரும்பப்படும் சொல்லாய் இருப்பதும் பிற மொழிகளில் காணப்படுவதும்  நமக்குப் பெருமைக்குரியதாகும்.

கலா என்பதுபோன்ற (அதாவது எதுகைச் ) சொற்கள் பல உள்ளன.  எடுத்துக்காட்டாக  -  பலா, நிலா, உலா, தலா, விலா, துலா என்பவை.  இன்னும் பெயர்ச் சொற்கள் அல்லாதவைகளும் உள:  அலா,   இலா, செலா  முதலிய காண்க.   எனவே ஒலி முறையில் அது தமிழ் ஒலியுடைய சொல்லே.
கல்+தல் =  கற்றல்.  இங்கு கல் என்பதே பகுதி. இனிக் கல்+வி = கல்வி;  கல்+ ஐ = கலை;  கல்+பு = கற்பு;   கல் +பு + அன் + ஐ =  கற்பனை;  இவை போலவே கல் + ஆ = கலா  ஆனது. பல் சுளைகள் உள்ள பழம்  பல்+ ஆ = பலா ஆனது போலவும்  வானில் நிற்பதும் ஒளிவீசுவதாகவும் கருதப்பட்டது நில்+ஆ=  நிலா என்று ஆனது போலவும் ஆகும். 1

கலாதேவி, கலா நிலையம் முதலியவும் தமிழின்று கிளம்பிப் பரவிய சொற்களே.

தேவி > தீ  (தேய் );  நிலையம் > நில்.  எம் முன் இடுகைகள் காணவும்.


_____________________________
அடிக்குறிப்பு 

1  இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை 
அவர்களால் சொல்லப்பட்டது. (1935)  இவர் கழகத் தமிழ்க்  கையகராதித் தொகுப்பாளர் .




புதன், 2 ஆகஸ்ட், 2017

"இலேசு"

"இலேசு"

இன்று "இலேசு" என்ற சொல்லைச் சிந்திப்போம்.

இது பெரும்பாலும் "லேசு" என்றே வழங்கிவருகிறது. இது "லேஸ்" என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஒலியொருமை உடையதாயினும்  இரண்டிற்கும் பொருள் வேறுபாடு உள்ளது.

பெரும்பாலோர் இச்சொல்லின் முன்னிற்கும் இகரம், லகர வருக்கத்தில்  சொல் தொடங்கலாகாது என்ற இலக்கணவிதி காரணமாகவே  இகரம் எழுதப்படுகிறது
என்று எண்ணுவர்.

இதனை இல்+ஏ + சு என்று பிரிக்கவேண்டும்.  இல் = இல்லை என்பது.
ஏ = ஏற்றம், உயர்ச்சி என்று பொருள்படுவது.  சு என்பது ஓர் விகுதி.  மனசு, புதுசு, காசு, ஆசு  என்பனபோலும் பலசொற்களில் இது வரும்.  கா > காசு
என்பதில் காத்தலுக்குரியது என்னும் பொருளில் சொல் அமைகிறது.  ஆதல் என்பதினின்று வருவது ஆசு (பற்றுக்கோடு ). மனசு, புதுசு என்பவற்றில்
சு விகுதியாகவோ அல்லது து என்பதன் திரிபாகவோ கருதப்படலாம்.
எனவே, இலேசு என்பதில் சு என்பது விகுதியாகும்.

கனம் என்பது பளு என்ற பொருளிலும், மதிப்பு என்ற பொருளிலும் வருவதுபோலவே, ஏ = உயர்ச்சி என்பது மதிப்பு என்றும் பளு என்றும்
பொருள்தரும்.  அதிக மண் உள்ள மேடுகள்  ஏ = ஏற்றம், ஏற்றமான இடங்கள்
என்று அறியப்படும். ஏற்றம் தரும்பொருள் உள்ளீடு , பளுவுடையது என்பது
உணரப்படும். மே (மேல்) என்னும் இடப்பெயரும் மேடு என்று ஏற்றமான இடத்தைக் குறிக்கச் சொல்லாய் அமைதல் அறிக. கனப்பொருள் அடைவு
இன்றி ஏற்றம், மேடு என்பன இரா.

எனவே, இல்+ஏ+சு என்பது, கனம் இல்லாதது, ஏற்றம் இல்லாதது என்று
பொருள்படுகிறது. அவரை இலேசாக நினைக்கக்கூடாது எனும்போது, கனம் அல்லது மதிப்பு என்பது சுட்டப்பெறுகிறது.