புதன், 16 அக்டோபர், 2019

கௌரவித்தல்

இன்று கௌரவித்தல் என்ற சொ ல்லின் அமைப்பினை ஆய்வு செய்வோம்.

முன்னா  ளாய்வுகளின்படி  இது குரு ( கற்பிப்போன்) என்னும் சொல்லினின்று வருகிறதென்பர்.  இருக்கலாம்!  முன்னோர் கூறியதை மதிப்போம், மாண்பென்று காண்போம். இது நம் கடனே ஆகும்.

ஆயினும் ஆய்வதும் அறிவுடைமையே.  இல்லையேல் இறக்கையற்ற மனிதன் ஒலிமிகைப் பறவூர்தியில் விண்ணிற் செல்வதெப்படி?

குரு  என்னும் சொல்லைப் பார்ப்போம்.

குரு என்ற சொல் அடிப்படையில் ஒலி என்று பொருள்படுவது.

குர்ர் குர்ர் என்று ஒலி எழுப்பும் சிறு பறவை குருவி ஆனது.

குர்+ வி = குருவி.  வி என்பது விகுதி.  உகரம் ஒரு சாரியை.  இடைநிலை எனினுமாம்.  (கல்> கல்வி.   வி: விகுதி).

குர் > குரங்கு.   ( குர் என்ற ஒலியெழுப்பும் விலங்கு).

இது வலித்துக் குரக்கு என்றுமாகும்.

குர்  >  குரம்  (ஒலி).

குர் >  குரல்.  (தொண்டையொலி,  வாயொலி.)

குர் >  குரைத்தல்.  (நாயொலி)

குர்> குரவை:   ஒலி.  (  ஒலியுடன்  மகளிர்  ஆடுவது).

முற்காலத்து  ஆசிரியன்மாரெல்லாம் மிகுந்த ஒலி எழுப்பியே மாணவர்க்குக்
கற்பித்தனர் என்பது அறிக.  ஆகையால் சொற்கள் இவ்வாறு எழுந்தன.

வாய்>  வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார். வாய் என்பது ஒலியுறுப்பு.

குர் >  குரவர்  =  ஆசிரியர்.

குர் என்பது உகர ஈறு பெற்றும் பெயராயிற்று..

உகர ஈறு பெற்ற வேறு சொற்கள்:

பரு,  உரு, மரு  என்பவும் பிறவும்.

குரு என்பது பின் அயலொலி  ஏற்றது.

நல்ல அறிவாளியை ஓர் ஆசிரியனுக்கு நிகராய் மதித்து அதை வெளியிடுவதே
கௌரவித்தல் எனலாம். பிற வகையின பின் வந்தவை என்பது தெளிவு. ஒப்புமைகள் பின்னர் தோன்றுவன.

அரசன் தன் பாதுகாப்பும் துணையாகும் வலிமையும் கருதி யாரையும் கவுரவிக்கலாம்.  இதில் ஒருவர் ஆசிரிய நிலைக்கு மேலெழும்பினார் என்பது
அவ்வளவு பொருத்தமானது என்று கூறுவதற்கில்லை. அவர் உண்மையில்:

கா+ உறவு + இ  = காவுறவி >  கவுரவி :  கவுரவிக்கப்பட்டார் என்பதே சரி.

முதலெழுத்துக் குறுக்கம்.
றகரத்துக்கு ரகரம்.

இத்தகு திரிபுகள்  பற்பல நாம் முன் காட்டியுள்ளோம்.

அரசன் அன்னாரைக் காக்கவும் அன்னார் அரசனைக் காக்கவுமான உறவு ஏற்பட்ட நிலையே கவுரவித்தல்.

சிந்தித்து மகிழ்வீர்.


திங்கள், 14 அக்டோபர், 2019

ஜின்பிங்க் வருகையின் பின் நல்லமைதி.

இந்தியாவில் சீன அதிபர்

கவிதை.



சீன அதிபரும் இந்தியா வந்துளார்
காணச் செவிகொள மாணுறு செய்தியே
எல்லையில் கோடே துளதொரு தொல்லையும்;
ஒல்லுறு வாணிபத் தொருபக வோங்கலும்
கொல்படைத் தீவிர வாதி குறும்பொடு
பல்பொருள் பேச்சுக் கணிசேர் பயனே
அதிபர் அவரெனின் சீன உணவர்
புதியன தென்னாட் டுணவுமுன் வைக்கவும்
ஏற்றார் சமையலைப் போற்றினர் உண்டனர்
ஒன்றும் தயக்கமே கொள்ளுதல் இன்றியே
நன்று திசையூண் நயந்தனர் வெற்றியே
மாமல்லை வந்த மணிபொங்கு  மன்னவர்க்குத்
தஞ்சையின் கோழிக் கறியும் இறைச்சியும்
நண்டும் நனிபல பக்கக் கறிகளொடு
விஞ்சும் சுவைத்தே விழுஅடைக் காய்ச்சி
விருந்திற் கொடுத்தே அருந்த அழைத்தனர்
இந்திய நாட்டின் இனியவர் மோடி
உணவும் உரைகளும் முற்றுப் பெறவே
இணையில் தலைவர்நம் சின்பெங்கும் சென்றுளார்
வானிடை ஏறியே சீனமும் நோக்கியே
மாணமைதி ஞாலம் பெறும்.

அரும்பொருள்:


எல்லையில் கோடே து --- சீன இந்திய எல்லையில் எல்லைக்கோடுகள்
வரையறை செய்யப்படவில்லை இன்னும்.

உளதொரு தொல்லையும்  -   அதனால் புரிந்துணர்வுகள் வேறுபட்டுத் தொல்லைகள் உள்ளன. இது நிலைமை.

ஒல்லுறு  -   நடைபெறுகின்ற

 ஒரு பகவு    ஓங்கலும்  -    ஒரு நாட்டின் பக்கம்  வர்த்தகம் சாதகமாயிருப்பதும்

உணவர் -   பழக்கமான உணவு கொள்பவர். 

விஞ்சும் -  மிகுதியாகும்.

அடைக்காய்ச்சி  -  அடைப்பிரதமம்

மாணமைதி  -   சிறந்த அமைதி.

ஞாலம் - உலகம்.





திருத்தம் பின்



சனி, 12 அக்டோபர், 2019

0னகர ணகரப் பரிமாற்றுகள்.

செந்தமிழ்ச் சொல்வடிவம் உடையன  ஒன்று மூன்று என்ற சொல்வடிவங்கள்.

மூன்+ து =  மூன்று.
ஒன்+ து  =  ஒன்று.

ஒன்  என்ற ஒன்றைக் குறிக்கும் சொல்வடிவம்  மூலவடிவம் அன்று. அதனின் மூத்த வடிவமும் முதல் வடிவமும் " ஒல்"  என்பதே. ஒடு, ஒட்டு, ஒற்று, ஒற்றை. ஓடு என்று ஒல்-ஒன் என்பவற்றில் உறவும் பிறப்பும் உடையன பலவாம்.  அகல உடம்பின் வெளிக்கோடுகள்  உள்நெருங்கி ஒன்றுபடு நெறியிற் சென்றிருக்க நடமாடும் மனிதனே ஒல்லியான மனிதன். இப்படி யாம்
விரி-வரிப்பது  (>> விவரிப்பது)* முயன்று  வாசிக்கப்2     புரிந்துகொள்ளக்கூடியதே.

இன்னும் ( ஒல் >ஒர்>) ஒரு என்பதும் உள்ளது.

எனவே:

ஒல் +து =  ஒன்று
மூல் +  து  =  மூன்று.


மேல் யாம்  உரைத்தன ஒரு முன்னுரையே.

உங்கள் கவனத்துக்கு:

ஒன்று  என்பது   ஒன்னு,  ஒண்ணு என்று  திரியும். 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

மூன்று என்பது  மூனு,  மூணு என்று  திரியும்.  இங்கும் 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

0னகர ணகரப் பரிமாற்றுகள் பற்றி விவரிக்கையில் இத்தகு திரிபுகளையும் முன்னிருத்திக் கொள்க.


அடிக்குறிப்புகள்

*விவரித்தல் என்பது  விரி-வரித்தல் என்பதன் மரூஉ.
2 வாய்> வாயித்தல் > வாசித்தல்.  ய>ச