வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சகிப்பு எப்படி அமைந்தது

 அமண் என்ற சொல் சமண் என்றாகும்.  அகர முதலன சகர முதலாய்த் திரிதலென்பது பெரிதும் சொல்லாய்வு (திரிபியல்)  அறிஞர்களால் ஒப்பி ஏற்கப்பட்டதே.

இதனை முன்னிறுத்தி,  சகிப்பு என்ற சொல்லின் ஆக்கத்தை ஆய்ந்தறிவோம்.

வெளியில் காணும் பழக்கமில்லாத ஒருவனிடம் ஏதேனும் சரியாகச் சொல்லிவிட்டாலும் அதைத்  தவறாக எடுத்துக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவதைக் காண்கிறோம்.  ஒரு கடையில் அமர்ந்து குளம்பிநீர் (காபி)  அருந்தும்போது ஒரு தேவதை போலும் அழகியைச் சற்று ஆசையுடன் ஒருவன் பார்த்தாலும் அவள் கோபித்துக்கொள்வாள்.  இவைபோலும் பல -- ஒக்க இருக்குங்கால் ஏற்படும் உரசல்கள், வீட்டினுள்ளும் எப்போதும் நடக்கும். ஆனால் அதற்காக வீட்டில் வாழ்வோர் யாரும் ஒருவருடன் மற்றவர் கோபித்துக்கொள்வதில்லை.  ஆகவே சகித்துக்கொள்வ தென்பது ஓரகத்தினுள் வாழ்வோருக்கு ஓர் அன்றாட நிகழ்வு என்பதைப் பண்டைச் சொல்லறிஞர்கள் கண்டறிந்தனர்.

சொல்லறிஞர் என்போர் வலிமையான விளம்பரப் பின்னணி உடையவராய் இருக்கவேண்டு மென்பதில்லை. விளம்பரம் ஒன்றுமற்ற அடக்கமுடைய அறிஞர்கள் வீடுகளுக்குள் குடத்திலிட்ட விளக்குப்போலப் பல்லாயிரவர் உண்டு.  அவர்களை நாம் அறியவில்லை என்பதற்காக அவர்கள் அறிஞர்கள் அல்லர் என்பது சரியன்று.  ஓர் அறிஞனை அவன் தன் ஆக்கமுடைமை கொண்டு தீர்மானிக்க வேண்டுமே அன்றி விளம்பரமுடைமை கொண்டு தீர்மானித்தல் தவறு.  பல சொல்லறிஞர்கள் நமக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். சிலர் வாய்ப்பின் காரணமாய் அல்லது சூழ்நிலை முதலியவற்றால் மக்களால் அறியப்பட்டு புகழ் பெற்றுவிடுகிறார்கள்.

அகம்வாழ்வோர் முரண்பட்ட சுற்றுச்சார்புகளிலும் பொறுமையையும் அடக்கத்தையும் கடைப்பிடிப்போர்.  முரண்பாடுகள் வந்தாலும்  வீடு என்னும் அரண் அவர்களைக் காப்பாற்றிவிடுகிறது.  தாத்தா சொல்கிறார்;  அப்பா சொல்கிறார்,  அம்மா அன்பினால் முரண்பட்டவரையும் சரண்தொட்டு நிற்குமாறு  மாற்றிவிடுகிறார்.  இணக்கப்போக்கு எனற்பாலது இல்லத்தின் நலந்தரு விளைவு ஆகும்.

அகம் -  சகம் ஆகிற்று.  சகம் என்பதிலிருந்து சகித்தல் என்பது தோன்றியது.  இதற்குச்  சொல்லமைப்புப் பொருள்,  அகத்தில் நடப்பதுபோலப் பொறுமையுடன் நடந்துகொள்வது.

மரம் > மரித்தல் என்பவற்றில் உள்ள உறவினைப் போன்றது இதுவாகும். மரத்திற்கு உயிரோ உணர்வோ இலது என்று ஒருகாலத்தில் எண்ணினர். அவற்றுக்கு உணர்வு உண்டு என்பதை ஜெகதீச சந்திரபோஸ் முதலிய அறிஞர் காட்டினர்.

ஆகவே சகிப்பு இவ்வாறு தோன்றிய சொல்தான் என்பதை அறிக.

இங்குள்ள பூசாரிகளில் எவனும் ஒருவன்,   எப்படி வெளிநாட்டு மொழியைக் கற்று அதில் பூசைக்குரிய சொற்களைக் கோத்து  ஆராதனை செய்வான்?  ஓரிருவர் அல்லர், பல்லாயிரவர் ஒரு குழுவாகக் கற்றுப் பணி செய்து அணி செய்தது எவ்வாறு?   சமஸ்கிருதம் என்பது தமிழின் நிழல் மொழி.  வீட்டுத் தமிழிலிருந்து மரத்தடி நிழலில் தோன்றிய மொழி.  இதை இங்கு விளக்கும் வழியால் உணர்ந்து கொள்ளலாம்.  

சகிப்பு -  ஓரகத்து ஒருங்கு வாழ்தலினால் ஏற்படும் புரிந்துணர்வு என்று இதனை  வரையறவு  (definition) செய்தலே சரியாம். அவ்வாறு வாழ்தலாகிய அதனின் விளை பொறுமைப் பண்பு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 24092022 1421 செய்யப்பட்டது.

புதன், 21 செப்டம்பர், 2022

சாசனம் - பொருண்மை.

 இப்புவியில் உள்ள பொருள்களில் தன் நிலையான இருத்தலுக்குப் பிறபொருளைச் சாராமைகொண்டு இயல்வதே  உண்மைப் பொருளாம். அப்பொருளை மெய்ப்பிக்க இன்னொரு பொருள் தேவையில்லை. அப்பொருளை உளதாய் ஆக்குதற்கு இன்னொன்று தேவையில்லை.  அது தானே இயல்வது.  காலத்தால் அழிவது எப்பொருட்கும் இயல்பு ஆயினும் பன்னெடுங்காலம் அது இயல்வதாயின், காலத்தால் அழியாமையை நெருங்கி நிற்கும் தன்மை அஃது உடையது என்று நாம் கொள்ளலாம்.  ஒரு மண் பாண்டத்தில் ஒன்றை எழுதிக்கொடுத்தால் அஃது விரைவில் அழிதல் தன்மை உடையதாகிவிடும் .  ஒரு பொற்பட்டையிலோ செப்புப்பட்டையிலோ எழுதித்தரின், அது நெடுநாள் உலகி லுள்ளோருக்குக் காணக்கிடைக்கும் என்று அறிக.

நெடுநாள் அழியாதிருத்தலுக்கு.  ஒருபொருள் தன்னைத் தான் சார்ந்திருத்தல் வேண்டும்.  

சாசனம் என்பது நீண்டநாள் நிலைத்திருக்கும் தன்மையை உடைய ஓர் ஆக்கம் ஆகும்.  இச்சொல்லில் இரண்டு உறைவுச்சொற்களும் ஒரு விகுதியும் உள்ளன.   அவை:  சார்(பு);  தன்;  அம் (இது விகுதி).

சார்பு என்பதில் "சார்"  என்பது வினைச்சொல்.  இது கடை எழுத்தாகிய ரகர மெய் மறைந்து  "சா"  என்று நின்றது.

தன் என்பது சன் என்று திரிந்தது.  இது எவ்வாறு எனின்,  தங்கு என்ற சொல் சங்கு என்று திரிந்ததுபோலுமே ஆகும்.  ஓட்டினுள் தங்கி இருக்கும் உயிரியே சங்கு ஆகும்.  தன் > சன்; தங்கு> சங்கு.   அரசன் தரும் விருந்தோம்பலுக்குத் தங்கி உண்டுமகிழ்ந்து,  பின் அவன்முன் பரிசில் பெறும் இடம் சங்கம் ஆனது காண்க.  தங்கு> சங்கு> சங்கம் என்று திரிந்தது போலாம்.  அமைதல் காட்டும் விகுதியே அம் ஆகும்.

ஒரு சான்று வேண்டின் தன்னைத் தான் மெய்ப்பித்துக்கொள்வது:  சார்+ தன் + அம் > சா+ சன் + அம் > சாசனம் ஆனது. "தன்னையே சார்ந்தியல்வது". ஒரு சாசனத்துக்கு வேறு சான்று வேண்டாமையே அதன் பொருண்மை.

இதன் மூலச்சொல் சார்தனம் எனற்பாலது அவ்வடிவில் கிட்டாமைக்கு, அச்சொல் வெகுநாள் பண்டை அரசுகளில் புழக்கத்திலிருந்து திரிந்து பின்னர் எழுத்தில் அதனைப் பதிந்தோரால் அறியப்பட்டமையே காரணமாம் என்பது தெளிவாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

edited on 23092022


பேரக் குழந்தைகளுடன் வனஜா





வனஜா அம்மையார் இந்தப் படத்தில் தம் பேரக்குழந்தைகளுடன் தோன்றுகிறார்.

ஆசிரியப்பா

சோறும் பாலும் ஊட்டி மகிழ்ந்தபின்

ஆரத் தழுவி  அன்புமுத் தமிட்டுக்

கூறும் கதைபல  இருவரும் மகிழ

மகிழ்வினைக் கண்ட பாட்டி வனஜா

நெகிழ்வுடன் ஓடி  ஆடியும் பாடிய

அந்த நாள்தனை இன்று 

முன்தரும் படங்கள் கண்டுமகிழ் வீரே..