சனி, 14 ஜனவரி, 2017

அணம் என்ற தொழிற்பெயர் விகுதி

அணம் என்ற தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம். வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல் ஊண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும் சென்று ஆட்சி பெற்றுள்ளன.

அட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
சாரணம் சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.

> அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல். அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் > அணைத்தல்.
அண் > அணை> அணைக்கட்டு.
அண் > அணி > அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன. சேலை இடையையும் கால்களையும் அணைத்து நிற்பது. = > >

கருவி > செய்தற்கு உதவும் பொருள்.
கரு செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் = கார்+ அணம் = காரணம்.
கரு+ இயம் > கார்+இயம் = காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம் - அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.


அண்+ அம் = அணம்.


First published in 2009

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்துக்கள்.

ஏறு தழுவலைக் காணினும் இல்லெனினும்
கூறு தமிழால் குலமொன்றாய்ச் === சீரிய‌
பொங்கல் விழவெடுத்துப் பூரித்த உள்ளமுடன்
தங்கும் மகிழ்வெய்து வீர்.

முக்கனிச் சாற்றுடன் சர்க்கரையும் சேர்த்தட்டுத்
தக்கஅரி பெய்தாக்கும் இன்பொங்கல் ‍=== உட்கொண் (டு )
அனைய‌ வளங்களும் பெற்றுய்வீர் ஆண்டில்
நினைதொறும் இன்பம் வர.

எல்லோருக்கும் எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.





வியாழன், 12 ஜனவரி, 2017

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்

இராமச்சந்திரக் கவிராயரும் வீரமாமுனிவர் சதுரகராதியும்


சங்க காலத்துக்குப் பிற்பாடும் தமிழ் பல்வேறுவகைகளில் வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. இருபது, இருபத்தொன்றாவது நூற்றாண்டுகளில் எப்படி தமிழ் நம்மிடை நிலவுகிறதென்பதை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும்  இவற்றுக்கு முன் ஒரு நூற்றாண்டு பின் சென்றால் என்ன நடந்தது என்பதை நாம் உடனே அறியமுடியவில்லை. இதற்குக் காரணம், இணையத்தில் எல்லாமும் கனிந்துவிடவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டை அறிந்துகொள்ள  மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வு நூல் ஓரளவுக்கு நமக்கு உதவி செய்கிறது.
இவ்வறிஞர் இந்நூலை எழுதியிராவிட்டால், இப்போது நாம் அந்நூற்றாண்டை அறிந்துகொள்ள இடர்பல உறவேண்டியிருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலவர்களில் இராசநல்லூர் இராமச்சந்திரக் கவிராயரும் ஒருவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்.
தமிழ் அறிஞர் எல்லிஸ் துரை என்பாரின் நண்பர். இவர் 1824‍ல் வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை இன்னொரு புலவருடன் இணைந்து 1860ல் பதிப்பித்தார்..

இவரெழுதிய நூல்களில் சகுந்தலை விலாசம் என்பதுமொன்று. இது
பிரஞ்சு மொழியிலும் ஜி. டெவ்ரீஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்படும்
சிறப்புடைத்தாகியது.

கவிராயர் சதுரகராதிக்கு ஒரு முகவுரை எழுதினார், அது கவிதை
வடிவில் அமைந்தது. அது தொடங்கிய விதம் இவர் ஆழ்புலமையை
வெளிப்படுத்துவதாய் உள்ளது.

தோலா விறலுள கோலா    னரசுசெய்
மேலான் இசைதிகழ் நாலாம் ஜார்ஜ் நாளில்
நன்றா  மனுமுறை குன்றா வகை இவண்
மன்றோ வதிபதி நின்றா ளுகையில்...........
......................

இவ்வகராதிப் பதிப்பில் இக்கவிதையை முழுமையாகப் படித்து
இன்புறுங்கள்.

-------------------------------------

அரும்பொருள் :

தோலா  - தோல்வி இல்லாத
விறல் -  வீரம், வலிமை.
கோலான்   -   செங்கோலினால் 
இசை - புகழ்
நாளில் -  பிறந்த நாளில்
நன்றா -  நன்றாக
மனுமுறை  -  மன்னு முறை  (இடைக்குறை )   :  நிலை நிற்கத் தக்க அறமுறைகளுடன் .
குன்றா -  குறையாத
மன்றோ  -  அவையினர் வியக்கும் . (ஓ - வியப்புக்குறிப்பு .)
நின்று - நிலையாக.
ஆளுகை - ஆட்சி  புரிதல் .