இறைவன் வருவான்.(தெருள்பெற்றாரிடம் அருளுருவான இறைவன் வருவான். அல்லாத விடத்து? }
இது முன் பாடப்பெற்ற ஒரு கவிதையின் தொடர்ச்சி.
அல்லா விடத்து வருதலோ இல்லையே.
நில்லா தவனாய் அறவழி நீங்கியோன்
கல்லான் எனினும் கலைவிண் எனினுமே
செல்லான் இறைவனின் சீரடிப் பாங்கே.
அறம்திறம் பாதோர் ஆழியின் முத்தாம்
புறம்செல வீழ்ந்தோர் புவனம் நி றைத்தார்
பரம்பொருள் உள்வழி பாவித் தவரே
தரம்தரு மாந்தர் சிலரே சிலரே.
தீதில் முகிழ்த்தோர் தினம் நீர் புகட்டினும்
யாது நிலையிலும் யாண்டுமே ஆட்படார்
சாதல் வரினும் சதைசிதை வாயினும்
மோதி அறச்சுவர் முட்டி அழிபவர
மொழி நடை கடினமாகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற நினைப்புடன் தான் எழுதுகிறேன். மரபுப் பாக்களில் சில வேளைகளில் தவிர்க்க முடியவில்லை.
நான் எழுதியதன் பொருள்:
அல்லா விடத்து = இறைவனைப் பற்றிய தெளிவை அடையாத இடத்தில்; வருதலோ இல்லையே.= அவன் வருவதில்லை;
நில்லா தவனாய் = அற நெறியில் நில்லாதவனாக , அறவழி நீங்கியோன் = அந்த வழியிலிருந்து நீங்கியவன்;
கல்லான் எனினும் = படிக்காதவன் என்றாலும், கலைவிண் எனினுமே = படிப்பில் உயர்ந்தவன் என்றாலும்,
செல்லான் - போய்ச்சேரமாட்டான், இறைவனின் சீரடிப் பாங்கே.= இறைவனின் சீரான திருவடிகளின் பக்கத்திலே.
அறம்திறம் பாதோர் = அற வழியினின்று மாறிச் செல்லாதோர்;
ஆழியின் முத்தாம் = கடலினின்று கிடைக்கின்ற முத்துப்ப்போன்றவர்கள்;
புறம்செல வீழ்ந்தோர் = வேறு வழிச்சென்று வீழ்ச்சி அடைந்தவர்கள்;
புவனம் நி றைத்தார் = உலகெங்கும் நிறைந்துள்ளனர்;
பரம்பொருள் உள்வழி = கடவுள் உள்ளானெனச் செல்லும் வழி, பாவித் தவரே = பின் பற்றியவர்கள்;
தரம்தரு மாந்தர்= உலகிற்கும் தமக்கும் ஒரு தரத்தை, அல்லது உயர் நிலையை வழங்குவோர், சிலரே சிலரே.= சிலர் என்பதில் ஐயமில்லை.
தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;
யாது நிலையிலும் = எத்தகைய நிலையிலும்; யாண்டுமே ஆட்படார் = என்றுமே கடைப்பிடிக்க மாட்டார்;
சாதல் வரினும் = மரணம் வந்தாலும்; சதைசிதை வாயினும் = தம் உடல் அழிந்தாலும்;
மோதி அறச்சுவர் = அறமாகிய திண்ணிய சுவரில் சென்று இடித்துக்கொண்டு, முட்டி = அதில் திரும்ப வழி அறியாராய் மேலும் அடிபட்டு, அழிபவர் =, என்றவாறு.
என் தாழ்மையான உரையைப் படித்து, கவிச்சுவை காண்பீர்கள் என்று நம்புகிறேன்.