திங்கள், 15 பிப்ரவரி, 2016

சிவ,போதம் பா,5 உவமை நயம்

முன் இடுகை  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_56.html   இங்குக்  தொடர்கிறது . பாடல் மற்றும்   அதன் பொருள்  அவண் காண்க .  உவமை  நயம் மட்டும் இங்குக்  காண்போம்/


ஐந்தாம் பாடல் காந்தக் கல்லின் முன்னிருப்பினால் இரும்புத்  துண்டு அசைவு கொள்வதுபோல்,  சிவம் முன்னிருப்பதனால் உயிரர்கள் விடையங்களை அறியலாகின்றது என்று தெளிவுறுத்தியது.

இவ் வுவமையின் நயம்  அறிந்து இன்புறுகிறோம்.   இரும்பு காந்தத்தினால் ஈர்க்கப்படினும் இரும்பே அவ்வீர்ப்பினால் அசைவதன்றி  காந்தத்துக்கு எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இறைவன் முன்னிற்பினால் உயிரர்கள் விடைங்களை அறிதலாற்றல்
பெற்று இயங்குதல் நடைபெறுகின்றதெனினும் இதனால் இறைவற்கு மாறுதல் அசைவு யாதும் உண்டாவதில்லை. அவன் யாண்டும் முன்னிருந்தபடியே இருக்கின்றான்.

எனவே காந்த உவமை மிக்கப் பொருத்தமாய இனிய உவமை என்பது உணரப்படும்,

உயிரர்கள் என்றும் சித்துருவாய் உள்ளனர். ஆனால் அவர்கள் மெய் வாய் முதலான இந்திரியங்கள் அல்லது பொறிகள் போலும் சடங்கள் அல்லர். இவ்விந்திரியங்கள் உயிரர்களின் உறுப்புகளாயிருந்து அறிபொருளை உள்வாங்கி உயிரர்கட்கு அறிவிக்கின்றன எனினும்
அவை சடப்பொருள்களே. அவை உயிரரை இல்லாமல் இயங்க வல்லன அல்ல. அவைகட்கு தன்னியக்கம் இல்லை.  உயிரனுக்கும் இறையின்றித் தன்னியக்கம் இலது, உயிரும் உறுப்புகளும் இறையை எதிரிட்டு இயங்குவனவல்ல. உயிர் இறைச்சார்பும் இந்திரியங்கள் உயிரன் சார்பும் உடைமை அறிக. சார்பின்மை இயக்கம் இவற்றுக்கில்லை.

will edit and review later


சனி, 13 பிப்ரவரி, 2016

நீயும் நிவாரணமும்

  நிவாரணம் என்ற பதத்தில்  நல்ல பொருள் பதிந்துள்ளது.  நீயும் நிவாரணமும் ஆய்வோம் .

தொடர்புடைய வெளிப்பொருள் உள்சென்று பதிவதனாலேயே அது பதம் ஆகிறது. இயற்கையில் எந்த ஒலிக்கும் பொருள் இல்லை. எல்லாம் ஒலிகளே.  ஓர் ஒலி புறப்பட்டவுடன் அதற்கு முன்னரே கொடுக்கப்பட்ட அல்லது ஏற்பட்டுள்ள ஒரு பொருளில்  நாம் அதனைப் புரிந்துகொள்கிறோம். ஆகவே பொருள் பதிவு பெற்ற பின்னரே அது பதமாகிறது. பதி + அம் = பதம். கட்டட வேலை நடக்கும் ஓரிடத்தில் ஒலிகள் பல எழுகின்றன.
இரும்பும் இரும்பும் மோதும் டம்டம் ஒலி கேட்கிறது. அதில் ஏதும்
நாம் உணரத்தக்க பொருள் இல்லை, டமாரம் அல்லது தமாரம் என்று
சொல்லை உண்டாக்கி  அதற்குப் பொருளை ஊட்டியவுடன் அந்த ஊட்டத்தில் அது பதமாகிறது, சொல் பொருளை அருந்துகிறது.  சொல்லுக்குப் பொருள் அருத்தப்படுகிறது.  (Feeding meaning into a word or term )  - .அருத்தமாகிறது. அர் என்பது ஒலி என்றும் பொருள் படும்,  ஆகையால் அர்த்தம் என்ற சொல் ஓர் இருபிறப்பி ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் பொருந்திய சொல்,

நிவாரணம் ஆவது துன்பம் அல்லது இடர் நீங்குவது.   நீங்கு என்பதிலும்  நிவ் > நீவு > நீவுதல் என்பதிலும் நீ உள்ளது. நீவுதல் இரண்டாகப் பிரிப்பதுபோலும் எழுகைத் தடவல். நீட்டுதல் என்பதிலும் நீ இருக்கிறது.தொடங்கிய இடத்திலேயே முடங்கிவிட்டால் அது நீட்டல் அன்று. அப்பால் அகன்று விரித்தலே நீட்டமாகும். என்னிலிருந்து நீங்கி வேறான ஒருத்தி "நீ". ஆகவே ஒரு தாய் தன் பிள்ளையை "நீ" என்பது எத்துணைப் பொருத்தம்.நான் என் தோழியை நீ என்கையில், அவள் என்னில் இருந்து பிறந்து நீங்கியவள் அல்லள் எனினும் இடத்தால் விலகி நிற்பவள் ,  அதனால் முன்னிலையாக "நீ"  பொருந்துதல் ஒப்புமை கருதியாகும்.

நீ என்பது சீன மொழியிலும் உள்ளது.இதை நான் சில ஆண்டுகட்கு முன்பே  எழுதியிருந்தேன்,

இதை உணர்ந்தபின் நிவாரணம் என்ற சொற்குப் பொருள் சொல்வது
எளிதன்றோ?  அது கொம்பிலாக் குதிரை,

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

=== இத்தலைப்புடைய நூலை கவி கா.மு. ஷெரீப் எழுதியுள்ளார். இது கலாம் பதிப்பகம். 6 இரண்டாவது பிரதான சாலை, சி ஐ டி காலனி மயிலாப்பூர் சென்னை 600 0024 என்ற முகவரியில் கிடைக்கிறது. தொ.பே. 044 2499 7373 ஆகும்.

ஒளியச்சு, வடிவழகு, வெளியீடு என்றெலாம் நூல் முன் பக்கங்களிலேயே காணப்படுகிறது. வெளியீட்டாளர்தம் தமிழ்ப்பற்றினை இது தெளியக் காட்டுகிறது.

இந்நூலாசிரியர் சிறந்த கவிஞர், சீறாவின் உரையாசிரியர், தமிழ் முழக்கம் என்னும் இதழாசிரியர், பல இனிய திரைப்பாடல்களை ஆக்கியவர் என்று இவர்தம் பெருமையை அடுக்கலாம். வாராய் வாராய் (மந்திரிகுமாரி), பாட்டும் நானே (திருவிளையாடல் ) என்று பல பாடல்களை எழுதியவர். எழுதிய பாடல் சில வேறு கவிஞர்களின்  பெயரில் வெளிவரவும்  வழிதந்தவர்.


இவர்தம் திரைப்பாடல்களில் "முடிவிலா மோன நிலையை நீ மலை முடிவில் காணுவாய் வாராய்' என்றும், "அலைகள் வந்து மோதியே ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே." "உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே" என்றும் வரும் வரிகள் கேட்போரின் செவிகளை இன்புறுத்தும் சொல்லினழகும் கருதினாழமும் கொண்டவை. தெளிந்த நீரைப் போன்ற காதல் என்பது இவர்தம் ஒப்பீடு.  " பாடும் உனை  நான் (கடவுள்)  பாட வைத்தேனே .... என்னிடம் கதை சொல்ல  வந்தாயா?"  என்பது நகைச்சுவையுடன் இறையாற்றலைப் புலப்படுத்தும் வரிகள். .

இஸ்லாம் ஒரே கடவுட் கொள்கையுடைய மதம். இதில் மறுபேச்சுக்கு என்றும் இடமில்லை. இந்து மதத்திலும் ஒருகடவுட் கொள்கை, நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.வேதங்கள், உப நிடதங்கள், குறள் எனப்பல. பல் பெயரும் பல் வடிவுமும் ஒரு குறியதே என்பது இந்து மதம். இவற்றில் பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் இம்மதங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவன அல்லவென்று நிறுவுகிறார். கொள்கைவிளக்கில் ஒருதன்மையன எனினும் கடைப்பிடியில் வேறுபடுவன என்பதைக் குறிக்கிறார். ஓர் உயர்கொள்கையை யாண்டும் நிலவுமாறும் மாறுபடுதல் சிறிதுமின்றியும் நிலை நிறுத்திய பெருமைத்து இஸ்லாமியமென்று இவர் கூறுகையில் அஃது மறுக்கொணா உண்மையென்றே ஒப்புவோம். நாள்தொறும் பயில்முறையில் இந்து மதம் வேறுபடினும் இந்துக்களும் முஸ்லீம்களும் காலகாலமாய் ஒன்றுபட்ட நாட்டுவாழ்வினரென்பதைச் சுட்டுகின்றார். தம் ஆட்சி நிற்கவைக்க, முஸ்லீம்கள் இந்துக் கோயில்களை இடித்தனரென்று பரப்புரைத்த 1   ஆங்கிலேயன் புனைகதையை ஆசிரியர் அம்பல மாக்கியுள்ளார்.


செந்தமிழ்க்  கவியின் இந் நூல் படிக்க இனியதே.  


அரிதின்  முயன்றார்  அழகுத் தமிழில் 
இனிதே புனைந்த கவிஷரீபின்  இன்னூல் 
பலரும் படித்துநயம் பண்பொடு பெற்று 
குழறு   படிதீர்வர் கூறு.   ---  Sivamala,


1  Much of the theories in history concocted during the British Raj by British historians and researchers seem intended to retain India in their possession.   Examples are the Aryan Invasion
Theory and Aryan Migration Theory. That Muslims were against Hinduism was a similar theory. In any case, the British were successful in dividing India and causing rifts. The author Sheriff pointed out that Muslim rulers including  Aurangzeb  had donated extensively even for the building of Hindu temples. Many Hindus were also in their employ.