வெள்ளி, 30 ஜூன், 2017

வந்தஎல்லாம் எழுதவேண்டும்

வந்தஎல்லாம் எழுதவேண்டும் என்னும் உள்ளம்.
வாய்ப்பில்லை  வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால்  ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!


பொருளுரை:

வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் ---  என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே---   (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல ==  வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி (  எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் --   போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த ===  வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ --   வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட  -  அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ --  ஒளியில் மேல்வருமோ.

தோய்த்திரம் > தோத்திரம்

தோத்திரம் செய்வோம் நம்  ஆண்டவருக்கு!

இனித் தோத்திரம் என்ற சொல்லின் வந்தவழி அறிவோம்.

மிகவும் மதித்து வணங்குதல்/ தோத்திரம் ஆகும்.

தோய்தல் - மூழ்கிவிட்டதுபோன்ற ஓர் ஈடுபாடு.

திரம் என்பது விகுதி. இது திறம் என்பதிலிருந்து பெறப்பட்டது.

தோய்தல் -   ஆழ்ந்து ஈடுபடுதல்.

தோய்+ திரம் = தோய்த்திரம் > தோத்திரம்.

யகர ஒற்று மறைந்தது பெருவாரிச் சொற்களில் என்பதறிக.

வியாழன், 29 ஜூன், 2017

தோது என்ற சொல்லை ...........

இன்று தோது என்ற சொல்லை அணுகுவோம்.

" இன்றைக்கு எப்படி?அவரைப் பார்த்துப் பேச முடியுமா? அவருக்கு எப்படித் தோது என்று தெரியவில்லையே!"

இப்படிப்  பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

தோது எனற்பாலது ஒரு தொடர்புக்கான வசதியைக் குறிக்கிறது.  தோதில்லை என்றால், அத் தொடர்பில்
ஈடுபடத் தருணமில்லை என்று பொருள்படும்.

தோது என்பது தோய் என்ற  வினையுடன், து என்னும் விகுதி சேர்ந்தது.  விகுதி சேர. யகர ஒற்று மறைகிறது.

தோய் >  தோய்து >  தோது.

இது பெருவரவினது அன்றோ?

இப்போது யகர ஒற்று மறைந்த சில சொற்களை நினைவு
கூர்வோம்.

தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.

எல்லாம் பட்டியலிட நேரமில்லை. படிக்க உங்களுக்கும்
நேரம் கிட்டுவது கடினம்.