இனி வாயிலான் தேவனார் என்னும் சங்கப் புலவர் பாடிய ஒரு சிறு பாடலை நுகர்வோம்.
மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்று வயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே. குறு. 108
இது தலைவி தோழிக்குக் கூறியது பற்றிய பாடல்.
அருஞ்சொற் பொருள்: சிறுகுடி = சிற்றூர்.
கறவை = கன்றையுடைய பசு. கன்றுவயின் = கன்றினிடம். புறவு = முல்லை நிலம். பாசிலை = -பச்சை இலை. ஆசு = குற்றம். ஆசில்-
ஆசு இல்= குற்றமற்ற. வான் பூ = வெண்ணிறப்பூக்கள். செவ்வான் - சிவந்த வானம். கொண்டன்று = அழகு கொண்டது.
யான் உய்யேன் = நான் இனி வாழமாட்டேன். (நான் அவரை நம்பித் தொலைந்தேன் என்பது). போல்வல்= போலும். தோழி யானே என்றபடி.
வருவேன் என்று சொல்லிச் சென்று, வாராது போன தலைவர்களை நினைத்துத் தலைவியர் வடித்த கண்ணீர்ப் பாடல்களில் இதுவும் ஒன்று.
காதல் எண்ணாதார் சாதலைத் தழுவவேண்டாமே...
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
இது மகாகவி பாரதியின் வரிகளல்லவா?
பாடல் புரிந்திருக்கும், அதன் அழகு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மேற்கண்ட பாடலைப் பாடிய புலவர் பற்றி: இதைப் பாடிய நல்லிசைப் புலவர்தம் இயற்பெயர் தேவன் என்பதுபோலும். உயர்வுப் பன்மையில் தேவனார் என்றனர். வாயிலான் என்பதென்ன என்பது ஆய்வுக்குரியது. இதனை வாய்+இலான் என்று பிரித்தால் எப்போதும் அதிகம் பேசாமல் அடக்கமாகவே இருந்தவர் என்பதற்காக ஏற்பட்ட பெயரா என்று தெரியவில்லை. ஊமையானவர் என்று பொருள் கொள்ள இயலவில்லை. வாயில்+ஆன் என்று பிரித்து வாயில் காப்போரின் தேவன் அல்லது தலைவர் என்று கொள்வதில் உள்ள தடை என்னவெனின், வாயிலான் என்பது ஒருமை வடிவில் இருப்பதே. இத்துறையில் ஆய்வு மேற்கொள்வோருக்கு இதை விட்டுவிடுவோம்.
இப்பாடலின் கருத்தினைப் பார்ப்போம்: குன்றுகளில் மழை வந்து விளையாடத் தொடங்கிவிட்டது. மழை விளையாடும் குன்று என்பது அருமையான சொல்லாட்சி. ஆகவே இது மாரி காலம். தலைவி வாழ்வது இக் குன்று சார்ந்த ஒரு சிற்றூரில் தான். அங்குள்ள கறவைப் பசு(க்கள்) தம் கன்று(களை) நோக்கிச் செல்கின்றன. அவை தம் கன்றுகள்பால் எத்துணை அன்பு உடையவை.இதுபோன்ற அன்பினை தலைவி தலைவனிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அவன் தலைவியை நாடி வரவில்லையே! முல்லைச் செடிகளில் பச்சைப் பசேலென்று இலைகள். முல்லைப்பூக்களோ, தம் வெண்மையினால் வானத்தின் செம்மையை எதிர்கொள்கின்றன. அழகுக்கு அழகாக அன்றோ இருக்கின்றது! முல்லையைப் போல் வெள்ளை உள்ளத்துடன் காத்திருக்கும் தலைவியை நோக்கி, செவ்வானம் போல் தலைவன் வந்து எதிர் நிற்கவில்லை. அந்த முல்லைக்குக் கொடுத்துவைத்தது தலைவிக்கு இல்லை.
மாரி காலம் வருவதற்குள் வந்துவிடுவேன்! கறவைப் பசுக்கள் கன்றுகட்குப் பாலூட்டுமுன் நான் வந்து உனக்குக் காதல் அமுதூட்டுவேன்! வெண்முல்லை செவ்வானைச் செவ்வி காணுமுன் நான் வந்துவிடுவேன்!....என்றெல்லாம் உறுதிகளை அள்ளி வீசியவன், அப்பருவகாலம் வந்துவிட்டது, அவன் எங்கே? நான் தொலைந்தேன் தோழீ! தொலைந்தேன்... என்று தலைவி........
தலைவியின் உள்ளம் முல்லைபோல் வெண்மை, தலைவனிடம் தான் செவ்வானம்போல் செம்மை இல்லை. செம்மை = நேர்மை.
இப்போது பாடலை இன்னொருமுறை பாடிமகிழுங்கள்.