திங்கள், 18 ஆகஸ்ட், 2014

வியப்பு , வியன் வியல் ( <"விர்" )

இத்திரிபுகளைக் கவனியுங்கள்:


(விர்) > விரி.
(விர்) > விய் > வியல்.  (விரிவு)
(விர்) > விய் > வியன்   (விரிவு)

விரிநீர் வியனுலத் துள் நின் றுடற்றும் பசி.  (குறள்)

"மாயாப் பல்புகழ் வியல் விசும்பு ஊர் தர"    (பதிற். 90: 20)

வியல் =  வியன்.  ல்>ன் திரிபு.  (அல் > அன் (விகுதிகள் ))

விர்> விய் > விய > வியப்பு. ஆச்சரியத்தில் மனம், கண் முதலியன விரிதல்.

விர் >  விய் > விழி.  ( கண் இமைகள் விரிதல்.)

வியி என்று அமைதல் இல்லை. விழி என்றுதான் தமிழில் அமையும்.

விரைவு குறிக்கும் அடிச்சொல் "விர்"  வேறு. 


ஆஞ்ச நேயர்க்கு வடைமாலை.

எத்தனித்த எல்லாம்  இயற்றிமுற்றுப் பெற்றடைய‌
வைத்த ஆஞ்ச நேயருக்கு வடைமாலை!
பித்தனைய பெற்றியிலே நின்றவர்க்கு முத்தனைய‌
வெற்றியினைத் தந்தவற்கு வடைமாலை!
குத்தனைய துன்பமதை நித்தலும்வி லக்கிவைத்துக்
குதூகலம்வி ளைத்தவற்கு வடைமாலை!
மெத்தவுமிவ் வாழ்வினிக்க மேதினியில் பற்றுமொரு
மித்துவர வித்தகற்கு வடைமாலை. .

இன்ப துன்பம்

சொந்தமாக உந்துவண்டி ஒன்றிருந்தாலும்
அதுவும் துன்பமே;
எந்த நாளும் பேருந்தில் பயணித்தாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி கோளாறில் படுத்துவிட்டாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி சீர்ப்படுத்திக் கட்டும் தொகை
காண்பதுவும் துன்பமே!
இன்பத்தின் எல்லைவரை சென்றுவிட்டால்
இருப்பதுவோ துன்பமே
துன்பத்தின் மறுகோடி சென்று நின்றால்
காண்பதுவோ இன்பமே
துன்பமும் இன்பமும் நேர்கோட்டின்
தோன்றுமிரு துருவமே.

துன்பம்  இரண்டில் எதையேனும் வைத்துக்கொள்!
இன்பம் அடுத்தே வரும்.