வியாழன், 18 மே, 2017

தூ தூசு

காசு என்பது காக்கப்படுவது.  அதனால் அச்சொல்லை அமைத்தவர்கள் காத்தல் என்னும் பொருளுடைய  "கா" என்ற
ஓரெழுத்து ஒருமொழியாக இலங்கும் வினைப்பகுதியிலிருந்தே அதனை
அமைத்தனர். இதேபோன்று அமைந்த இன்னொரு சொல்லைக்
கண்டு இன்புறுவோமே.

பல சொற்கள் மொழியில் உளவேனும் சொல்லமைப்பு முறையை
அறிந்துகொள்வதற்காக, இன்னும் ஒன்றிரண்டை ஆய்ந்தால்
பொருத்தமாகவிருக்கும். இதற்குத் தூசு என்ற சொல்லைத்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

தூசு என்பது தூசி என்றும் வழங்கும்.  இங்கு சு என்னும் இறுதிநிலையை நாம் நோக்குவதால், "தூசியை"த்  தற்போது ஒதுக்கிவைப்போம்.

தூ என்பது தூவுதல் குறிக்கும் சொல். இரண்டு நாள் நம் கண்ணாடி நிலைப்பேழையைக் கவனிக்காமலிருந்துவிட்டால் தூசு படிந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. நம்மையும் அறியாமல் இது தூவப்படுகிறது. இந்த வேலையைக் காற்று செய்கின்றது என்று நினைக்கிறேன். எப்படியோ தூசு தூவப்படுதல் உண்மை.

எனவே தூ என்ற அடியிலிருந்து தூசு என்ற சொல் பிறக்கிறது.தூ>  தூவு.  தூ> தூசு..

மற்றவை பின் .

தூ தூசு

புதன், 17 மே, 2017

காசு என்பது காக்கப்படுவது.

விரும்பாத எதனையும் எந்த மனிதனும் காத்து வைத்துக்கொள்ளுதலில்
ஈடுபடான்.  ஓர் ஆடவன் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அவளைத்
தன்வயம் வைத்துக்கொள்ளவிரும்புகிறான். அதுவே காதல். இங்கு
வினைப்பகுதி யாவது "கா" என்பதே. அப்பெண் அவனைக் கவர்கிறாள்.
கா > கவ, கவ+ அர் = கவர். கா என்பது கவ் என்று திரியும். கவ் > கவ்வு. ஒன்றைக் காத்து எடுத்துக்கொள்வதாய் இருந்தால், இருபக்கமும்
நெருங்கி வந்து பொருளை அகப்படுத்தவேண்டும். அதைத்தான் எலும்பைக் கவ்வுகையில் நாய் பூனைகளெல்லாம் வாயால் செய்கின்றன.
கவை, கவடு என்ற சொற்கள் பலவற்றையும் விளக்கலாம் என்றாலும்
நம் இருவருக்கும் நேரம் போதாது.  காமம் என்பதும் கா> காம் > காமுறு என்பதும் காம் > காமம் என்பதும் இந்தக்காவில் வளர்ந்த‌
தமிழ்ப்பூக்களே. அறியார் பிறமொழி என்று அலமருவர்.


இவற்றை எல்லாம் முன்னரே இணைய தளங்களில் எழுதியதுண்டு.
அங்குக் கண்டின்புற்றிருப்பீர். இப்போது காசு என்பதை மட்டும்
ஆராய்வோம். மிக எளிமையான தமிழ்ச்சொல்.

வெண்பாவின் இறுதிச்சீர் காசு என்னும் வாய்பாட்டிலும் முடிவதுண்டு.
காசு என்பது மிகப் பழையசொல்.

காசு என்பது காக்கப்படுவது. அதனாலே அது சு விகுதி பெற்று காசு
ஆயிற்று, காசுக்கும் காதலுக்கும் நமது நூல்கள் தொடர்பு காட்டமாட்டா.  ஆனால் சொல்லமைப்பில் இரண்டும்    கா - ‍ காத்தல்
என்னும் அடியாகப் பிறந்த சொற்களே.

தலைப்பு: காசு என்பது காக்கப்படுவது.


செவ்வாய், 16 மே, 2017

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மேல் ஊழல்.....

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மேல் ஊழல் மற்றும் வருமான வரிச்
சட்டங்களின்கீழ் விசாரணையைப் பாய்ச்சுவதென்பது, மக்களாட்சியில்
எதிர்க்கட்சிளை ஒடுக்குவதென்று சில நாடுகளில் கூறுகிறார்கள். இதை
ஒத்துக்கொள்ள முடியவில்லை. எந்தக் கட்சியாயினும், விசாரிக்கவேண்டி நேர்ந்தபோது துவளாமல் விசாரிப்பதே சரியாகும். எதிர்க்கட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றால், அவர்கள் குற்றங்களில்
ஈடுபடும்போது விசாரிக்க இயலாமற் போய்விடுமே.  அப்புறம் என்ன‌
சட்டம், என்ன நீதி?  அதைப்பற்றிய கவிதை இது:

தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்:
மாணாத செயல்களினால் மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரு ஆதரவை மாயுறுத்தும் காலை,
ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க‌
ஒல்லுவதோ அரசினர்க்கு? கொள்ளாமை கண்டு
நாணாமல் அவர்களையே ஞாயமன்றில் ஏற்றல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி ஆமே.