ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

இலட்சியம் - சொல் பொருள்

ஒரு மனிதன் எங்குச் சென்றாலும், சில மணிநேரங்கள் இருந்து அங்கு ஏதேனும் கவனிக்க வேண்டியிருந்தால் கவனிப்பான். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் அவன் அங்கிருக்க முடிவதில்லை.  அப்புறம் தன் வீட்டு நினைப்பு வந்துவிடும். வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிடுவான். அவன் இந்தியனாயிருந்தாலும் சீனனாய் இருந்தாலும் வெள்ளைக்காரனாய் இருந்தாலும் இதுவே ஒரு பொதுவிதியாய் அமைந்துவிடுகிறது.  வெளியில் எதைச் செய்தாலும் விட்டுத் திரும்பிவிடுவதால் விடு என்ற சொல்லிலிருந்து முதனிலை நீண்டு வீடு என்ற சொல் அமைந்துவிடுகிறது. ஒரு கோழி எங்கெங்கு இரைதேடி அலைந்தாலும், பொழுதுபோன நிலையில் கோகோ என்று கத்தியபடி தன் குடாப்பை நோக்கித் திரும்பிவிடுகிறது.  பழங்காலத்தில் இந்தக் குடாப்புகள் குடலை வடிவத்தில் இருந்தனபோலும்.  இப்போது கோழி வளர்ப்பவர்கள் அதற்கு வசதியாக ஒரு புறம் கதவுள்ள ஒரு பெட்டி வடிவில் செய்து கோழிகளுடன் குலவும் அன்பைக் காட்டுகின்றனர்.  "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" என்பது பாரதியின் கருத்து.

மனிதனுக்குக் குறிக்கோள் உண்டா? இலட்சியம் உண்டா?  வீட்டுக்கு வெளியில் தாம் அடைவதற்குரியவை இவை.  வீட்டுக்குள் தங்கித் தன் ஓய்வினைப் பெறுவதுதான் உண்மையான இலட்சியம் என்று சொல்லவேண்டும்.  

இதனால் அலுவகங்களில் "Home , sweet home"  என்று சொல்லிக்கொண்டு புறப்படும் ஒரு "பண்பாடு" நிலவுகிறது. நம் திரைக்கவிகளும்:

"சண்டை முடிஞ்சி போச்சி நம்ம நாட்டிலே,

சல்தி போய்ச் சேர்வம் நம்ம வீட்டிலே "  என்றும்,

"வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே,

நாடி நிற்குதே அனேக நன்மையே"  என்றும்

எழுதியுள்ளனர்.  நன்மையெல்லாம் தருவது வீடு போலும்.

நரிகளுக்காவது இருப்பதற்கு ஒரு வளையிருக்கிறது என்றாராம் ஏசுபிரான். எங்கு சென்றாலும் அந்த வளைக்குள் வந்து ஓய்வு பெறும் நரி!!

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என்ற பழமொழியானது ஒரு மனிதனின் வாழ்வில் இரு முன்மை வாய்ந்த இலட்சியங்களைக் குறிக்கிறது.

கல்யாணம் பண்ணுதல் தன் மனைவியோடு நீங்காமையையும்  வீடுகட்டுதல் தன் வீட்டுடன் நீங்காமையையும் அடிப்படையாக உடையன.

இங்கு ஆய்வு செய்யப்படுவன,  நெருக்கம், நீங்காமை, மாறாத் தொடர்பு ஆகியவற்றை அடிநிலையாகக் கொண்ட சொற்களை முன்வைப்பன ஆகும்.

நெரு நரு என்ற அடிச்சொற்களை நன் கு அறிந்துகொள்ளுங்கள்.

தீப்பற்றியபின் நெருப்பு எரிகிறது.  எரிதலாவது,  பொருளழிவில் தீவளர்தல். எடுத்துக்காட்டு:  பஞ்சு அழிந்து எரிகிறது. பஞ்சு தீக்கு உணவு.  எரிகையில் இடையீடின்றி எரிதலை ( அதாவது எரிநெருக்கத்தை )  நெருப்பு என்பது குறிக்கிறது. எரியுணவு தீர்ந்துவிடில் இடையீடு ஏற்பட்டு நெருப்பு அணைகிறது.

நெருங்குதற் கருத்தை உணர்த்தவே இதை விரித்து எழுதுகிறோம்.  நெரு > நெருப்பு.  நெரு> நெருங்கு.  அடுத்தடுத்து இல்லாவிடில் நெருப்பு, பற்றும் இயல்பு குறைந்துவிடும்.

ஆதிகால மனிதன், அடுத்துள்ளதையே தனது குறியாகக் கொண்டான்.  அடுத்திருந்த மரத்தின் கொய்யாவை அடைய விரும்பினான்.  அவன் குறி, இலட்சியம் அதுதான். மனம்மட்டும் அறிந்த திடப்பொருண்மை அற்ற இலட்சியங்கள் அவன் காலம் செல்லச்செல்ல உணர்ந்துகொண்டான்.  எல்லாம் படிவளர்ச்சி தான். அதாவது படிகள் பல.

இல் = வீடு. அல்லது அடைய முன் நிற்கும் குறி.

அடு  -   நெருங்குதல்.

து > சு: -  இடைநிலை.

இ :  இடைநிலை. இங்கு என்றும் பொருள்.

அம்:  அமைவு குறிக்கும் விகுதி.

இலடுத்தியம் > இலடுச்சியம்.   தகர சகரப் போலி.

எதைக் குறித்துப் பேசினார் பேச்சு வழக்கில் எதக் குறிச்சுப் பேசினார் என்று தகரம் சகரமாகும்.  தகரம் சகரமான சொற்கள் பலவுள. பழைய இடுகைகளிற் காண்க.

இலடுச்சியம் > இலட்சியம் :   குறியை அல்லது வீட்டை அடுத்துச் செல்லுதல்..

கோட்டுக்குறி அமைத்தவன் இலக்குவன்.

இழு என்ற சொல்லுக்கு முன்னோடி  இல்.  இல் > இலு > இழு.  ஒ.நோ: பலம் > பழம். 

இல் என்பது இடன் குறிக்கும் உருபு.    கண்ணில் வழியும் நீர். (ஏழாம் உருபு).

நன்னூல் 302.

இலடுச்சியம் என்பதில்  டுகரம் டகர ஒற்றானதே திரிபு.

அமைப்புப் பொருள்:  ஓர் இடத்தை அடுத்துச் செல்லுதல்,

அல்லது அவ்விடத்தை அடைதல்.

அடு > அடுத்தல். (வினையாக்கம்)

அடு > அடை > அடைதல் ( வினையாக்கம்).

அடு> அட் ( சொல்லாக்கப் புணர்வின் குறுக்கம் அல்லது அடிச்சொற்குறுக்கம்)


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்

இவற்றையும் ஒப்பிட்டுக் கண்டுகொள்க:

விழு + பீடு + அணன் =   விழுமிய பீடு  அணவிநிற்பவன்.  அதாவது சிறந்து உயர்வினை உடையவனாய் இருந்தவன்.

விழு = சிறந்த.

பீடு+  மன் > பீடுமன் >  பீமன்  (  இடைக்குறை - டு).  பெருமை உடைய மன்னன்.

கேடு  + து >  கே(டு) + து >  கேது.   கிரகப் பெயர். (கோள்.  ஆனால் கிரகம் என்பது வீடு என்று பொருள்தரும் சொல்).






வெள்ளி, 2 ஏப்ரல், 2021

நரி - பெயர் அமைவு. அடிச்சொல்: நரு இன்னும்...

 நரி என்னும் சொல் நாய் போலும் ஒரு விலங்கைக் குறிப்பது. இது காட்டுவிலங்காகும்.  இதை விலங்கு காட்சி சாலைகளிலும் வைத்திருக்கிறார்கள். அன்றி வீடுகளில் யாராலும் வளர்க்கப்படுவதில்லை என்று தெரிகிறது.

நரிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இதற்குத் தமிழில் ஏற்பட்ட பெயரும் இதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. இது தந்திரமுள்ள விலங்கு என்பர். கதைகள் பலவற்றில் நரி தவறாமல் வந்து சிறு பிள்ளைகளை மகிழ்விக்கிறது.

நரி என்ற சொல்லின் அடிச்சொல் நரு என்பது.   நெருங்கு என்ற சொல்லில் உள்ள நெரு என்ற அடிச்சொல்லும் நரு என்பதும் தொடர்புள்ளவை.

நரு >< நெரு.

நருள்  -  மக்கள்நெருக்கம் .  " நருள் பெருத்த ஊர்".

நரு >  நரி :  அதுபோலும் விலங்குடன் நெருக்கமாக (கூட்டமாக) வாழும் விலங்கு.

நரு >  நரன்:  மனிதன்.  ( மனிதனும் தன் போலும் பிறருடன் நெருங்கி வாழ்பவன் தான். அதனால்தான் நரன் என்னும் இப்பெயரைப் பெற்றான்)

gregarious  என்னும் ஆங்கிலச் சொல் இதை விளக்கவல்லது.

Man is a gregarious animal. 

நரு + இ =  நாரி.  ( பெண் மனிதர்).  முதனிலை (முதலெழுத்து நீண்டு அமைந்த சொல்..  இவ்வாறு நீண்ட சொற்களைப் பழைய இடுகைகளில் காண்க).இங்கு நரு என்னும் அடிச்சொல் மாற்றுப்பாலானுடன் நெருங்கி வாழ்தலைக் குறிக்கும்.  

பரு + இய > பாரிய  என்ற சொல்லிலும் இங்ஙனம் சொல் நீண்டது.

பரு > பார் ( உலகம் )  இதுவும் நீண்டமைந்த சொல்லே.  பர > பார் எனினுமாம்.

பரு > பருவதம் > பார்வதி  -  நல்ல எடுத்துக்காட்டு.

---  என்று சில காண்க.

ஒன்றை நெருங்கி இன்னொன்று நிற்றல் " நிர >  நிரை" எனப்படும்.

நிர >  நிரை:  ( நிரையசை -  யாப்பிலக்கணம்).

நிர >  நீர்  ( இதன் அடிப்படைப்பொருள் இடையில் விலகல் எதுவுமின்றி ஒன்றாகி நிற்கும் பொருள் என்பதுதான். அதனாலேதான் இப்பெயர் இதற்கு.

இக்குறளை நினைவிலிருந்து சொல்கிறேன். சரியாகச் சொல்கிறேனா என்று நீங்கள்

பார்த்தறிக.  

நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின் நீர பேதையார் நட்பு.

இது இணையத்தில் கிடைத்த மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.

இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.

நான் எழுதிய குறள் சரி என்று பார்த்துக்கொண்டேன். நன்றி.

அழகான குறள். பொருளும் மலைபோல் சிறந்தது.

நிரத்தல் என்ற வினையின் பொருளும் அறிந்துகொள்ளுக.

உணவை நிரந்து பரிமாறு,  நிகழ்ச்சி நிரல் என்ற வழக்குகளை நோக்குக.

நுல் அடிச்சொல்.  நுல் > நில்.  இடம் நீங்காமை குறிக்கும்.  நுல் > நூல். ( நீங்காமல் செறிவுமாறு திரிக்கப்பட்டது ).

நுல் > நுர் > நுரை:  நீங்காமல் (ஓட்டி)  காற்றுப்புகுந்து அடைவுடன் தோன்றி நெருங்கி நிற்பது.

நரு > நரல்: இது வினைச்சொல்லாக "நரலுதல் "  என்று வரும்,  இது ஒலித்தல் என்று பொருள்பட்டாலும்,  பல ஒலிகளின் கலப்பையே சிறப்பாகக் குறிப்பது. இதற்கு எடுத்துக்காட்டு  தேனீக்கள் என்பர். நரிகள் ஒன்றாகக் கூட்டமாகச் செல்பவை என்றாலும் ஒலியும் ஒன்றாகச் சேர்ந்து எழுப்புவனவே ஆகும். இக்காரணமும் இதற்குப் பெயர் உண்டாகப் பொருந்தும் காரணமே ஆகும்.

நரல்வு என்ற சொல்லும் உள்ளோசை எழுதல் குறிக்கும். ( இசைக்கருவி) 

மனிதனும் ஒலிசெய்யும் திறனுள்ளோனே யானாலும், கூடிவாழ்வோன் என்ற பொருள்கூட்டுதலே சிறப்பு என்று கருதலாம். ஆயினும் இங்கு தரப்பட்ட சொற்பொருள் ஆய்ந்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். எனக்கு இரண்டும் ஏற்கத்தக்கனவாகவே தோன்றுகிறது.  எதை ஏற்றாலும் இனிமையே.

மனிதனைப் பலியிட்டுச் செய்யும் யாகம் முன் காலங்களில் நடைபெற்றன. இன்றும் சொந்தப் பிள்ளைகளை நரபலி கொடுத்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.  இது நரமேதம் எனப்படும்.

கடல் எப்போதும் அலைகளால் ஒலிசெய்வதால் அதற்கு " நரலை " என்ற பெயரும் உண்டு.

நரவரி என்பது நரசிங்கம் என்று பொருள்தரும்.   நர + அரி.  இதுபின் நரகரி என்று திரிந்தது.  வ> க திரிபு,

இவண் அதிகமிருப்பதால் தளர்ச்சி உண்டாக்காமல் இத்துடன் நிறுத்திப் பின்னொருநாள் தொடர்வோம். (பின்னூட்டம் மூலம் கேட்டுக்கொண்டாலன்றி,  ஒரே தொடர் சலிப்பை ஏற்படுத்தக்கூடுமாதலால் சில காலம் சென்றபின்பே அதை மீண்டும் மேற்கொள்வோம் ).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்



 






Devotion is very much alive as you see (Panguni Uthiram festival)