புதன், 26 பிப்ரவரி, 2014

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல்........

இதுவரை சொல்லாய்வு தொடர்பான இடுகைகள் சிலவற்றைக் கண்டோம். இப்போது ஓர் இடைவேளை வேண்டுமன்றோ? அழகிய குறுந்தொகைப் பாடலொன்றைப் படித்து இன்புறலாமே!

இது 237-வது பாடல்.   சங்கப் புலவர் அள்ளூர் நன்முல்லையார் பாடிய இது நம்மைக் கவரும் பாடலாகும்.

வெளி நாட்டுக்குச் சம்பாதிக்கச் சென்ற தலைவன் (காதலன்) தன் சொந்த   நாட்டுக்குப் புறப்படுகின்றான்.  தன்  நாட்டுக்குள் அடியெடுத்து வைத்தவன் ஒரு தேரில் ஏறிக்கொள்கிறான்..அந்தத் தேர்ப் பாகனும் தேரினைச் செலுத்திக் கொண்டிருக்கிறான்.  முற்றப் பொருளீட்டி மீள்கின்றவன் ஆனாலும் அவன் நெஞ்சில் அமைதியில்லை. இல்லை இல்லை  அவனது நெஞ்சமே போய்விட்டது.....தொலைவில் அவன் வரவு நோக்கி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைவியினிடம்  போய்விட்டது. அவளைச்  சென்று தழுவுதற்குரிய இரு கைகள் மட்டுமே மிச்சம் உள்ளன. அவளை அணுகுங்கால் இந்தக் கைகள் செயலிழந்து தழுவ முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது? இத்துணை தொல்லைகளையும் பட்டு மீண்டுவந்தும்  என்னதான் பயனோ?

அவள் வீடும் அவன் வீடும் அருகருகே இல்லை. இப்போது தேரில் சென்று கொண்டிருக்கும் இடத்திற்கும் அவள் இல்லத்திற்கு  மிடையே ஒரு பெருங்கடல்போல்  முழங்கித் தாக்கும் புலிகளை உடைய ஒரு பெருஞ்சோலையும் உள்ளது..  அந்தச் சோலையைக் கடக்க வேண்டும்.


"தேரினை வேகமாய்ச் செலுத்து பாகனே! " என்று  கட்டளை இட்டபடி அவன் எண்ணச் சுழலில் அலமருகின்றான். அவளைத்  தழுவும் என் ஆசை கனவாகிவிடுமா? என்று அவன்  தவிக்கின்றான். பாடல்,பாகனுக்கு அவன் சொன்னதாக வருகின்றது

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் நடந்துகொண்டுவிட்டேனே...........என்கிறான்.

பாடல் இது:

அஞ்சுவது அறியா அமர் துணை தழீஇய
நெஞ்சு நப்  பிரிந்தன்று  ஆயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின் அஃது எவனோ?  நன்றும் 
சேய அம்ம !  இருவாம் இடையே !
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு 
கோட்புலி வழங்கும்  சோலை 
எனைத்தென்று எண்ணுகோ? முயக்கிடை மலைவே!  (குறுந்தொகை)



அமர் =  விரும்பிய.  தழீ இய = தழுவிய . நப்  பிரிந்தன்று  =  நம்மைப் பிரிந்தது (அவள் பால் சென்றுவிட்டது )
.எஞ்சிய = மிச்சமுள்ள;   கை பிணி நெகிழின் -  கைகள் தழுவாமல் நெகிழ்ந்துவிட்டால்;
அஃது எவனோ?  =  அதனால் யாது பயனோ?  நன்றும்  =  காதலால்தோய்ந்து  தழுவக் கிடைக்கும்  அந்த ஒரு நன்மையுங்க்கூட;   சேய = வெகு தொலைவாகி விட்டதே ;  அம்ம = "அம்மம்மா ".
மாக்கடல் திரையின் = மாவாரியின் அலைபோல் ; முழங்கி = கர்ச்சித்து / உறுமி;

வலனேர்பு =  வலப்புறமாகப் பாய்ந்து தாக்கும்;  கோட்புலி  =  உயிரை எடுத்துக்கொள்ள` வரும் புலி(களையே);  வழங்கும் = நமக்குப்  பரிசாகத் தரும்  நிலையினதாகிய ;   சோலை  -  மரங்கள் செடிகள் அடர்ந்த காட்டுப்பகுதி;;

எனைத்தென்று -  நான் என்னவென்று ;  எண்ணுகோ =  எண்ணுவேன்;
முயக்கிடை =  எங்கள் ஒன்று சேர்தலுக்குத்தான் ; மலைவே =  எத்தனை பெருந்தடைகள்!

என்றபடி.  இது என் உரை.

சங்கப் பாடல்களுக்குத் திணை துறை எல்லாம் உண்டு.  அதன்படி இது தேரோட்டிக்குத்  தலைவன் கூறியது. காதலன் காதலி என்று  சொல்லாமல்  தலைவன் தலைவி என்று மாண்புபெறக் குறிப்பிடுவர்.

குறிப்பு :

கை+பிணி = கைப்பிணி   (கைக்கு வந்த நோய்)

கை + பிணி + நெகிழின் =  கைகளின் தழுவல் சோர்ந்துவிடுமாயின்.  இங்கு வலி மிகாது . ("ப்  " வராது.). வந்தால் பொருள் மாறிவிடும்.

மலைவு என்பது மிக்கப பொருத்தமான அழகிய சொற்பயன்பாடு ஆகும். அந்தப் பெருஞ்ச்சோலையில் திரிந்து  வழிச்செல்வோரைத் தாக்கி உயிர்குடிக்கும் புலிகளில் எதுவும் இந்தத் தலைவனை எதிர்ப்படுமா ? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  அது நிகழ்ந்தாலும் நிகழலாம்,  அன்றி ஒரு தொந்திரவுமின்றி அவன் அச்சோலையைக் கடந்துசென்று தலைவியை அடைந்தாலும் அடையலாம். எது நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்லற்கில்லை. இந்த நிலையை, "மலைவு " என்றது சிறந்த சொல்லாட்சி ஆகும். மலைவு - மனத்தில் ஏற்படுவது.

ஏர்பு  =  எழுதல். வலனேர்பு   - இங்கு  வலப்புறமாக எழுந்து (பாய்ந்து)  தாக்குதல் என்பது பொருள்  . இந்தக்  கோட்புலிகள் வலமாக வந்து தாக்குபவை என்று  நன்முல்லையார் நமக்கு அறிவிக்கின்றார். இந்தப் புலிகளின் இயல்பு அப்படிப் போலும். இதனை விலங்கியல் வல்லாரைக் கேட்டால்தான் தெரிந்துகொள்ள முடியும். இதை நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் நன்முல்லையாரை  வியந்து பாராட்டவேண்டும்.  கோட்புலி  =  கொலைத்  தொழிலையுடைய புலி A tiger that invariably kills. One with a killer instinct!! கடித்துப் பழக்கப்பட்டுவிட்ட நாய்  கடித்தே ஆவதுபோல இந்தப்புலி கொன்றே தீரும் என்பது புலவர்தம் கருத்து.  குருதியின் சுவை கண்ட புலி.

 








செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

அபாயம்

தெருவிலே திரியும் நாய்களில் எங்காவது ஒன்று வெறி நாயாக இருக்கும். அது  நடையர்க்கு (pedestrians)  "அபாயம் ".  அதேபோல்  கோகுலத்து வீடுகளில் நிற்கின்ற பசுக்களில் ஏதேனுமொன்று மனிதனை முட்டும் கோபக்கார மாடாக இருந்தால் அதுவும் அபாயமானதாய் இருக்கும்.

"கிட்டே போகாதே!அது பாயும் "  என்று எச்சரிக்கை செய்வார்கள்.  தமிழ் தழைத்திருந்த காலங்களில் "அந்த ஆ பாயும் , அருகில் செல்லாதே !  " என்று  சொல்வர் .

ஆ பாயும் என்பது நாளடைவில் குறுகி "அபாயம்" ஆயிற்று.

நாம் வழங்கும் சொற்களில் சில மாடுகள் வளர்ந்த இடங்களில் உருப்பெற்றவை. சில  மலையடி வாரங்களில் இருந்து புறப்பட்டவை. சில மீனவர்களிடமிருந்து கிடைத்தவை.  அபாயம் -   இந்தச் சொல் மாட்டுத் தொழுவங்களிலிருந்து நாம் அடைந்த பரிசு.

ராஜராஜ சோழன் முதலான அரசர் பெருமக்கள் தம் நாட்டிலிருந்து வெகு   தொலைவு வரை படை நடத்தினார்கள் .  அவர்களின் படையியல் சொற்கள் எல்லாம் எங்கே?   தமிழ்  மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் இப்படித்   துறை துறையாய் இதுவரை யாரும் தொகுத்தளித்ததாகத் தெரியவில்லை.  நீங்கள் முயன்று ஒரு பி.எச்.டி (முனைவர்)  !போடலாமே ....... அந்தக் காலத்தில் தொல்காப்பியனார் கொஞ்சம் செய்துள்ளார். நிகண்டுகள் சில உள்ளன.

கண்ணதாசன் பாடியதுபோல நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க !  ஆ பாயும் அபாயம் இன்றிப் பத்திரமாக -  நலமுடன் இருங்கள்.

notes:

Sanskrit has bhaya meaning:   (= பயம்)
 fear , alarm dread apprehension ; fear of  RV. {bhayAt} . `" from fear "' ; {bhayaM-kR} with abl. `" to have fear of "' ; {bhayaM-dA} , `" to cause fear , terrify "') ; . terror , dismay , danger , peril , distress ; danger from  or to , (comp.) ib. ; the blossom of . ; m. sickness , disease  ;

but abhaya means fearlessness. or protection from fear. (=அபயம் )

பயம் வேறு அபாயம் வேறு.  apAyam was absorbed into Skrt as Tamil teachers thought it was a Skrt word.


சட்டி.

சட்டி.


இந்தச் சொல் எங்ஙனம் வந்தது. சம்ஸ்கிருதமா? இல்லையே! பின் எப்படியாம்?

அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சூடேற்றுதல் என்று பொருள்.


அடு ‍>  அடுப்பு   நெருப்பு எரிக்குமிடம்.

அடு > அட்டி >சட்டி.

இப்போது சமர்ப்பித்தல். சபதம் என்னும் இடுகைகளைப் படித்துப்பாருங்கள்.

ஐயம் தீரும்.

எட்டி > செட்டி > செட்டியார்.  ( அரசரால் எட்டிப் பூமாலை சூட்டி  மதிக்கப்பெற்றவர் ) என்றனர் ஆய்வறிஞர். உயிர் முதலான‌ சொல், செகரம் பெற்றது காண்க.