வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பல்சுவைத் துணுக்குகள்


இவை சென்ற ஆண்டில் எழுதப்பட்டவை. இங்கு மறு வெளியீடு காண்கின்றன

Date of composition is given as well.

(ஒரு கதை சொல்லத் தொடங்கிய இணையக் கவி யொருவருக்கு, அவர் சற்று விரைவு குறைந்தபோது  சிவமாலா சொல்லிய குறள்:- )

எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
உள்ளாரே கேட்கப் பலர்!

18th September 2011, 08:59 PM

நடிகை தேவிகா ஓவியப் பாவை,  நடிகை  காஞ்சனா தீஞ்சுவை என்றவர்க்கு யாம் சொல்லியது :


மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
விழக்கட் டழகியர்தம் வேடு.

மஸ்கட் என்னும் நகரை "மழுக்கட்டு" என்று திரிபு செய்துள்ளேன் .

(மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )
vEdu = veil.

மழுக்கட்டில் = in the city of Muscat.

திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.


14th September 2011, 04:37 PM

துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.

இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.

10th September 2011, 02:51 AM

வயதாகிவிட்டது, முன்போல் எழுத இயலவில்லை, என் வயது எட்டு தாண்டி ஒன்பது ஆகிவிட்டது என்றார்க்கு இப்படிப் பதில் எழுதினேன் :  


எட்டு ஒன்பது என்பவை என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை  40 அல்லது 50 இருக்கலாம் என்பது என் கணிப்பு:  8 x 5 =40,  9x5=45 !!

எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.

அருஞ்சொற்பொருள்::  எட்டகவை  = எட்டு வயதில் ' எட்டி  = அடைந்து , எட்டுடன்  ஒட்டினால் ஒன்றினை  -  ஒன்ப,து வயதில்.  புனை  கலை  -  புனையும் அல்லது பாட்டுக்கட்டும் கலை. கவி மழை கொட்டி நில முனையில் சுனாமி போல் வந்து கரையை முட்டும் என்பது பொருள்

12th September 2011, 06:01 PM

வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
இந்தநாள் முன்போல் இனி.
8th September 2011, 07:23 AM

வருடம் பலமுன் வருடிவழி -=   பல ஆண்டுகளைக் கடந்தபின் வந்து இங்கு  தோன்றிய  ( வெண்பா )

 இது ஒரு காலமாகிவிட்ட  சிற்பியைப்  பற்றியது :  
இவர் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்  சிலை முதலியவை அமைத்தவர்.என்று அறிகிறேன்

செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
செயற்குரிய நன்றி செயல்.


கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
நிலைபெறுக அன்னார் புகழ்.


உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
உற்றிலரோ வற்றாப் புகழ்.


இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
பிறங்கும் உலகில் புகழ்
8th September 2011, 07:34 AM

உரையாடிய கவிக்குப்  பாராட்டு :


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்

28th September 2011, 10:01 PM

கூ ல ம்  -  தானியம் ;   கோதகற்றி = உமி  அகற்றி .

ஞாயிறு, 29 ஜூலை, 2012



பணிப்பெண் அன்பும் சேவையும்.



an affectionate  maid....


என்கால் தன்மடி மீதுவைத்தாள்
இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
தன்கால் மொத்தடி பட்டதுபோல்
தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
அன்னை மூவராய் ஆனதினால்
அதைத்த நோவதும் போனதன்றோ!

அன்பினர் யாரும் எட்டநின்றால்
ஆன வலியெலாம் கிட்டவந்து
பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
அன்பினர் குறுகிடில் விட்டகலும்

இரவில் வலியும் ஏறிடுமோ
என்பால் தோழியும் கூறிடுவாள்
வருவது வரட்டும் என்செய்வது
வைத்தியம் என்பது பின்செய்வது


வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
மொத்தடி - மொத்து அடி.
அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
கிட்ட - பக்கத்தில். அருகில்.
பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
அன்பினர் - அன்பு உடையோர்

குறுகிடில் -  நெருங்கி வந்தால் 

திங்கள், 23 ஜூலை, 2012

பாஷாணம்

நஞ்சு அல்லது உண்ணக் கொல்லும் பொருள்  பலவகை, சில பச்சையாகவே உண்டு  சாவினை  வரவழைத்துக் கொள்ளும்  திறம்  தருவதாம்  இதற்குரிய சொல் :

பச்சைநஞ்சு என்பதாம்,

 பச்சைநாவி  என்பது இன்னொரு நஞ்சின்  பெயர் .(aconite)

இனி பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது.?

ஆணம் என்பது  குழம்பு போல்  காய்ச்சப்படுவது.

பசுமை +  ஆணம் =  ; பாசாணம் .>  பாஷாணம். (இங்கு  முதனிலை நீண்டுள்ளது )

(இன்னோர் எடுத்துக்காட்டு  பசுமை + இலை = பாசிலை.)

அதாவது பச்சிலையை அவித்தெடுத்த நஞ்சு அல்லது  நஞ்சுக் குழம்பு என்பதாம்.

 இப்போது இது பொதுப்பொருளில் வழங்குகிறது,    


  காய்கறிக் குழம்பைப் "பச்சைக் கறி "  என்பது மலையாள வழக்கு.    


பாஷாணம் என்ற சொல் சமஸ்கிருத அகரமுதலியில் காணப்படவில்லை.





Poison என்ற ஆங்கிலச் சொல், ஒரு குடிக்கும் நீர்ப்பொருள் என்று பொருள்படும் சொல்லினின்று வந்ததாகக் கூறுவர்.:-


(potion, ,  a portion of a drink,  a drink in general.


குடிக்கத் தரப்படுவது (=gift)  என்று பொருள்தரும் சொல்லிலிருந்து பல ஐரோப்பிய மொழிகளில் இதற்குச் சொல் அமைந்துள்ளதென்பர்.


தமிழில் " பச்சிலை",  "வேகவைத்தல்" முதலிய கருத்துகளின் அடிப்படையிலேயே சொல் அமைந்துள்ளது.



மலாய்மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் வழங்குகின்றன.
பாசாணம் குறிக்கும் ராச்சூண் என்னும் மலாய்ச்சொல்,
அரைச்சுண் (அரைச்சு உண்) என்பதன் திரிபு போல் தோன்றுகிறது. இது மேலும் ஆராய்வதற்குரியது. தற்கொலை செய்துகொள்வோருள், பச்சிலைகளை அரைத்து உண்டு மாண்டவர்கள் பலர்.
Poison  என்ற ஆங்கிலமும் பாசாணம் ("பாyசாண்") என்பதனோடு சற்று ஒலியொற்றுமை உடையதே.
இவற்றைப்பற்றி இங்கு ஏதும் கருத்துக் கூற முற்படவில்லை.